மின்விளக்குகளை அனைப்பதால் மின்சாதனங்களுக்கு பழுது ஏற்படுமா என்பது தொடர்பாக அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்தார்.
கொரோனாவால் பெரும் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 2ஆம் தேதி காலை 9 மணிக்கு பொது மக்களிடம், உரையாற்றிய பிரதமர் மோடி, இன்று (ஏப்ரல் 5) இரவு 9 மணிக்கு, மக்கள் அனைவரும் வீடுகளில் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, அகல் விளக்கு வைக்க வேண்டும். அல்லது மொபைல் டார்ச், டார்ச் லைட்டை 9 நிமிடங்களுக்கு ஒளிரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், ஒரே நேரத்தில் மின் விளக்குகளை அனைத்து வீடுகளிலும் அனைத்தால், மின்சாதனங்களில் பழுது ஏற்படும் என்ற தகவல் வெளியானது. அனைவரும் மின் விளக்குகளை அனைக்கும்போது மின்சாரத்தின் தேவை குறைந்து மின் சப்ளை அதிகரிக்கும். 9 நிமிடங்களில் மீண்டும் மின் விளக்குகளை எரியவிடும்போது மின் தேவை உடனடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இதுதொடர்பாக சென்னையில் இன்று (ஏப்ரல் 5) செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த மின் துறை அமைச்சர் தங்கமணி, “இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்தாலும் மக்கள் குளிர்சாதன பெட்டி, மின்விசிறி உள்ளிட்ட மற்ற மின் சாதனங்களை இயக்கலாம். நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பொது விளக்குகளை அணைக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளோம். மருத்துவமனைகளில் மின் விளக்குகள் அணைக்கப்படாது. ” என்று தெரிவித்தார்.
“9-9.09 மணி வரை கிட்டத்தட்ட 1200 மெகாவாட் மின்சாரம் குறையும் என எதிர்பார்க்கிறோம். அதனால் அதே அளவுக்கு மின் உற்பத்தியையும் குறைக்க உள்ளோம். ஆகவே, வோல்டேஜ் அதிகமாகி மின் சாதனங்களுக்கு பழுது ஏற்படுமோ அல்லது வெடித்துவிடுமோ என மக்கள் அச்சப்பட தேவையில்லை. மின் சாதனங்கள் பழுதாகிவிடும் என்பது போன்ற செய்திகளை பரப்ப வேண்டாம். வழக்கமாக இயங்கும் தொழிற்சாலைகளை இயக்கிக்கொள்ளலாம். விவசாயத்திற்கு தேவையான மும்முனை மின்சாரம் வழங்கப்படும் ” என்று கேட்டுக்கொண்ட அமைச்சர்,
“வழக்கமாக இந்த காலகட்டத்தில் 16,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். ஆனால், 11,000 மெகாவாட்டாக உள்ளது. கிட்டத்தட்ட 5,000 மெகாவாட் மின்சாரத்தின் தேவை குறைந்துள்ளது.” என்றும் தெரிவித்தார்.
**எழில்**�,