ஒரு சொல் கேளீரோ! – 11: அரவிந்தன்
சில சொற்களைப் பிரித்து எழுதினால் ஒரு பொருள் தரும், சேர்த்து எழுதினால் வேறொரு பொருள் தரும்.
எடுத்துக்காட்டு: ஒரு நாள், ஒரு வேளை, அந்த நாள்…
அந்த வேலையை முடிக்க ஒரு நாள் போதும்.
என்னுடைய அம்மா ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டுவருகிறார்.
சித்தப்பா வீட்டுக்கு வந்த அந்த நாள் இன்னமும் என் மனதில் பசுமையாக இருக்கிறது.
மேலே உள்ள வாக்கியங்களில் உள்ள ஒரு, அந்த ஆகிய சொற்கள் தம் இயல்பான பொருளில் பயன்படுவதைக் கவனியுங்கள். இப்போது இந்த எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்:
ஒருநாள் நான் இந்த நிறுவனத்தின் தலைமைப் பதவியைப் பெறுவேன்.
அடுத்த மாதத்தில் ஒருநாள் உங்கள் வீட்டுக்கு வருவேன்.
சார்லஸைக் காணவில்லை. ஒருவேளை அவர் வீட்டுக்குக் கிளம்பியிருப்பாரோ?
ஃபாத்திமா எதுவும் கருத்துக் கூறவில்லை. ஒருவேளை அவளுக்கு விஷயமே தெரியாதோ?
தாத்தா அந்தநாள் நினைவுகளில் மூழ்கிப்போனார்.
மேலே உள்ள வாக்கியங்களில் ஒரு, அந்த என்பவை வேறு பொருளில் வருகின்றன.
முதல் வாக்கியத்தில் ஒருநாள் என்பது நிச்சயமற்ற காலத்தைக் குறிக்கிறது.
அடுத்த வாக்கியத்திலும் ஒரு என்னும் பொருளை அச்சொல் தரவில்லை. குறிப்பாகச் சொல்ல முடியாத காலத்தைக் குறிக்க ஒருநாள் பயன்படுகிறது.
மூன்றாவது, நான்காவது வாக்கியங்களில் ஒருவேளை என்பது ஐயத்தைக் குறிக்கும் யூகச் சொல்லாகப் பயன்படுகிறது.
கடைசி வாக்கியத்தில் பழைய காலம், கடந்த காலம் ஆகியவற்றை அந்தநாள் குறிக்கிறது.
ஒரு சொல் இன்னொரு சொல்லுடன் சேரும்போது அதன் பொருள் மாறினால் அதைச் சேர்த்து எழுத வேண்டும்.
**இரண்டும் சரி**
நீர்க்கடன், புகைச்சுவர், மரக்கிளை, மழைக்காடு ஆகிய சொற்களைச் சேர்த்தாலும் பிரித்தாலும் பொருள் மாறாது. இலக்கணப்படி இவற்றைப் பிரித்து எழுத வேண்டும். ஆனால் இவை சிறிய சொற்களாக இருப்பதால் சேர்த்தே எழுதலாம்.
குடியிருப்புப் பகுதி, முதல் வகுப்புப் பெட்டி முதலானவை தனிப் பொருள் தரும் தனிச் சொற்களாக இருப்பதால் இலக்கணப்படி இவற்றைப் பிரித்தே எழுத வேண்டும். இவற்றைச் சேர்த்தாலும் பொருள் குழப்பம் வராது என்றாலும், இயல்பாகவே இரு சொற்கள் என்பதாலும், இணைத்தால் பெரிய சொல்லாகிவிடுவதாலும் பிரித்து எழுதுவதே பொருத்தமானது.
தீச்சட்டி, தீப்பொறி, தீக்கதிர், பூச்செடி, பூக்கூடை ஆகிய சொற்களைச் சேர்த்தே எழுதலாம்.
நேற்றுமுதல் இன்றுவரை – முதல், வரை ஆகியவற்றின் பொருள்கள் இங்கே மாறிவருகின்றன. எனவே இவற்றைச் சேர்த்து எழுத வேண்டும்.
பார்த்துக்கொண்டிருந்தபோது – பார்த்துக் கொண்டு இருந்த போது என நான்கு கூறுகள் இச்சொல்லில் இருக்கின்றன. ஆனால் இவற்றைப் பிரித்து எழுதக் கூடாது.
பார்த்துக்கொண்டு – ‘கொண்டு’ இங்கே துணை வினை. ஆகவே பிரிக்கக் கூடாது. ‘போது’ என்பது முன்னால் வரும் சொல்லுக்குத் துணையாக நிற்கிறது. எனவே பிரிக்கக் கூடாது.
எனவே, பார்த்துக்கொண்டிருந்தபோது என்றே எழுத வேண்டும். இந்தச் சொல்லுடன் ‘தான்’ சேர்ந்து பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் என ஆனாலும் அதையும் பிரிக்கக் கூடாது. ‘தான்’ என்பதைப் பிரித்தால் ‘நான்’ என்னும் பொருள் வரும்.
ஆனால், இவ்வளவு நீளமான சொல் சில சமயம் பக்க வடிவமைப்பிற்குள் பொருந்தாது. வரிகள் பிரிய வேண்டியிருக்கும். அந்நிலையில் பொருத்தமான இடத்தில் உடைத்துக்கொள்ளலாம். பார்த்துக்-கொண்டிருந்த-போது இப்படி உடைக்கலாம். வடிவமைப்பு / வரி உடைப்புப் பிரச்சினை இல்லையென்றால் பிரிக்க வேண்டாம்.
**எப்போதும் பிரித்து எழுத வேண்டியவை**
கூடாது, வேண்டும், முடியாது, மாட்டாது, மாட்டார் ஆகிய சொற்கள் எப்போதும் பொருள் மாற்றம் அடைவதில்லை. எனவே இவற்றைத் தனிச் சொற்களாகப் பிரித்து எழுத வேண்டும்.
கொண்டு என்பது துணை வினையாக வரும்போது சேர்த்து எழுத வேண்டும். Have, posses என்னும் பொருளில் வரும்போது பிரித்துத் தனி வினையாக எழுத வேண்டும்.
அவர் தனக்கென ஒரு இடத்தைக் கொண்டிருந்தார்.
அவர் அலாதியான கருத்தைக் கொண்டிருக்கிறார்.
நான் சொல்லும் யோசனை பிடித்திருந்தால் கொள்ளுங்கள், இல்லையேல் தள்ளிவிடுங்கள்.
**நினைவில் கொள்க:**
ஒரு சொல் தன் இயல்பான பொருளைத் தந்தால் அதைப் பிரித்துத் தனியே எழுத வேண்டும். இன்னொரு சொல்லுடன் (முன்னாலோ, பின்னாலோ) சேர்ந்து வேறொரு பொருளைத் தந்தால் அதைச் சேர்த்து எழுத வேண்டும். சேர்த்து எழுத வேண்டியதைப் பிரித்தாலோ, பிரிக்க வேண்டியதைச் சேர்த்தாலோ பொருள் குழப்பம் ஏற்படும் என்பதால் இதில் கவனம் தேவை.
(தொடரின் அடுத்த பகுதி வரும் புதனன்று)
[தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்](https://minnambalam.com/k/2019/05/03/23)
[மொழியில் இருக்க வேண்டிய நெகிழ்வு!](https://minnambalam.com/k/2019/05/05/15?fbclid=IwAR1X6OfBmGxaOj5I1JZ3F7DpASWVI4_tq1JGbDUbT8zVBqT9sFIkG3Iq9vA)
[ஒருமை – பன்மை மயக்கம் எப்படி ஏற்படுகிறது?](https://minnambalam.com/k/2019/05/08/15)
[ஒருமை – பன்மை: மேலும் சில விதிகள்!](https://minnambalam.com/k/2019/05/10/18?fbclid=IwAR28FXHq0ntYuLz75awN-C4HJaQ61L9AazWfXhyJeZDPgVAYdV83XchJdeE)
[இது யாருடைய செய்வினை?](https://minnambalam.com/k/2019/05/13/47?fbclid=IwAR3l9uW8jS59Nnvdtq6qOfiioLHhUFEfeiD8XvzFrJLg80q0HHtKBgRDPhA)
[சொன்னது சொன்னபடி](https://minnambalam.com/k/2019/05/15/17)
[எதற்கு இத்தனை கேள்விக் குறிகள்?!](https://minnambalam.com/k/2019/05/17/14)
[பொருள் தரும் பின்னொட்டுக்கள்](https://minnambalam.com/k/2019/05/20/4)
[சேரிடம் அறிந்து சேர்](https://minnambalam.com/k/2019/05/22/16?fbclid=IwAR1f4gt8XvMSboA4SkuT8nOY8RbWdcg1tVdFmiO_frjAm8BTy17lCF9soGg)
[சொற்களின் பிரிவும் இணைவும்](https://minnambalam.com/k/2019/05/24/8)
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)
**
.
**
[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)
**
.
**
[இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/05/26/32)
**
.
**
[திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தி!](https://minnambalam.com/k/2019/05/26/41)
**
.
**
[வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்](https://minnambalam.com/k/2019/05/26/35)
**
.
.
�,”