சாக்ஸ் 143 கோடி, வீடு 222 கோடி: மைக்கேல் ஜாக்சனின் இன்றைய நிலை!

Published On:

| By Balaji

மைக்கேல் ஜாக்சன் முதல் முதலாக ‘மூன்வாக்’ நடனமாடியபோது அணிந்திருந்த சாக்ஸ்கள் 143 கோடிகளுக்கு ஏலம் விடப்பட்டிருக்கின்றன. Motown 25: Yesterday, Today, Forever என்ற நிகழ்ச்சி 1983 ஆம் ஆண்டு தொலைக்காட்சி ஒன்றிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்ட மைக்கேல் ஜாக்சன் முதல் முதலாக மூன்வாக் நடனமாடினார்.

அதன்பிறகு மைக்கேல் ஜாக்சனின் புகழ் வளர்ந்துகொண்டே சென்றது. 1984 முதல் 1989 வரை மைக்கேல் ஜாக்சனின் மியூசிக் எக்ஸிக்யூடிவாக பணியாற்றிய ஃப்ராங் டிலியோவுக்கு நினைவுப் பரிசாக, முதல் மூன்வாக் நடனமாடிய சாக்ஸ்களை வழங்கியிருந்தார் மைக்கேல் ஜாக்சன்.

அந்த சாக்ஸ்களை கடந்த 13ஆம் தேதி தொடங்கிய ராக் & ரோல் விழாவில் ஏலத்துக்குக் கொண்டுவந்தனர். 71 லட்சத்தில் தொடங்கப்பட்ட இந்த ஏலம், கடைசியில் 143 கோடியில் முடிந்தது. மைக்கேல் ஜாக்சனின் பொருட்கள் இப்படி அதிக விலைக்கு ஏலத்தில் விடப்படுவது இது முதல் முறையல்ல.

அவரது ஒரு புகைப்படம் கூட 25 லட்சம் வரை ஏலம் விடப்பட்டிருக்கிறது. மேற்குறிப்பிட்ட 1983 நிகழ்ச்சியில் மைக்கேல் ஜாக்சன் அணிந்திருந்த வைரம் பதிக்கப்பட்ட கிளவுஸ்களை 3 கோடி 23 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தனர் அவரது ரசிகர்கள். உண்மையாகவே மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்தியது அல்லது அவருக்கு சொந்தமானது என்ற சர்டிஃபிகேட் இருந்தால் மட்டுமே போதும் என்று எவ்வளவு பணம் கொடுத்தாவது, அது எந்தப் பொருளாக இருந்தாலும் வாங்குவதற்குத் தயாராக இருக்கின்றனர் மைக்கேல் ஜாக்சனின் ரசிகர்கள்; ஆனால், ஒரு பொருளைத் தவிர. அது மைக்கேல் ஜாக்சனின் வீடு.

கிட்டத்தட்ட குழந்தைகளின் நலக் காப்பகமாக மைக்கேல் ஜாக்சன் உருவாக்கி வைத்திருந்த ‘நெவர்லேண்ட் ராஞ்ச்’ வீடு இப்போது வரையிலும் யாராலும் ஏலத்தில் வாங்கப்படவில்லை. 718 கோடி ஏல விலையாக நிர்ணயிக்கப்பட்ட அந்த வீடு, இப்போது 222 கோடியாக விலை குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், அந்த வீட்டினை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. அதற்குக் காரணம், அந்த வீட்டைச் சுற்றிவரும் பாலியல் புகார்கள்.

மைக்கேல் ஜாக்சனுக்கு இசையுலகில் எவ்வளவு புகழ் இருக்கிறதோ, அதே அளவுக்கு அவர் மீது பொது வாழ்வில் பல்வேறு விமர்சனங்களும் இருக்கின்றன. முக்கியமாக, அவரது நெவர்லேண்ட் ரான்ச் வீட்டில் அடைக்கலம் புகுந்து, அவரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக புகார் சொல்லியிருக்கும் வேட் ராப்சன் மற்றும் ஜேம்ஸ் சேஃப்சக் ஆகிய இருவரது குற்றச்சாட்டுகள் அந்த வீட்டை இப்போதும் சர்ச்சைக்குள் கொண்டுவந்துகொண்டிருக்கின்றன. அவர்களது புகார்கள் 2017ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டிருந்தாலும், இப்போது அவற்றுக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கலிஃபோர்னியா மாகாணத்தின் மேல்முறையீடு நீதிமன்றத்தில், மைக்கேல் ஜாக்சன் மீதான புகார்களை விசாரிக்குமாறு வேட் மற்றும் ஜேம்ஸ் ஆகிய இருவரும் மேல்முறையீடு செய்திருந்தனர். இவர்களது மனுவை விசாரித்த நீதிபதி, இவர்கள் தரப்பு வாதத்தைக் கேட்க முன்வந்து தற்காலிக ஏற்பாடு ஒன்றை செய்திருக்கின்றனர். அந்த அமர்வில், இவர்கள் சமர்ப்பிக்கும் ஆதாரங்கள் மற்றும் வாதங்கள் நியாயமானதாக இருக்கும்பட்சத்தில், இந்த வழக்கு மீண்டும் உயிர்பெறும். அப்படி, அந்த வழக்கு உயிர்பெற்றால், பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்ற இடமான நெவர்லாண்ட் ராஞ்ச் இடமும் இந்த வழக்கில் சேர்க்கப்படும். எனவே, தான் எத்தனையோ கோடீஸ்வர மைக்கேல் ஜாக்சன் நண்பர்கள் அந்த வீட்டை மட்டும் விட்டுவைத்திருக்கிறார்கள்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share