ஹைட்ராக்சி க்ளோரோகுயின்: சுகாதாரத் துறை எச்சரிக்கை!

Published On:

| By Balaji

‘‘கொரோனா தீவிர பாதிப்பு நோயாளிகளுக்கு ‘ஹைட்ராக்சி க்ளோரோகுயின்’ மாத்திரை தவிர்க்கப்பட வேண்டும்’’ என்று ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்சி க்ளோரோகுயின் மாத்திரைகளைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில், “மிதமான மற்றும் நடுத்தர பாதிப்புடைய கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்சி க்ளோரோகுயின் (HCQ) பயன்படுத்த வேண்டும், தீவிர பாதிப்பு நோயாளிகளுக்கு அதை கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மிதமான பாதிப்பு நோயாளிகளில், அதிக உடல்நல பிரச்சினையுடைய நோயாளிகளுக்கு, அதாவது 60 வயதுக்கு குறைவானவர்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, நீடித்த நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் நோய், மூளை ரத்தக்குழாய் பாதிப்பு மற்றும் பருமன் பிரச்சினை உடையவர்களுக்கு தீவிர மருத்துவ மேற்பார்வையின் பேரில்தான் ஹைட்ராக்சி க்ளோரோகுயின் மாத்திரையைப் பயன்படுத்த வேண்டும். நடுத்தர பாதிப்பு நோயாளிகளுக்கு இசிஜி பரிசோதனைக்குப் பின்பே ஹைட்ராக்சி க்ளோரோகுயினைப் பயன்படுத்த வேண்டும். இது தீவிரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால், மருத்துவப் பரிந்துரை இல்லாமல், ஹைட்ராக்சி க்ளோரோகுயின் மாத்திரை பயன்படுத்தக் கூடாது” என்று ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் உறுதிபடுத்தியிருக்கிறது.

ஹைட்ராக்சி க்ளோரோகுயின் மருந்தை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்காக அமெரிக்க அதிபர் இந்தியாவை எச்சரித்ததும் நினைவுகூர வேண்டியதாகிறது.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share