ஆயிரத்துக்கும் மேலான ஹாரர் படங்களை எடுத்துத் தள்ளிய ஹாலிவுட்டுக்கே ஒரு திகில் படத்தைக் காட்டியவர் ஹார்வே வெய்ன்ஸ்டீன். அக்டோபர் 2017இல், ஹார்வே வெய்ன்ஸ்டீனுக்கு எதிராக ஒன்றன்பின் ஒன்றாக எழுப்பப்பட்ட பாலியல் புகார்கள் ஹாலிவுட்டை மட்டுமல்லாமல் உலகையே உரையவைத்தது. இதற்கு சற்றும் குறைவில்லாமல், ஹார்வேவுக்கு எதிரான இந்த வழக்கின் விசாரணை நடந்துமுடிந்திருக்கிறது.
கலிஃபோர்னியா மாகாண நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் முடிவில், ஹார்வே வெய்ன்ஸ்டீனை குற்றவாளி என தீர்ப்பளித்து உத்தரவிட்டார் மான்ஹாட்டன் மாகாண நீதிபதி சைரஸ் வான்ஸ். முழு தீர்ப்பும் மார்ச் 11ஆம் தேதி வாசிக்கப்படும் என அறிவித்து நீதிபதிகள் எழுந்துச் செல்லத் தொடங்கியதும், ஹார்வே வென்ய்ன்ஸ்டீனை அத்தனை நாட்களும் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தும் நெருங்கமுடியாமல் இருந்த நீதிமன்ற காவலர்கள் வந்து விலங்கிட்டு அழைத்துச் சென்றனர். நீதிமன்றத்துக்கே நடந்துவரமுடியாமல், கை தாங்கியின் உதவியுடன் வந்த வெய்ன்ஸ்டீனால் விலங்கிடப்பட்ட கையோடு எழுந்திருக்கவும் முடியவில்லை; மற்றவரின் உதவியின்று நடக்கவும் முடியவில்லை. நியாயமாக பரிதாபத்தை வரவழைத்திருக்கவேண்டிய இந்தக் காட்சி மாறாக வேறொன்றை நினைவுபடுத்தியது.
1994ஆம் ஆண்டு மான்ஹாட்டன் ஹோட்டலில் இரவு உணவை முடித்துக்கொண்டு கிளம்பிய, ‘த சொப்ரனோஸ்’ திரைப்படத்தின் நடிகை அனபெல்லா சியோராவுக்கு காரில் லிஃப்ட் கொடுத்திருக்கிறார் வெய்ன்ஸ்டீன். அங்கிருந்து சில மைல்கள் தொலைவிலுள்ள கிராமெர்ஸி பார்க் அப்பார்ட்மெண்ட் வரை வெய்ன்ஸ்டீன் காரில் பயணித்ததும், காரிலிருந்து இறங்கி விடைபெற்றுக்குகொண்டு தனது அறைக்குச் சென்றது வரை சியோராவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அறையைப் பூட்டிய சில நிமிடங்களில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்கிறது. கதவைத் திறந்தால் வென்ஸ்டீன். என்ன வேண்டும் என்று கேட்பதற்கு முன்பாக அறைக்குள் நுழைந்து கதவை சாத்தும் வென்ஸ்டீன்ம் அறைக்குள் சகஜமாக உலவுகிறார். இங்கு என்ன செய்கிறீர்கள் கிளம்புங்கள் என்று சியோரோ எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தனது ஆசையைச் சொல்கிறார் வெய்ன்ஸ்டீன். ‘என்னால் முடியாது. வேண்டாம்’ என்று சொல்லச் சொல்ல வெய்ன்ஸ்டீனின் வெறி ஏறுகிறது. ஒரு கட்டத்தில் சியோராவை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குகிறார் வெய்ன்ஸ்டீன். பிறகு, இதைப்பற்றிப் பேசாமல் இருந்தால் ஹாலிவுட்டில் பெரிய ஆளாக ஆக்குவதாகக் கூறுகிறார். வெளியில் சொன்னால் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி திரையுலக வாழ்க்கையையே அழித்துவிடுவேன் என்கிறார். எந்த ஆதரவும் இல்லாத சியோரா, அந்த அறைக்குள் நடந்தவற்றைத் தனது மனதுக்குள்ளேயே பூட்டிவைக்கிறார். “அன்று, என் மனதுக்குள் என்னையே நான் பூட்டி வைத்தேன், இத்தனை ஆண்டுகளாக என் மனதுக்குள் நான் கதறிய அத்தனை அழுகைகளின் ஓலங்களும் தான் இந்த நீதிமன்றத்தின் முன் வெடித்திருக்கிறது. எனக்கு அறுபது வயதாகிறது. நீதிமன்றம் கேட்கும் எந்த ஆதாரமும் என்னிடம் இல்லை. ஆனால், என்னால் வேறொன்றை நிரூபிக்க முடியும். அது, வெய்ன்ஸ்டீனால் பாதிக்கப்பட்டது நான் மட்டும் இல்லை. நூற்றுக்கணக்கான பெண்களை தன் அதிகாரத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு எப்போதெல்லாம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் நாசம் செய்திருக்கிறார் வெய்ன்ஸ்டீன். இவரால் பாதிக்கப்பட்டது நான் மட்டும் இல்லை என்பதை அறிந்தபோது, இந்த நீதிமன்றத்தின் வாசல்படியை மிதிக்கமுடியாத அத்தனைப் பெண்களின் சார்பாகவும் நான் கிளம்பி வந்தேன். நான் ஒரே ஒரு பெண் அல்ல. வெய்ன்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட அத்தனைப் பெண்களின் மூலமாகவும் உருவாக்கப்பட்ட நிழல். வெய்ன்ஸ்டீனால் நானே பாதிக்கப்பட்டேன். எப்படி பாதிக்கப்பட்டேன் என்பதை நினைவிருப்பது வரை அப்படியே கூறிவிட்டேன்” என்று சியோரா பேசிமுடித்தபோது நீதிமன்றத்தில் ஏற்பட்ட இறுக்கத்தை சொல்ல வார்த்தைகளில்லை.
அனைத்து சாட்சியங்களின் வாக்குமூலத்தையும் பெற்றுக்கொண்ட நீதிபதிகள் மிருகத்தனமாக பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திலும், தனது அதிகாரத்தைத் தவறான வழியில் பயன்படுத்திய குற்றத்திலும் ஹார்வே வெய்ன்ஸ்டீனை கைது செய்யச் சொல்லி உத்தரவிட்டனர். இந்த முடிவினால் ஹார்வே அதிர்ச்சியடைந்துவிட்டார் என அவரது தரப்பு வழக்கறிஞர் கூறியிருக்கிறார். மேற்கொண்டு முழு தீர்ப்பினையும் மார்ச் 11ஆம் தேதி வெளியிடுவோம் என்று நீதிபதி தெரிவித்தார்.
�,