-நிலவளம் கு.கதிரவன்
தமிழகத்தில் திரௌபதி என்கிற திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி, ரஜினியின் தர்பார் படத்திற்கு இணையாக இணையவாசிகளால் பார்க்கப்பட்டு, அத்திரைப்படம் தொடர்பாக பல சர்ச்சைகளும், விவாதங்களும் எழுந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில், திரௌபதி படக் குழுவினர் அதன் இயக்குநர் மோகன்.ஜி தலைமையில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கு அருகே உள்ள மேலச்சேரி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில், திரைப்படத்தின் ஆவணங்களை வைத்து சிறப்பு பூஜை செய்துள்ளனர்.
இவர்கள் ஏன் செஞ்சிக்கு அருகே உள்ள திரௌபதி அம்மன் கோயிலுக்கு வர வேண்டும்? அப்படி என்ன அக்கோயிலுக்கு முக்கியத்துவம்? மின்னம்பலத்தில் ஏற்கனவே திரௌபதி வழிபாடு பற்றி ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. பல்வேறு வரலாற்றுத் தகவல்களும், அம் மண் சார்ந்த திரௌபதி வழிபாட்டு மரபுகளும், அம் மக்களோடு திரௌபதி ஒரு குறியீடாக எப்படி மாறிப் போனாள் என்கின்ற வியப்புக்குரிய தகவல்களும் நமக்கு கிடைக்கின்றன.
ஒரு சினிமாவை பற்றிய குறிப்பை நுழைவாயிலாக வைத்துக் கொண்டு ஒரு சரித்திரத்தின் காலச் சுழற்சியை பார்க்கும் வாய்ப்பு நமக்கு நேரிடுகிறது.
தமிழகத்தின் தொண்டை மண்டலப் பகுதிகள் என அழைக்கப்படும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை போன்ற வட மாவட்டங்களில் திரௌபதி அம்மன் வழிபாடு முக்கிய வழிபாட்டு முறைகளில் ஒன்றாக உள்ளது. தொல் தமிழ்க் குடியின் தாய் தெய்வ வழிபாட்டு முறையின் நீட்சியாகவே திரௌபதி வழிபாடு பார்க்கப்படுகிறது. திரௌபதிக்கான தனிக் கோயில்களும் வட தமிழகத்தில் மட்டுமே மிகுதியாக உள்ளன.
தொண்டை மண்டலப் பகுதியில் கி.பி.7-ஆம் நூற்றாண்டிற்கு முன் சமண சமயமும், பௌத்த சமயமும் தலைமையிடமாகக் கொண்டு பக்தி நிலையை உருவாக்கி மக்களிடத்தில் பெரும்பான்மை பெற்று திகழ்ந்து விளங்கியது. கி.பி.7-ஆம் நூற்றாண்டிற்குப் பின் பக்தி இலக்கிய நிலை உருவாகி சைவம், வைணவம் மக்களிடத்தில் சிறப்பு பெற்று விளங்கத் தொடங்கியது.
கி.பி.7-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரையில் பல்லவர் ஆட்சி தொண்டை மண்டலத்தில் நிலவியிருந்தது. அப்போது பல்லவ மன்னர்கள் மீது வேற்று நாட்டு மன்னர்கள் குறிப்பாக சாளுக்கிய மன்னர்களான முதலாம் புலிகேசி, இரண்டாம் புலிகேசி, இரண்டாம் புலிகேசியின் மகனான விக்கிரமாதித்தன் ஆகியோர் படையெடுத்து வந்துள்ளனர். பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலம் தொடங்கி பல்லவ மன்னன் பரமேஸ்வரன் காலம் வரையில் நீண்ட போர்கள் நடைபெற்றன.
பரம்பரை பரம்பரையாக நடைபெற்று வருகின்ற போர்களுக்கு முடிவுகட்ட வேண்டும் என்றும், அந்த முடிவு, போரில் தான் நிரந்தரமாக வெற்றி பெறுவதன் மூலம் ஏற்பட வேண்டுமென்றும் பல்லவ மன்னன் பரமேஸ்வரன் கருதினான். அதற்காகவே தனது பகுதியில் பாரதக் கதைகள் நாள்தோறும் படிக்கும்படியும், கூறும்படியும் செய்தான். மக்களிடம் போர் வேட்கையை தூண்டுவதற்கு பாரதக் கதையை கூத்தின் மூலம் பரப்ப நினைத்து கூத்து நடத்துவதெற்கென்று கோவில் ஒன்றைக் கட்ட எண்ணினான். அது திரௌபதி கோயிலாக இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று கருதினான். அதன் காரணமாகத் தோன்றியதுதான் திரௌபதி அம்மன் கோயில்கள். இதன் காரணமாக அப்பகுதி மக்களிடத்தில் இயற்கையாகவே வெற்றியின் குணம் கொண்ட வெற்றியின் தெய்வமாக திரௌபதி காணப்படுகிறாள்.
தென்னிந்தியாவின் முதல் திரௌபதி அம்மன் கோயில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அருகே உள்ள மேலச்சேரி கிராமத்தில் உள்ள கோயில்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள். இக்கிராமத்தில் பல்லவர் காலத்திய குடைவரைக் கோயில் பிரசித்தம். திரௌபதி அம்மன் வழிபாட்டின் தோற்றம் மற்றும் அதன் பரவலுக்கு முக்கியக் காரணமாக இருந்தது செஞ்சியை ஆண்ட அரசுகள்தான்.
செஞ்சியை மையப்படுத்தி உருவான திரௌபதி தொன்மத்தின் தனித் தன்மையை நிறுவியதில் அடைக்கல பாரதியார், ஆதிகேசவ பாரதியார் முதலிய பாட்டு வாத்தியார்களின் பங்கு முக்கியமானதாகும் . மேலும் மேலச்சேரி திரௌபதி வழிபாட்டிலிருந்து குருஷேத்திரம் வரையிலான திரௌபதி பண்பாட்டு தொன்மத்தை ஆய்வு செய்தவர் ஆல்ப்ஹில்த்மெய்தல் என்கிற ஆய்வறிஞர் ஆவார். இவர் எழுதிய The Cult of Draupadi, Mythologies: From Gingee To Kurukestra நூலில், தமிழகத்தில் பல்லவர் ஆட்சிக் காலத்தில் பாரதக் கதை வெகுவாகப் பரவியதன் விளைபொருளாக திரௌபதி வழிபாடு பரவலானது, என்கிறார்.
மேலும் செஞ்சிக்கு அருகேயுள்ள மேலச்சேரியைத் தென்னிந்தியாவின் திரௌபதி வழிபாடு உருவாவதன் துவக்கப் புள்ளியாக நிறுவுவதுடன், தமிழகத்தில் காணப்படுகிற திரௌபதி வழிபாடு தனக்கென ஒரு தொன்மத்தை உருவாக்கியிருப்பதாகவும், அந்தத் தொன்மம் செஞ்சியை மையமாகக் கொண்ட அரசுகளின் வரலாற்றோடு இணைந்ததாகவும் உள்ளது என்கிறார் அவர்.
மேலும் வேறெங்கு திரௌபதிக்கு கோயில் கட்ட நினைத்தாலும், மேலச்சேரி திரௌபதி அம்மன் ஆலயத்திற்கு வந்து பிடிமண் எடுத்துச் சென்று பூஜை செய்து கோயில் பணிகளை ஆரம்பிப்பது வழக்கமாக உள்ளது என்கின்றனர்.
வட தமிழகத்தில் வசிக்கும் குறிப்பிட்ட பிரிவினர் (வன்னிய சமுதாயத்தினர்) தங்களின் குறியீடாகவே திரௌபதி வழிபாட்டை வைத்துள்ளனர் என்று கூறுகிறார் பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக் கழக மானுடவியல் துறைத் தலைவர் ஆ.செல்லபெருமாள். இதற்கு காரணம் திரௌபதி தீ –யில் பிறந்தவள் என்கிற நம்பிக்கையாகும். வட தமிழகத்தின் பெரும்பான்மையான திரௌபதி கோயில்களில் இவர்களே பூசாரிகளாக உள்ளனர். வட தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் திரௌபதிக்கு கோயில் உண்டு. இதன் நீட்சியாக தென் தமிழகத்தின் பாளையங்கோட்டை வரை திரௌபதிக்கு தனிக் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. மேலும் தமிழர்கள் எப்பொழுதுமே மண் சார்ந்து சிந்திப்பவர்கள். வடக்கே காசி, மதுரா என்றால் தெற்கே குறிப்பாக மதுரை, தென்காசி என்று ஊர்களை நிர்மாணித்தவர்கள். அதே போல் திரௌபதி வடக்கே தோன்றியவள் என்றாலும், தெற்கே செஞ்சி மேலச்சேரியில் திரௌபதிக்கு தனிக் கோயில் கட்டி, அதை தங்களது மண் சார்ந்த கலாச்சாரமாக, வாழ்வியல் கூறுகளாக மாற்றிக் கொண்டவர்கள் நமது மக்கள்.
பல்லவர்கள் காலத்தில் பாரதக் கதை படிப்போருக்கும், கூறுவோருக்கும் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன. தொடர்ந்து சோழர்கள் ஆட்சிக் காலத்திலும் நில மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு அருகில் கருங்குழி என்ற ஊரில், அவ்வூர் மக்கள் 8 ஏக்கர் நிலத்து வருவாயைப் பாரதக் கூத்து நடத்துவதற்கு மானியமாக வழங்கி வருகிறார்கள். இது கூத்திரு மானியம், கூத்தியர் மானியம் என்றும் அழைக்கப்படுகிறது.
இத்தகைய வரலாற்றுப் பின்னலோடும், மகா பாரதக் தெருக் கூத்து, திரௌபதி வழிபாடு போன்ற கலாச்சார பின்னணிகளோடும் வாழ்ந்து வரும் மக்களின் தாய் தெய்வமான திரௌபதிக்கும், திரைப்படமாக வரவிருக்கும் திரௌபதிக்கும் என்ன சம்பந்தம், அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பது திரைப்படம் வெளியாகும்போது தெரிந்துவிடும்.
**கட்டுரையாளர் குறிப்பு**
கு.கதிரவன், செஞ்சியைச் சேர்ந்த எழுத்தாளர், நாட்டுப்புறக் கலைஞர். செஞ்சி திருக்குறள் பேரவை, தமிழியக்கம் போன்ற அமைப்புகளில் தீவிரமாக இயங்கி வருகிறார். கர்நாடக இசை அடிப்படையிலான தெருக் கூத்து நிகழ்த்துதலில் நான்கு தலைமுறைகளாக ஈடுபட்டு வரும் குழுவின் நிகழ்த்துக் கலைஞர்
�,”