நீங்கள் பருகும் பால் தரமானதா? அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை!

Published On:

| By Balaji

ஆரோக்கியமான வாழ்வு வாழ ‘தினமும் பால் பருக வேண்டும்’ என்று காலங்காலமாக கூறப்பட்டு வந்ததைக் கேட்டிருப்போம். சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை தங்கள் உடலுக்குத் தேவையான சத்துக்களைப் பெற தினமும் பால் பருகுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

பால் பருகாமல் இருந்தால் உடலில் கால்சியம் அளவு குறையும் என்று கூறுவார்கள். ஆனால் ஆரோக்கியம் பெறுவதற்காகப் பருகப்படும் பாலில் உடலுக்குத் தீங்கு விளைக்கும் பல்வேறு நச்சுப் பொருள்கள் கலக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

உணவே மருந்து என்று கூறப்பட்டிருந்த காலம் மாறிப்போய், அந்த உணவுப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளுக்காக மருந்துகளை நாட வேண்டிய சூழலில் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். அந்த அளவிற்கு நாம் உண்ணும் உணவில் கலப்படம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையான பலரின் விருப்ப உணவான பாலில் ரசாயன கலப்படம் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த அதிர்ச்சித் தகவலை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த 2018 முதல் இந்த 2019 அக்டோபர் மாதம் வரை இந்தியாவில் உள்ள சுமார் 1,103 நகரங்களில் விற்பனை செய்யப்படும் 6,432 பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இந்த ஆணையத்தால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. இதில் 40.5% பதப்படுத்தப்பட்ட பாலின் மாதிரிகளும் மற்றவை பதப்படுத்தப்படாத பாலின் மாதிரிகளும் ஆகும். இந்த உணவு பாதுகாப்பு சோதனையில் பல பால் மாதிரிகள் தோல்வியடைந்துள்ளன. அவற்றில் அஃப்லாடாக்சின் எம் 1 (Aflatoxin M1) என்ற புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ரசாயனப்பொருள், மைக்ரோ தொற்றுப் பொருள், கல்லீரலுக்குத் தீங்கு விளைக்கும் நச்சு போன்றவை கலந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பாலில் கலப்படம் இருப்பதாக சாமானிய மக்களும் நம்புகின்றனர், ஆனால் தரமற்ற பால் கலப்படத்தை விடவும் ஆபத்தானது என்பதை இந்த ஆய்வில் தெரியப்படுத்தியுள்ளோம். பெரிய பிராண்டுகள் விற்பனை செய்யும் பாலில் கூட தூய்மைக் கேடான கலப்படம் இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. நாங்கள் சேகரித்த பல பால் மாதிரிகளில், சோப்புப் பொருள்கள், யூரியா போன்றவை கலந்திருந்தன” என்று உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு தலைமைச் செயல் அதிகாரி பவன் அகர்வால் தெரிவித்துள்ளார்.

அஃப்லாடாக்சின் எம் 1 அதிகமாகப் பயன்படுத்தும் 3 மாநிலங்களில், தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட 551 பால் மாதிரிகளில் 88-இல் அஃப்லாடாக்சின் எம் 1(Aflatoxin M1)கலக்கப்பட்டுள்ளது. பொதுவாக உள்ளூர் பால் விற்பனையாளர்களால் வழங்கப்படும் பாலில் தண்ணீர் கலப்பது உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. ஆனால் அனுமதிக்கப்பட்ட வரம்பைத் தாண்டி கால்நடைத் தீவனத்தில் அஃப்லாடாக்சின் எம் 1, கலக்கப்படுவதால் அது அப்படியே பாலிலும் படிந்துவிடுகிறது.

‘தீவனத்தில் கலக்கப்படும் நச்சுத்தன்மையை முற்றிலும் தடை செய்வதற்கு நாங்கள் முயற்சி மேற்கொண்டுவருகிறோம்’ என்று தெரிவித்த பவன் அகர்வால், ‘பதப்படுத்தப்படாத பால் விற்பனைத் துறையில் தரநிலைகளை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். மாட்டுத்தீவனங்களில் சரியான தரத்தைப் பயன்படுத்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share