சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதில் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை – தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் ஆகிய ஐந்து ஏரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
11.75 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த ஐந்து ஏரிகள் வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் நீரை நம்பியே உள்ளது. இந்த ஏரிகளின் நீரை கொண்டு சென்னை மாநகரின் குடிநீர் தேவையை ஆண்டு முழுவதும் பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது.
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தற்போது ஒவ்வொரு மாதமும் ஒரு டிஎம்சி வரை தண்ணீர் மேற்கண்ட ஏரிகளில் இருந்து விநியோகிக்கப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கத்துக்கேற்ப இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1.50 டிஎம்சியாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், சென்னை மாநகரின் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு, குடிநீர் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் நடவடிக்கையை நீர்வளத் துறை கையில் எடுத்துள்ளது. அதன்படி நடப்பாண்டில், 3,300 டிஎம்சி கொள்ளளவு கொண்ட செங்குன்றம் ஏரியை ரூ.9.90 கோடியில் தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளை தூர்வாருவதன் மூலம் 1.9 டிஎம்சி வரை, அந்த ஏரிகளின் கொள்ளவை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 58.27 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட காட்டூர் மற்றும் தட்டமஞ்சி ஆகிய இரண்டு ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் உருவாக்கப்படுகிறது. இந்த இரண்டு ஏரிகளையும் இணைப்பதன் மூலம் 350 மில்லியன் கன அடியாக அதன் கொள்ளளவு அதிகரிக்கப்படுகிறது.
இதற்காக, ரூ.62 கோடி செலவில் புதிதாக நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை அடுத்த மாதத்துக்குள் முழுவதுமாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கொளவாய் ஏரியினை ரூ.60 கோடி செலவில் தூர்வாரி சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 330 மில்லியன் கன அடியில் இருந்து 650 மில்லியன் கன அடி வரை உயர்த்தப்படுகிறது. இதன் மூலம், சென்னை புறநகர் மற்றும் செங்கல்பட்டு மாநகரத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக நீர்வளத்துறை சார்பில் தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்புதல் கேட்டு கடிதம் எழுதியுள்ளது என்று நீர்வளத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
**-ராஜ்**