தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு அதிக மழைப்பொழிவை தருவது வடகிழக்கு பருவமழைதான். இது வழக்கமாக ஆண்டுதோறும் அக்டோபர் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் தொடங்கும். இந்நிலையில், இந்தாண்டு அக்டோபர் 28ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றே பருவமழை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில், “தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து விலகி வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு,புதுவை, கேரளம் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகள், தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகாவில் இன்று (அக்டோபர் 25) முதல் தொடங்கியது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது.
அடுத்த இரண்டு நாள்களுக்கு தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். கனமழை பொறுத்தவரை நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர், திருப்பூர், கரூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை.
வடகிழக்கு பருவமழை இந்தாண்டு இயல்பாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழ்நாட்டில் 18 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 33 விழுக்காடு அதிகம்” என்று தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாட்டில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,