விஜயபாஸ்கர் – உம்மன் சாண்டி: குழந்தைக்காகப் பறந்த ஆம்புலன்ஸ்!

Published On:

| By Balaji

கேரளாவில் பிறந்த குழந்தைக்கு அவசரமாக அறுவை சிகிச்சை தேவைப்பட்டதால் கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் வேண்டுதலுக்கு தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் உதவி செய்திருக்கிறார்.

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம் அடூர் நகரைச் சேர்ந்தவர் ஜார்ஜ். இவரின் மனைவி டீனா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த டீனா பிரசவத்துக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த எட்டு நாள்களுக்குமுன் அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு முதுகுத் தண்டில் கோளாறு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

‘உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால், இந்தப் பிரச்சினையைச் சரிசெய்து விடலாம். இல்லையெனில், குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும். அதற்கான மருத்துவ வசதிகள், வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில்தான் உள்ளது. அங்கு செல்லவும்’ என்று அடூர் மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

கொரோனா பொது முடக்கத்தால், மாநிலம் விட்டு மாநிலம் செல்வதில் இ-பாஸ் போன்ற நடைமுறை சிக்கல் இருப்பதால், கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உதவியை நாடினர் குழந்தையின் பெற்றோர். உடனடியாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை போனில் தொடர்புகொண்டு பேசிய உம்மன் சாண்டி, சிகிச்சைக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து குழந்தையை வேலூருக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளைத் துரிதப்படுத்தினார் அமைச்சர் விஜயபாஸ்கர். ஜூலை 16 இரவு 10 மணிக்குக் குழந்தையுடன் பெற்றோர் கேரளாவிலிருந்து சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் புறப்பட்டனர். அமைச்சர் விஜயபாஸ்கரின் நேரடியான ஏற்பாட்டினால், நடுவழியில் எந்த இடத்திலும் மறிக்கப்படாமல் நேற்று முன்தினம் (ஜூலை 17) காலை 8 மணிக்கு வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது.

சுமார் 700 கிலோ மீட்டர் தூரத்தை 10 மணி நேரத்தில் கடந்துவந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மேத்யூ என்பவரை உம்மன்சாண்டி தரப்பும் அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பினரும் பாராட்டினர். சி.எம்.சி-யில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைக்கு நேற்று (ஜூலை 18) வரை அறுவை சிகிச்சை நடக்கவில்லை.

இதுகுறித்து, மருத்துவமனை தரப்பில் விசாரித்தபோது, ‘‘உம்மன்சாண்டிக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதால் விரைவாகக் கொண்டு வந்துள்ளனர். இனிமேல்தான் அறுவை சிகிச்சை செய்ய உள்ளோம்’’ என்று கூறியுள்ளனர்.

**ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share