fஉதயசூரியனை முடக்க மறுத்த டி.என். சேஷன்

Published On:

| By Balaji

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணைய டி.என்.சேஷன் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவம்பர் 11) இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் செய்தியில், “முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையரும், ஓய்வு பெற்ற மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரியுமான டி.என்.சேஷன் உடல்நலக் குறைவால் 10.11.2019 அன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

சேஷன் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். இவர் தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றிய காலகட்டத்தில், தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தவர் என்ற பெருமைக்குரியவர். தமிழ்நாடு அரசின் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்தவர். சேஷன் சிறந்த நிர்வாகியாகவும் கடின உழைப்பாளியாகவும், அனைவரிடமும் அன்பாகப் பழகும் தன்மையுடையவராகவும் திகழ்ந்தார்.

இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சேஷனை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று குறிப்பிட்டுள்ளார் முதல்வர்.

பிறந்தது கேரளாவாக இருந்தாலும் 1955 ஆம் வருடத்திய தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்ச்சி பெற்ற டி.என்.சேஷன் 1965-67 ஆண்டுகள் ஒன்றுபட்ட மதுரை கலெக்டராக பதவி வகித்தார். அப்போது இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமாக இருந்த நிலையில், போராட்டக் காரர்களுடன் கடுமையாக நடந்துகொண்டார் என்று சேஷன் மீது புகார்கள் எழுந்தன.

1977 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதலவராக முதல் முறைப் பொறுப்பேற்றபோது தமிழக அரசின் தொழில் துறைச் செயலாளர், வேளாண் துறைச் செயலாளர் போன்ற முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் சேஷன். அப்போது சேஷனின் நடவடிக்கைகள் முதல்வர் எம்ஜிஆருக்கு பிடிக்காததால் மத்தியப் பொறுப்புக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு சென்றார் சேஷன்.

மத்திய அரசில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர், செயலாளர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் பின்னர் அமைச்சரவை செயலாளர் உட்பட பல பதவிகளை வகித்தார். சந்திரசேகர் பிரதமராக இருந்த போதுதான் சேஷன் 1990 ஆம் ஆண்டு தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

1993 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து 15க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்களுடன் வைகோ பிரிந்து சென்று மதிமுக என்ற தனிக்கட்சியை உருவாக்கினார். அப்போது தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராகவும், மத்தியில் அதிமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் பிரதமராக நரசிம்மராவும் இருந்தனர்.

திமுகவில் ஏற்பட்ட இந்த பிளவை அடிப்படையாக வைத்துக் கொண்டு அக்கட்சியின் சின்னமான உதயசூரியனை முடக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சேஷனுக்கு அப்போது கடுமையான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. ஆனால் 2017 இல் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டதைப் போல அப்போது சேஷன் நெருக்கடிகளுக்கு பணிந்து உதயசூரியன் சின்னத்தை முடக்கவில்லை. சேஷன் மீது கருத்துவேறுபாடு கொண்ட திமுகவினர் கூட இந்த விஷயத்துக்காக அவரை நினைவு கூர்கின்றனர்.

டி.என். சேஷன் தனது கடைசிக் காலத்தில் முதியோர் இல்லத்தில் இருப்பதாக சில செய்திகள் உலவிக் கொண்டிருந்தன. ஆனால், பணி ஓய்வுக்குப் பின் தனது மனைவி விஜயலட்சுமியோடு சென்னையில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு சேஷனின் மனைவி காலமானார். சேஷனுக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், மனைவியின் பிரிவுக்குப் பின் உறவினர்களோடு சென்னை செயிண்ட் மேரிஸ் சாலையில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த சேஷன், மூப்பு காரணமாக நேற்று காலமானார்.

சேஷன் என்ற வடமொழிச் சொல்லுக்கு பாம்பு என்று பொருள். அதற்கேற்றமாதிரி தலைமைத் தேர்தல் ஆணையர் என்ற பதவியில் இருந்துகொண்டு, தேர்தல் விதிமீறல்களுக்கு எதிராக பாம்பாக சீறியவர் சேஷன்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share