ஜாமீன் கிடைத்தும் வெளியே வர முடியாத சிவசங்கர் பாபா

Published On:

| By Balaji

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபாவிற்கு இரண்டாவது போக்சோ வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்ததைத் தொடர்ந்து டெல்லியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவர் மீது பெறப்பட்ட புகார்களின் பேரில் அவர் மீது போக்சோ சட்டத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளிலிருந்து ஜாமீன் வழங்கக் கோரி சிவசங்கர் பாபா சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில் குற்ற எண் 2 மற்றும் 3 ஆகிய வழக்குகளில் சிவசங்கர் பாபாவுக்கு செங்கல்பட்டு சிறப்பு போக்சோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சிவசங்கர் பாபா மீதான முதல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அந்த ஜாமீன் மனு இன்னும் நிலுவையில் உள்ளது.

இரண்டு வழக்குகளில் ஜாமீன் கிடைத்தாலும், ஒரு வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் சிவசங்கர் பாபாவால் வெளியே வரமுடியவில்லை. அதனால், அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share