நளினியும் முருகனும் அமெரிக்க தேர்தல் பற்றியா பேசப் போகிறார்கள்?

Published On:

| By Balaji

வெளிநாடுகளில் உள்ள உறவினர்களிடம் பேசி அனுமதித்தால், நளினியும் முருகனும் அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா பேசப் போகிறார்கள் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக 28 ஆண்டுகளாக நளினி மற்றும் முருகன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில், முருகனின் தந்தை இலங்கையில் உயிரிழந்த போது இறுதிச்சடங்கை கூட வீடியோ காலில் பார்க்க தமிழக அரசு அனுமதிக்கவில்லை. இதனிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில், நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் முருகன், நளினி இருவரும் இலங்கையிலுள்ள

முருகனின் தாயார் சோமணி அம்மாளிடம் தினமும் 10 நிமிடம் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

மேலும் லண்டனில் உள்ள முருகனின் தங்கையுடன் பேச அனுமதிக்க வேண்டும் என்றும் முருகனின் தந்தையின் இறுதிச்சடங்கை வீடியோ காலில் பார்க்க அரசு அனுமதிக்காதது குறித்தும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வில் விசாரணையில் இருந்து வருகிறது. இவ்வழக்கில் தமிழக அரசு சார்பில், நளினி மற்றும் முருகனை வெளிநாடுகளில் உள்ள அவர்களது உறவினர்களிடம் பேச அனுமதிப்பதற்கு தங்களுக்கு அதிகாரம் இல்லை, மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் கார்த்திகேயன், பாதுகாப்பு காரணங்களுக்காக கைதிகளை வெளிநாட்டில் உள்ளவர்களிடம் பேச அனுமதிப்பதில்லை என்று தெரிவித்தார். இதை விசாரித்த நீதிபதிகள் நளினி மற்றும் முருகன் ஆகியோரை வெளிநாடுகளில் உள்ள உறவினர்களிடம் ஒரு நாள் மட்டும் பேச அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டனர்.

மீண்டும் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நளினி மற்றும் முருகனை வெளிநாடுகளில் உள்ள உறவினர்களிடம் பேச அனுமதித்தால், பன்முக விசாரணை முகமை விசாரணைக்கு இடையூறு ஏற்படும். எனவே அவர்களை வெளிநாடுகளில் உள்ள உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்க 2015 வரை மட்டுமே செயல்பட அமைக்கப்பட்ட பன்முக விசாரணை முகமை இன்னும் செயல்பாட்டில் உள்ளதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதுதொடர்பாக ஆகஸ்ட் 19ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேச போகின்றனர், இருவரையும் அவர்களது குடும்பத்தினருடன் காணொளியில் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்சினை உள்ளது என்றும் கேள்வி எழுப்பி வழக்கை ஒத்திவத்தனர்.

**கவி பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share