கொரியன் படமான ‘பிளைண்ட்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நயன்தாராவும் இந்தி ரீமேக்கில் சோனம் கபூரும் நடிக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு வெளியான கொரியன் படம் ‘பிளைண்ட்’. க்ரைம் த்ரில்லரான இந்தப் படத்தை ஆங் சா வூன் இயக்கினார். விபத்தில் கண்பார்வையை இழந்த பெண்ணின் கதையான இந்தப் படம் கொரியா மட்டுமின்றி உலகெங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. சீனா, ஜப்பான் ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
தமிழில் நெற்றிக்கண் எனத் தலைப்பிடப்பட்டு நயன்தாரா நடிப்பில் உருவாகிவருகிறது இந்த கொரியன் ரீமேக். ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மிலிந்த் ராவ் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், தற்போது இந்தியிலும் ரீமேக் ஆகவுள்ளது ‘பிளைண்ட்’. சோனம் கபூர் இதில் நாயகியாக நடிக்கிறார். கடைசியாக இவர் நடித்த ‘தி ஜோயா ஃபேக்டர்’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில், இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தன்னை நிரூபிக்க முடிவெடுத்துள்ளார் சோனம் கபூர்.
இதுகுறித்து பாலிவுட் ஊடகங்களில் தெரிவித்த சோனம் கபூர், “நான் இதுவரை ஆக்ஷன், ஹாரர் ஆகிய படங்களில் நடித்ததில்லை. எனவே, இது நான் முயற்சி செய்து பார்க்க விரும்பும் இரண்டு ஜானர்கள். இந்தப் படத்தில் அது இரண்டுமே சாத்தியமாகியிருக்கிறது. மிகவும் வித்தியாசமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது” எனக் கூறியிருக்கிறார்.
கஹானி திரைப்படத்தை இயக்கிய சுஜோய் கோஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஷோமி மகிஜா இயக்குகிறார்.
�,