எந்தெந்த உணவகங்களில் அரசு பேருந்துகள் நிற்க வேண்டும்?

Published On:

| By admin

நீண்ட தூரம் செல்லும் அரசு பேருந்துகள் உணவு இடைவேளைக்காக நிறுத்தப்படும் உணவகங்களில் தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாகவும், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் போக்குவரத்து துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில், உணவகங்களில் அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதன்படி, விக்கிரவாண்டியில் உள்ள 5 உணவகங்களில் அரசுப் பேருந்துகள் நிறுத்த தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், நீண்ட தூரம் செல்லும் அரசு பேருந்துகள் எந்தெந்த உணவகங்களில் நிற்க வேண்டும் என்ற பட்டியலை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.

அதில், “சென்னையிலிருந்து கோவை, நெல்லை, செங்கோட்டை, நாகர்கோவில், கன்னியாகுமரி செல்லும் பேருந்துகள் பிரசன்ன பவன் உணவகத்திலும், சேலம் , திண்டுக்கல், காரைக்குடி செல்லும் பேருந்துகள் வசந்த பவன் உணவகத்திலும் நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு இடங்களில் இருந்து சென்னை நோக்கி இயக்கப்படும் பேருந்துகள் உளுந்தூர்பேட்டை- விழுப்புரம் இடையே அமைந்துள்ள ஸ்ரீ பாலாஜி ஆரியாஸ் உணவகத்தில் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த உணவகங்களில் பயணிகளின் உணவிற்காக மற்றும் இயற்கை உபாதைகளுக்காக பேருந்தை நிறுத்திக் கொள்ளலாம். இந்த உத்தரவை முறையாக பின்பற்றி எந்தவொரு புகாரும் வராமல் இருப்பதை, நடத்துநர், ஓட்டுநர் பார்த்துக் கொள்ள வேண்டும். தினசரி இருபுறமும் பேருந்து இயக்கிய விவரம், உணவகத்தில் நின்ற விவரம் பணிமனை வாரியாக வாட்ஸ் அப் செயலி மூலம் அனைத்து கிளை மேலாளர்களும் தலைமையகத்திற்கு தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share