ஸ்பெல்லிங் மிஸ்டேக்கால் தப்பித்த பாலியல் குற்றவாளி!

Published On:

| By Balaji

ஸ்பெல்லிங் மிஸ்டேக்கால் பாலியல் வழக்கிலிருந்து தப்பித்த குற்றவாளியின் விடுதலையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.பிரகாஷ் என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு இரண்டரை வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். குழந்தையை தனியாக வீட்டில் விட்டு விட்டு கடைக்கு சென்ற குழந்தையின் தாய் திரும்பி வருகையில் குழந்தை அழுது கொண்டிருந்தது.

அப்போது குழந்தையின் உடலை சோதனையிட்ட தாய், குழந்தையின் பிறப்புறுப்பில் வெள்ளை திரவம் போன்று இருந்ததை கவனித்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து குழந்தையின் தாய் வடுவூர் காவல் நிலையத்தில் தனது பக்கத்துவீட்டுக்காரர் பிரகாஷ் என்பவர் மீது புகார் அளித்துள்ளார். இதுகுறித்த வழக்கு மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. தாமதமாக புகார் அளிக்கப்பட்டதாகவும், குற்றத்திற்கான ஆதாரங்கள் சரியாக இல்லை என்றும், குழந்தையின் பிறப்புறுப்பில் செம்மண் மட்டுமே படிந்திருந்தது என்று கூறி 2018ஆம் ஆண்டு பிரகாஷை விடுதலை செய்தது போக்சோ நீதிமன்றம்.

இந்த தீர்ப்பை எதிர்த்து குழந்தையின் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், காவல்துறையின் குற்றப்பத்திரிகையில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருப்பதை கண்டுபிடித்தார்.

விந்து என்பதைக் குறிக்க ஆங்கிலத்தில், நீதிமன்ற பணியாளர் semen(விந்து) என்று டைப் செய்வதற்கு பதிலாக Semman(செம்மண்) என்று டைப் செய்து விட்டார். குழந்தையின் பிறப்புறுப்பில் செம்மண் இருந்ததை வைத்து, இவர்தான் பாலியல் வன்கொடுமை செய்ததாக எப்படி கூற முடியும் என்று குற்றவாளி தரப்பு வழக்கறிஞர் வாதாடியுள்ளார். அதன்மூலம் விடுதலையும் பெற்றுள்ளார்.

இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர் உடனடியாக தொடர்பு கொள்ள முடியாத ஒரு குழந்தையாகவும், தாய் கல்வியறிவு அற்றவராகவும் உள்ளனர். இது போன்ற வழக்குகளில் வழக்குளை முறையாக பதியவும், தீர விசாரிக்கவும் வேண்டும். பாதிக்கப்பட்டவரின் தாய், குறிப்பாக கிராமப்புறத்தில் வசிக்கும் படிப்பறிவற்ற ஒரு பெண், இதுபோன்ற வழக்குகளில் அவர்கள் உடனடியாக காவல்துறைக்குச் செல்லமாட்டார்கள். இதுபோன்ற புகார்களில் கால தாமதத்தை காரணம் காட்டி குற்றவாளியை விடுதலை செய்வதை ஏற்க முடியாது.

இதில் குழந்தைக்கு அடுத்து முக்கிய சாட்சி அவரது தாய். அவர் இது பாலியல் வன்கொடுமை என்கிறார். டாக்டரும் அதை உறுதி செய்துள்ளார். விந்து என்பதற்குப் பதில் செம்மண் என்று குறிப்பிட்டதால் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலையாகியுள்ளார். இதை கீழமை நீதிமன்றம் முழுமையாக ஆய்வு செய்து விசாரித்து தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும்.

எனவே, இந்த வழக்கில் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியாகி இருப்பதால், பிரகாஷை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

குற்றவாளி பிரகாஷுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்த நீதிபதி வேல்முருகன் சிறுமிக்கு ரூ .1 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share