கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்றால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிய நிலையில் விமானச் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கொரோனாவுக்கு எதிராக நமது கையில் கிடைத்த ஒரே ஆயுதம் தடுப்பூசி என்பதால், அனைவரையும் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள இந்திய அரசு வலியுறுத்தி வருகிறது. கொரோனா காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது வலுவாக மீண்டு வருகிறது. இந்த நிலையில் மங்களூரு விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் உள்நாட்டில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இரண்டு வருடங்களாக விமானச் சேவைகள் முடக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மங்களூரு விமான நிலையத்தில் கடந்த மே மாதத்தில் மட்டும் 1.67 லட்சம் பேர் விமானச் சேவையைப் பயன்படுத்தி உள்ளனர். இது கொரோனா காலத்துக்குப் பின் விமானப் பயணிகளின் எண்ணிக்கையில் புதிய உச்சம் ஆகும். கடந்த ஏப்ரல் மாதத்தில் பயணிகள் வருகை 1.46 லட்சமாக இருந்த நிலையில், மே மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை 1.67 லட்சமாக உயர்ந்தது. கடந்த மே மாதத்தில் மட்டும் மங்களூரு விமான நிலையத்திலிருந்து 1,313 விமானங்கள் இயக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கருத்தில்கொண்டு கூடுதல் விமானங்கள் இயக்க இருப்பதாக மங்களூரு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
.
மங்களூரு விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Published On:
| By admin

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel