இந்தியாவிலும் சீனாவிலும் சோதனை அதிகரிக்கப்பட்டால் கொரோனா தொற்று எண்ணிக்கை அமெரிக்காவை விட அதிகமாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகளவு பாதிக்கப்பட்டு முதலிடத்தில் இருக்கிறது அமெரிக்கா. அங்கு இதுவரை 19 லட்சத்து 65 ஆயிரத்து 708 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பலியானோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 390ஆக உள்ளது. 7 லட்சத்து 38 ஆயிரத்து 646 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 15 ஆயிரத்து 638 ஆக உள்ளது.
இந்த வைரஸ் தொற்று பாதிப்பில் உலக அளவில் 11ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 6ஆவது இடத்திற்கு நகர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 15 நாட்களில் மட்டும் இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 9,888 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதுபோல் இந்தியாவில் 40 லட்சம் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. சீனாவைப் பொறுத்தவரை 83 ஆயிரத்து 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 4,634ஆக இருக்கிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனா பாதிப்பு குறித்து கூறுகையில், அமெரிக்காவில் இரண்டு கோடிக்கும் அதிகமாக சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. சோதனை எண்ணிக்கை அதிகரித்தால் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதைத்தான் நான் ஒவ்வொரு முறையும் சொல்கிறேன். சீனாவிலும் இந்தியாவிலும் சோதனையை அதிகரித்தால் அமெரிக்காவை விட பாதிப்பு அதிகமாக இருக்கவே செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் உள்ள தடைகளை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம். மருந்துகளும் தற்போது வேகமாக தயாராகி வருகின்றன அதுவரை காத்திருங்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மெய்னில் உள்ள பியூரிட்டன் மெடிக்கல் புராடக்ட்ஸ் நிறுவனத்திலிருந்து செய்தியாளர்களிடம் பேசும் போது ட்ரம்ப் இதனை தெரிவித்தார். பியூரிட்டன் நிறுவனம் என்பது உலகிலேயே தரமான மருத்துவ ஸ்வாப்களை உருவாக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
**-கவிபிரியா**�,”