அதிமுக பொதுக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நேற்று (நவம்பர் 24) சென்னை வானகரத்தில் நடைபெற்றது. அதில், சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட 3,000 நிர்வாகிகள் பங்கேற்றனர். அதிமுகவை 56 மாவட்டங்களாகப் பிரிப்பது எனவும், உட்கட்சித் தேர்தலில் போட்டியிட ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து உறுப்பினராக இருந்திருக்க வேண்டுமெனவும் கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. அதுபோலவே நீட் விலக்கு, இருமொழிக் கொள்கை, திமுக மீது விமர்சனம் என 23 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
பொதுக் குழுவில் உரையாற்றிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்களவைத் தேர்தலின்போது கூட்டணியை ஒருங்கிணைப்பதில் இடைவெளி இருந்ததால் ஓர் இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றோம். குறுகிய காலத்தில் கூட்டணி அமைத்ததாலும், பிரச்சாரத்தில் சரிவர ஈடுபட முடியாததாலும்தான் இந்தச் சரிவு ஏற்பட்டது. எனினும் மத்தியிலும், மாநிலத்திலும் யார் ஆட்சிக்கு வர வேண்டும் எனத் தீர்மானிப்பதில் தமிழக மக்கள் சிறப்பானவர்கள். மக்களவைத் தேர்தலையும், சட்டமன்ற இடைத்தேர்தலையும் பிரித்துப் பார்த்து மக்கள் வாக்களித்தனர்” என்று தெரிவித்தவர்,
“45 ஆண்டுக்காலம் அதிமுகவில் உழைத்துக்கொண்டிருக்கிறேன். கிளைக் கழகச் செயலாளராகத் தொடங்கி படிப்படியாக வளர்ந்துதான் உங்கள் முன்னால் நிற்கிறேன். உங்கள் ஆதரவோடுதான் நானும் துணை முதல்வரும் கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துகிறோம். உங்களின் ஆதரவுதான் எங்களை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து, “அதிமுகவை நேரடியாக எதிர்க்கும் தைரியம் ஸ்டாலினுக்கு இல்லை. அதனால்தான் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட மற்றவர்களை அவர் தூண்டிவிடுகிறார்” என்று விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, “கட்சியே தொடங்காமல் சிலர் பேசுகின்றனர். யார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்குக் கவலை இல்லை” என்று ரஜினியை மறைமுகமாக விமர்சித்தார். மேலும்,“டிடிவி தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிமுகவை எவ்வளவு பாடாய்படுத்தினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுக யாருக்கும் அடிமை இல்லை” என்றும் குறிப்பிட்டார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றுகையில், “தமிழகத்தில் அதிமுக ஆட்சி மிக வலிமையாக நடைபெற்று மக்களுக்குப் பல்வேறு நல்ல திட்டங்கள் சென்று கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும் என்ன தேவையோ அதை அளித்து வருகிறோம். கடந்த மக்களவைத் தேர்தலின்போது நமக்குச் சிறிய சரிவு ஏற்பட்டது. எனினும் இடைத் தேர்தல் வெற்றிமூலம் என்றும் அதிமுகதான் ஆட்சியமைக்கும் என மக்கள் காண்பித்துள்ளனர்” என்று கூறினார்.
மேலும், “அதிமுகவின் இதயமே தொண்டர்கள். அதிமுகவில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் இல்லை. நல்லாட்சியில் வெற்றிபெற்ற நாம் உள்ளாட்சியிலும் வெற்றிபெற வேண்டும். அதற்கு நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் நாம் பெறும் வெற்றிதான் ஜெயலலிதாவுக்குச் செய்யும் மரியாதை. தொண்டர்களால் நாங்கள்… தொண்டர்களுக்காகவே நாங்கள்” என்றும் கூறினார்.
�,”