கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் பணிக்காக தலைமைச் செயலகம் மூடப்படுகிறது.
தமிழக அரசாங்கத்தின் தலைமைச் செயலகம் கோட்டை வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இயங்கி வருகிறது. 11 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில்தான் தமிழக அரசின் பல்வேறு துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை நாள்தோறும் தலைமைச் செயலகம் வந்துதான் தங்களது பணிகளை ஆரம்பிக்கின்றனர்.
சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்திருப்பது தெரியவந்தது. தொழில்துறைச் செயலாளர் முருகானந்தம் தனது அலுவலகத்தில் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொழில் துறைச் செயலாளரின் அலுவலகத்தை மூடியிருக்கிறார்கள்.இதுதொடர்பாக [கோட்டையை உலுக்கும் கொரோனா](https://minnambalam.com/public/2020/06/08/73/corona-panic-in%20-chief-secaratriate-namakkal-kavingar-maligai) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் தமிழக அரசு இன்று (ஜூன் 12) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஊரடங்கு காலத்தில் பணியிடங்கள் மற்றும் அலுவலகங்களில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
மேலும், மாதத்தின் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அலுவலகங்களை சுத்தம் செய்வதற்காக மூட வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சுகாதார மற்றும் கிருமி நீக்கப் பணிகளுக்காக ஜூன் 13, 14 ஆகிய இரண்டு நாட்கள் ஒட்டுமொத்த தலைமைச் செயலகமும் மூடப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.
அனைத்து அலுவலகங்கள், அறைகள், அரங்கங்களின் சாவிகளையும் தலைமைச் செயலகத்தின் மெயின் கட்டிடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
**எழில்**�,