தொழிற்சாலைகளில் 20% மின் கட்டணமே வசூலிக்க வேண்டும்: நீதிமன்றம்!

Published On:

| By Balaji

ஊரடங்கு முடியும் வரை உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் குறைந்தபட்ச மின் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று மின் பகிர்மான கழகத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 3 மாதங்கள் தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டன. மீண்டும் மத்திய மாநில அரசுகள் அளித்த தளர்வுகளின் அடிப்படையில், தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கின. இதனிடையே ஊரடங்கு காலத்துக்கு 90 சதவிகித மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று தொழிற்சாலைகளுக்கு மின் வாரியம் உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து, தென்னிந்திய ஸ்பின்னிங் மில் அசோசியேசன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தொழிற்சாலைகள் 3 மாதங்களாக இயங்காததால் பொருளாதார ரீதியில் அனைத்து நிதி நடவடிக்கைகளும் முடங்கிப்போய் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுபோன்று உயர் மின் அழுத்தம் பயன்படுத்தக்கூடிய மற்ற தொழில் நிறுவனங்கள் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், உயர் அழுத்த மின் கட்டணத்தை முழுமையாகச் செலுத்த வேண்டும் என்று மின் வாரியம் நிர்ப்பந்திப்பதாகவும், இதற்குத் தடை விதித்து குறைந்தபட்ச உயர் மின் அழுத்தத்திற்கான கட்டணத்தில் 20 சதவிகிதம் மட்டும் செலுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தன.

இந்த மனு இன்று (ஆகஸ்ட் 14) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊரடங்கு காலத்தில் 90 சதவிகித மின் கட்டணத்தைச் செலுத்தும்படி தொழிற்சாலைகளுக்கு மின்வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, உயர் அழுத்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் ஸ்பின்னிங் மில் ஆலைகள் மற்றும் வழக்கு தொடர்ந்துள்ள மற்ற தொழில் நிறுவனங்களிடமிருந்து 20 சதவிகித மின் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், அதனை வரும் காலங்களில் செலுத்தப்படவுள்ள மின் கட்டணத்தில் சரிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஊரடங்கு முடியும் வரை இந்த உத்தரவு பொருந்தும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

**-கவிபிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share