பாஸ்டேக் பொருத்தாவிட்டால் டிசம்பர் 1ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் அபராதமாக இரட்டிப்பாகக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரி நேற்று (நவம்பர் 21) தெரிவித்துள்ளார்.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் முன்முயற்சியான தேசிய மின்னணு கட்டண வசூல் (NETC) திட்டத்தின் கீழ் டிசம்பர் 1 முதல், FASTags மூலம் மட்டுமே கட்டணம் வசூல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 537 சுங்கச்சாவடிகள் FASTags மூலம் கட்டணம் வசூலிக்கும் மின்னணு சாவடிகளாக மாற்றப்பட்டுள்ளன. இதில் 17 சாவடிகளில் கையடக்க சாதனங்கள் மூலம் பணம் வசூலிக்கப்படும். இந்த FASTags லேன்களில் செல்லும் வாகனங்களில் டேக் இல்லை என்றால் இரட்டிப்பாகக் கட்டணம் வசூலிக்கப்படும்.
FASTags என்பது ஒரு ப்ரீபெய்ட் கட்டண முறையாகும். இந்த கார்டை வாகனத்தின் விண்ட்ஸ்கிரீனில் ஓட்டினால் சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லும் போது, அந்த டேக் ஸ்கேன் செய்யப்பட்டுத் தானாகவே கட்டணத்தைக் கழித்து கொள்ளப்படும். இதனால் சுங்கச் சாவடிகளில் நிறுத்தாமல் வாகனம் செல்ல அனுமதிக்கப்படும்.
FASTags பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் டிசம்பர் 1ஆம் தேதி வரை, ரூ.150 செக்யூரிட்டி டெபாசிட்டுக்கு இந்த கார்டு இலவசமாக வழங்கப்படும். ஆனால் டிசம்பர் 1ஆம் தேதிக்குப் பிறகு இதனைப் பணம் கொடுத்து மட்டுமே வாங்க முடியும். அடுத்த 5 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வருவாய் லட்சம் கோடியை எட்டும். அடுத்த இரு ஆண்டுகளில் ரூ.30,000 கோடியை எட்டும் என்று நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் இதுவரையில் 35 முதல் 40 சதவிகிதம் பேர் மட்டுமே FASTags அட்டை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
�,