கன்னியாகுமரி கிராம்பு: புவிசார் குறியீடு பெற்றது எப்படி?

public

கன்னியாகுமரிக்குப் பெருமை சேர்க்கும் விதமாக குமரி மாவட்ட கிராம்புக்கு ‘கன்னியாகுமரி கிராம்பு’ என புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளான மாறாமலை, கரும்பாறை, வேளிமலை, மகேந்திரகிரி பகுதிகளில் 750 ஹெக்டேர் பரப்பளவுக்கு மேல் கிராம்பு பயிரிடப்படுகிறது. இது தமிழகத்தில் கிராம்பு பயிரிடப்படும் மொத்தப் பரப்பில் இது 73 சதவிகிதம் ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 120 ஆண்டுகளாக கிராம்பு இந்த விவசாயம் செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலவும் மிதமான வெப்பநிலை காரணமாக கிராம்பில் உள்ள வாசனை திரவியங்கள் குறைந்த அளவிலேயே ஆவியாகின்றன. இதனால் இந்தப் பகுதி கிராம்பில் அடர்த்தியான வாசனை எண்ணெய் கிடைக்கிறது. இங்குள்ள கிராம்பு மரத்தின் மொட்டுகள், உதிர்ந்த இலைகள் மற்றும் தண்டுகளும் வாசனை எண்ணெய் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் கிராம்பின் மொத்த உற்பத்தி 1,100 மெட்ரிக் டன். அதில் 1,000 மெட்ரிக் டன் கிராம்பு தமிழகத்தில் உற்பத்தியாகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 750 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே கன்னியாகுமரி மாவட்டத்தில் சாகுபடியாகும் கிராம்பில், ‘யூஜினால் அசிடேட்’ என்ற வேதிப்பொருள் அதிகளவில் இருப்பதால், அதிலிருந்து வாசனை எண்ணெய் அதிகம் கிடைக்கிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்ட கிராம்புக்கு என உலக அளவில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில் இலங்கை மற்றும் வட இந்தியப் பகுதிகளில் விளைவிக்கப்படும் கிராம்புகளை சிலர் கன்னியாகுமரி கிராம்பு என ஏமாற்றி விற்பனை செய்துவருகின்றனர். இதற்கு எல்லாம் தீர்வு ஏற்படுத்தும் விதமாகவும், கன்னியாகுமரிக்குப் பெருமை சேர்க்கும் விதமாகவும் குமரி மாவட்ட கிராம்புக்கு ‘கன்னியாகுமரி கிராம்பு’ என புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

புவிசார் குறியீடு பெறும் முயற்சியில் பெரும் பங்குவகித்த கரும்பாறை மலைத்தோட்ட விவசாயிகள் சங்கச் செயலாளர் லாலாஜி, “கன்னியாகுமரி மாவட்டத்தில் விளையும் உலகத்தரம் வாய்ந்த கிராம்புக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதற்காக பல ஆண்டுகள் முயற்சி செய்து வந்தோம். நறுமணப் பொருட்கள் வாரியம் அதற்காக உதவினார்கள். நறுமணப் பொருட்கள் வாரியம் சார்பில் வாங்குவோர் மற்றும் விற்பனையாளர்கள் கூட்டம் 10.07.2019 அன்று நாகர்கோவிலில் நடைபெற்றது. அதில் அன்றைய கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கன்னியாகுமரி மாவட்ட கிராம்புக்கு ஏன் புவிசார் குறியீடு பெறக்கூடாது, அதற்கு நாங்கள் உதவி செய்கிறோம் எனக் கூறினார். அவர் கொடுத்த உத்வேகத்தில் கரும்பாறை மலைத்தோட்ட விவசாயிகள் சங்கமும், மாறாமலை மலைத்தோட்ட விவசாயிகள் சங்கமும் இணைந்து புவிசார் குறியீடு பெற முயற்சி செய்தோம்.

மாறாமலை மலைத்தோட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன் சுப்பையா பெரும் முயற்சி எடுத்து சென்னையில் உள்ள புத்திரன் அசோசியேட் என்ற சட்ட வல்லுநர் குழுவை ஏற்படுத்தினார். பின்னர் அனைத்து விவரங்களையும் சேகரித்து இறுதி வடிவம் கொடுத்து 30.10.2019இல் அறிவுசார் சொத்துரிமை துறையில் சமர்ப்பித்தோம். 31.12.2019-லேயே புவிசார் குறியீடு கிடைத்திருக்க வேண்டும். கொரோனா காரணமாக காலதாமதம் ஆகிவிட்டது. இந்த நிலையில் இப்போதுதான் எங்களுக்கு புவிசார் குறியீடு வழங்கியுள்ளார்கள்.

இதன் மூலம் கன்னியாகுமரி கிராம்பு உலக அளவில் புகழ்பெற்றுவிடும். இனி நாங்கள் தரக்கட்டுப்பாடு குழு அமைப்போம். கன்னியாகுமரி கிராம்பு என்பதற்கான சான்றை அந்தக் குழு மூலம் தரம் பார்த்து வழங்குவோம். இதனால் வெளியூர் கலப்பு இல்லாத நல்ல கிராம்பு கிடைக்கும். எனவே அனைவரும் கன்னியாகுமரி கிராம்பை விரும்புவார்கள். வெளிநாடுகளில் மதிப்பு அதிகரிக்கும். கிராம்பின் புகழ் உலகம் முழுவதும் பரவும்போது, அதன் மூலம் கன்னியாகுமரி சுற்றுலா மேம்படும்” என்றார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியில் உற்பத்தியாகும் நெட்டை ரக தென்னைக்கு இதற்குமுன் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது, மார்த்தாண்டம் தேன், நேந்திரன் வாழை, மட்டி வாழை ஆகியவற்றுக்கும் புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கன்னியாகுமரி கிராம்புக்கு புவிசார் குறியீடு பெற்றிருப்பது வேளாண் ஆர்வலர்கள் மற்றும் மலைத்தோட்ட விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

**-ராஜ்**

.

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *