கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரத்தால் எழுந்த சர்ச்சை இன்னமும் அடங்கவில்லை. மாணவிகள், பள்ளி நிர்வாகம் ஆகிய இரு தரப்பும் தத்தமது தரப்பை விட்டுக்கொடுக்காமல் விடாப்பிடியாகச் செயல்பட்டுவருகின்றன. இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக, ஹிஜாப் தடைக்கு எதிராகப் போராடிய முஸ்லிம் மாணவிகள் 24 பேரை இடைநீக்கம் செய்து பி.யூ. கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் (முக்காடு) அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடைக்கு இஸ்லாமிய மாணவிகளிடமிருந்து எதிர்ப்பு எழுந்தது. தடையை மீறி ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் பள்ளிக்குள் அனுமதிக்கப்படாததால் பெரும் பரபரப்பு எழுந்தது. பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாக ஏபிவிபி அமைப்பினரும் இந்து மாணவ மாணவிகளும் போராட்டத்தில் இறங்கினார்கள்.
இதைத் தொடர்ந்து கர்நாடக மாநில அரசு ஹிஜாப் அணியத் தடை விதித்தது. இதை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் 6 பேர் தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மாநில உயர் நீதிமன்றம் தடைக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்திருந்தது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
இந்நிலையில், கர்நாடக அரசு விதித்த தடையை அமல்படுத்தும் விதமாக, தக்ஷிண கன்னடா மாவட்டம் உப்பினங்காடி அரசு முதல் தர பி.யூ. கல்லூரி மாணவர்களுக்கான சீருடையைக் கட்டாயமாக்கி உத்தரவிட்டது.
பி.யூ. கல்லூரியின் சீருடை உத்தரவை இஸ்லாமிய மாணவிகள் ஏற்கவில்லை. உடுப்பி, தக்ஷிண கன்னடா, மங்களூரு, ஷிமோகா உள்ளிட்ட மாவட்டங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கான அனுமதியைக் கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல்லூரி நிர்வாகம் இதற்கு மசியவில்லை. ஏற்கெனவே ஹிஜாப் அணிவதற்குத் தடை இருப்பதாலும், கல்லூரியில் சீருடை கட்டாயமாக்கப்பட்டிருப்பதாலும் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதிக்க முடியாது எனக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துவிட்டது.
பி.யூ கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் 24 பேர் ஹிஜாப் அணிய அனுமதி கோரி கடந்த ஒரு வார காலமாக வகுப்பைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எதிராகத் தாங்களும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஏபிவிபி மாணவ அமைப்பினர் அறிவித்தனர். போராடிய முஸ்லிம் மாணவிகள் 24 பேரை இடைநீக்கம் செய்து பி.யூ. கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஹிஜாப் அணிய அனுமதி கிடைக்காததால் முஸ்லிம் மாணவிகள் பலர் பள்ளி இறுதித் தேர்வு எழுதப் பள்ளிக்கு வரவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பாஜக அரசு ஆளும் மாநிலத்தில் ஹிஜாபுக்கு எதிரான தடை பிறப்பிக்கப்பட்டிருப்பதால் இந்தப் பிரச்சினை வெறும் உடை தொடர்பான பிரச்சினையாக அல்லாமல் முஸ்லிம்களுக்கு எதிரான பாஜகவின் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஹிஜாப், பர்தா போன்ற உடைகளுக்கு எதிரான குரல் அந்த மதத்திற்குள்ளேயே நீண்ட காலமாக எழுந்துவந்தாலும் தற்போதைய பிரச்சினையில் எதிரணியில் பாஜக இருப்பதால் இந்தச் சீர்திருத்தக் குரல்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஹிஜாப் போன்றவை முஸ்லிம்களின் உரிமைப் பிரச்சினையாகவே பார்க்கப்படுகின்றன.
.