பெட்ரோலைத் தொடர்ந்து டீசலும் ஒரு லிட்டர் 100 ரூபாயைக் கடந்ததால் அதிர்ச்சியடைந்த லாரி உரிமையாளர்கள் கேக் வெட்டி நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.92க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.100.05க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை பெட்ரோல் மட்டுமே சதத்தைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் டீசலும் அந்த சாதனையை முறியடித்துள்ளதால் தேனி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சார்பில் கேக் வெட்டி நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதுகுறித்து பேசியுள்ள லாரி உரிமையாளர்கள், பெட்ரோல் – டீசல் விலை உயர்வால் அனைத்து விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி பல்வேறு அரசியல் கட்சியினர், வாகன உரிமையாளர்கள் போராடி வந்தாலும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேனி மாவட்டத்தில் ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாயைக் கடந்து விற்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கும் விதமாக நூதன முறையில் கேக் வெட்டி அதனை அனைவருக்கும் வழங்கினோம்.
சாமானிய மக்களை பாதிக்கும் பெட்ரோல் – டீசல் விலை உயர்வைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
**-ராஜ்**
.
.�,”