மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டது. வாட்ஸ் அப் ஆன் லைனில் இருந்தது. லொகேஷன் நாங்குநேரி காட்டியது.
“இடைத் தேர்தல் நடைபெற இருக்கும் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது இந்தத் தொகுதி மீண்டும் காங்கிரஸுக்கா அல்லது திமுகவுக்கா என்ற கேள்வி எழுந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்களை அறிவாலயத்துக்கு அழைத்துப்பேசி மீண்டும் காங்கிரஸ் இந்தத் தொகுதியில் போட்டியிடும் என்று அறிவித்தார் ஸ்டாலின். அதையடுத்து வேட்பாளர் தேர்வில் கவனமாக இருங்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு அறிவுரையும் வழங்கினார் ஸ்டாலின். அதையடுத்தே பசையுள்ள வேட்பாளராகத் தேடிப்பிடித்து ரூபி மனோகரனை வேட்பாளராக அறிவித்தது காங்கிரஸ்.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக போட்டியிடும் நிலையில் அதைவிட காங்கிரஸுக்கு திமுகவினர் முன்னுரிமை கொடுப்பார்களா என்ற ஒரு சந்தேகம் காங்கிரஸ் கட்சிக்கு இருந்தது.அதையும் தீர்த்துவைத்து தென்மாவட்டத் திமுக நிர்வாகிகளை முழுக்க முழுக்க நாங்குநேரி தொகுதியில் களம் இறக்கிவிட்டார் ஸ்டாலின். அவர்களுக்குப் பொறுப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமியையும் நியமித்தார்.
இந்த நிலையில்தான் பிரச்சாரத்தைத் தொடங்கிய ஸ்டாலின்… திண்ணைப் பிரச்சாரம், வாக்கிங் பிரச்சாரம், வழக்கம்போல் கூட்டங்கள் என்று ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தொகுதிக்கு சென்றவுடன் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் செயல் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட ஸ்டாலின், ‘நீங்க இப்ப என்ன வேலை பாக்குறீங்களோ அதைப் பார்த்துக்கிட்டே இருங்க. நான் வந்துட்டேன்கறதுக்காக அதை விட்டுட்டு என் பின்னாடி வராதீங்க. வேட்பாளரை மட்டும் என்னோடு அனுப்புங்க. மத்ததெல்லாம் நான் பாத்துக்குறேன்’ என்று கூறி, அதன்படியே வேட்பாளர் ரூபி மனோகரனை மட்டும் அழைத்துக்கொண்டு திண்ணைப் பிரச்சாரம், வாக்கிங் பிரச்சாரம் என்று களம் இறங்கிவிட்டார்.
மேலும், ரூபி மனோகரனை முன்னாள் ராணுவ வீரர் என்று தொடர்ந்து அடையாளப்படுத்தி ஸ்டாலின் செய்த பிரச்சாரம் தொகுதியில் நன்றாக வேலை செய்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர் என்று அதிமுகவால் குற்றம்சாட்டப்படும் நிலையில் ஜெயலலிதா, எம்ஜிஆர் இவரெல்லாம் இறக்குமதி செய்யப்பட்ட தலைவர்கள்தான் என்று ஸ்டாலின் பதில் அளித்து பேசியது காங்கிரஸ்காரர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
பணப்பொறுப்பு முழுதையும் ஐ.பெரியசாமி வசம் ஒப்படைத்துவிட்ட ஸ்டாலின், காங்கிரஸ் வெற்றி என்பது என்னுடைய வெற்றி போல அதனால எந்த நிலையிலும் தளராமல் வேலையைப் பாருங்க என்று காங்கிரஸ் கட்சியினருக்கு உத்வேகம் கொடுத்திருக்கிறார். ‘விக்கிரவாண்டி இருக்கும்போது நாங்குநேரிக்கு எத்தனை நாள் ஒதுக்குவாரோ?’ என்று உண்மையிலேயே சந்தேகப்பட்டோம். ஆனால், முதலில் இரு நாட்கள், பிறகு இரு நாட்கள் என மொத்தம் நான்கு நாட்கள் ஒதுக்கிவிட்டார். அதுவும் காங்கிரஸ் வேட்பாளரை முன்னிலைப்படுத்தி ஸ்டாலின் வாக்கு சேகரித்த விதம் காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது’ என்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். அதேநேரம் ஸ்டாலினுடைய காங்கிரஸுக்கு ஆதரவான நாங்குநேரி நடவடிக்கைகள் குறித்து முழு விவரமும் ஆர்.எஸ்.எஸ். தலைமையகமான நாக்பூருக்கும் அனுப்பபட்டு வருவதாக சொல்கிறார்கள் தென் மாநில ஆர்.எஸ்.எஸ். முக்கிய நிர்வாகிகள்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.�,”