குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட கோவை பாரதியார் பல்கலைக் கழக மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், மாநிலக் கல்லூரி, மற்றும் கோவை, திருச்சி ஆகிய பகுதிகளில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் இன்று 36ஆவது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதற்காக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் வருகை தரவுள்ள நிலையில், பல்கலை வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தைக் கைவிட மாணவர்கள் மறுத்ததால் மாணவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று போலீஸ் வேனில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் பல்கலை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபோன்று , பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறும் வரை தங்களது போராட்டங்கள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் வருகையையொட்டி கோவையில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
�,”