சிலை கடத்தல் வழக்கில் உச்ச, உயர் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபியே பொறுப்பு எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி ஐ.ஜி.பொன் மாணிக்கவேல், நீதிமன்றம் உத்தரவிட்டும் விசாரணைக்காக எந்த வித அடிப்படை வசதிகளும் அரசு ஏற்படுத்தித் தரவில்லை, இவ்வழக்கில் இரு அமைச்சர்களின் தலையீடும் உள்ளது என்று தெரிவித்திருந்தார். இந்தநிலையில் சிலை கடத்தல் வழக்கு விசாரணையில் தலையிட்டதாகக் கூறப்படுபவர்களின் பட்டியலை வெளியிடக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (நவம்பர் 8) விசாரணைக்கு வந்தது. சிலை கடத்தல் வழக்கில் ஆஜராக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பாலாஜி ஸ்ரீநிவாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொன்.மாணிக்கவேல் தரப்பில், சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது, பொக்கிஷங்களை காப்பாற்ற வேண்டும் என்றுதான் இந்த நீதிமன்றம் செயல்படுகிறதே தவிர எந்த அதிகாரிகளுக்கும் எதிராக இல்லை என்று நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு தெரிவித்துள்ளது. மேலும், சிலை கடத்தல் வழக்கில் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபிதான் பொறுப்பு என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையே இவ்வழக்கில் தலையிட்டதாகக் கூறப்படும் அமைச்சர்களின் பெயரை வெளியிட வேண்டும் என்று வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கோரிக்கை விடுத்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பான ஆதாரங்களை இரு தரப்பினரும் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், வழக்கை நவம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
�,