சென்னை வாரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை தரமணி பிரஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவில் சிறப்பு நிகழ்ச்சிகள் சமீபத்தில் நடைபெற்றன. அதில் கலந்துகொண்டு வரலாற்று ஆராய்ச்சியாளர் நிவேதிதா லூயிஸ், கிறிஸ்துவத்தில் தமிழ் இசை என்னும் தலைப்பில் உரையாற்றினார். உரையின் இடையே தமிழிசைப் பாடகி ஜாஸ்மின் வில்சன் கிறிஸ்துவப் பாடல்கள் பாடினார்.
இத்தாலியத் துறவியான கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி வீரமாமுனிவர் என்ற பெயர் பெற்று ‘கொடுந்தமிழ் இலக்கணம்’ முதலிய நூல்களைப் படைத்தார் என்பது எவ்வளவு விந்தையானது?
கிறிஸ்துவத் தமிழிசையின் மும்மூர்த்திகள் என்று சொல்லப்படுபவர்கள் – வேதநாயகம் சாஸ்திரியார், ஹென்றி ஆல்பிரடு கிருஷ்ணப்பிள்ளை மற்றும் ஞா. சாமுவேல். இவர்களில் வேதநாயகம் சாஸ்திரியார் ஸ்வார்ட்ஸ் ஐயரிடம் மாணாக்கராக இருந்து மொழிகளும், வேதமும் கற்றார். அவருடன் மாணவராகவும் உற்ற நண்பராகவும் இருந்தவர் தஞ்சை இளவரசர் சரபோஜி. அருணாசலக் கவிராயர் இயற்றிய குற்றாலக் குறவஞ்சியால் ஈர்க்கப்பட்டு இயேசுநாதரின் பிறப்பு கதையை ‘பெத்லகேம் குறவஞ்சி’ என்று குறவஞ்சியாகப் பாடியவர் வேதநாயகம் சாஸ்திரியார். தஞ்சை சரபோஜி மன்னனின் அரண்மனைக் கவிஞராகவும் இருந்தவர் இவர். 52 புத்தகங்களும், கிட்டத்தட்ட 500 கீர்த்தனைகளும் இயற்றியுள்ளார். இவரும் திருவையாறு தியாகராஜரும் சமகாலத்தவர்கள்!
கிருஷ்ணப்பிள்ளை கம்பராமாயணச் சொற்பொழிவுகள் ஆற்றக்கூடியவர்; ஆனால் கால்டுவெல்லின் அறிமுகம் கிடைக்க, தமிழாசிரியர் பணியும், தீவிர விவிலியக் காதலும் வந்தது. சென்னை தூய தோமா தமிழ் தேவாலயத்தில் திருமுழுக்கு பெற்று ஹென்றி ஆல்பிரடானவர், கிருஷ்ணப்பிள்ளையை தன் பெயரிலிருந்து இறுதிவரை நீக்கவில்லை.
கிறிஸ்துவக் கம்பன் எனப் போற்றப்படும் இவர் ‘பில்கிரிம்ஸ் புரொக்ரஸ்’ என்ற நூலைத் தழுவி இரட்சணீய யாத்திரிகம் என்ற நூலை 14 ஆண்டுக் காலம் எழுதி வெளியிட்டார். தமிழ்க் கிறுஸ்துவத்தின் மிகப் பெரும் படைப்பாக இன்றளவும் பார்க்கப்படுகிறது இந்த நூல். இவர் இயற்றிய ‘சத்தாய் நிஷ்களமாய்’ என்ற பாடல் தேவாரப் பாடலான ‘பொன்னார் மேனியனே’ என்ற பாடலைப் போலவே காம்போஜி ராகத்தில் எழுதப்பட்டது.
கள்ளுக்கும்மி என்ற நகைச்சுவை நூலை எழுதியவர் ஞா.சாமுவேல். பக்தியைப் பறைசாற்றும் பாடல்களாக இல்லாமல், சமூகக் கருத்துகளும் கிறிஸ்துவக் கவிஞர்கள் இயற்றிய பாடல்களில் இடம்பெற்றன. குடியால் வரும் கேட்டை விளக்கி, குடிப்பழக்கத்தைக் கைவிடச் சொன்னது கள்ளுக்கும்மி. ஆலயங்களில் கதாகலாட்சேபம் செய்ய கீர்த்தனைப் பாடல்களை இயற்றினார் சாமுவேல். கிறிஸ்துவ இசைக் கலைஞர்கள் மற்றும் பாடலாசிரியர்களில் மிக முக்கியமானவர் எனக் கருதப்படுபவர் ஆபிரகாம் பண்டிதர். இசை சார்ந்த ஓலைச் சுவடிகளைத் தேடிப்பிடித்து நூல்களாக அச்சிட்டவர். ஏழு தமிழிசை மாநாடுகளைத் தன் சொந்த செலவில் நடத்தியவர். 96 கீர்த்தனைப் பாடல்களை இவர் இயற்றியுள்ளார்.
வயலின் கொண்டு கதாகலாட்சேபம் செய்தவர் சி.பரமசகாயம் ஞானமணி. ஊதாரி மகன் உவமையை ‘டம்பாச்சாரி கவிதை’, நோவாவின் கதையை ‘மரக்கல முனிவர்’, யோனாவின் உவமையை ‘மச்ச முனிவர் கவிதை’ என்று விவிலியத்தின் முக்கிய உவமைகளை நூல்களாக இயற்றியவர் இவர். ‘பெரியண்ணன்’ என்ற மருத்துவர் சவரிராயன் இயேசுதாசனைத் தெரியாதோர் வட தமிழ்நாட்டில் இருக்க முடியாது! காந்தியடிகளின் வழிகாட்டல் கொண்டு திருப்பத்தூரில் ‘கிறிஸ்து குல ஆசிரமத்தை’ அமைத்து அதன் மூலம் மக்கள் தொண்டாற்றினார் இவர். கிராம சுகாதார நூல், ஆசிரமப்பாமாலை, தமிழ்நாட்டுச் சரிதம் என்று அவர் எழுதிய புத்தகங்கள் பல.
சென்னைப் பல்கலைக்கழக வித்துவானாகத் தேர்ச்சி பெற்றவர் தேவநேயப் பாவாணர். ‘ச’ என்ற வடமொழி எழுத்து தன் பெயரில் இருத்தல் கூடாது என்றெண்ணி தன் பெயரான தேவநேசனை தேவநேயன் என்று மாற்றிக்கொண்டவர் இவர். இசைத்தமிழ்க் கலம்பகம் என்ற கலம்பக நூல் எழுதியவர்; கிறிஸ்துவக் கீர்த்தனம் எனும் நூலையும் எழுதியவர். ஒப்பியன் மொழி நூல், செந்தமிழ்க் காஞ்சி போன்ற நூல்களை இயற்றினார். இவருக்குச் ‘செந்தமிழ்ச் செல்வர்’ பட்டம் வழங்கி கௌரவித்தது தமிழக அரசு. காமராசர் பல்கலைக்கழக தென்னிந்திய இசையியல் ஆய்வுப் பேராசிரியராக இருந்தவர் வீரணன் பரமசிவம் காமாட்சிசுந்தரம். திருக்குறள் போலவே அருட்குறள் என்ற செய்யுள் நூலை எழுதினார். சிறுவர் இன்பம் போன்ற சிறார் நூலை எழுதிய இவர், கிறிஸ்து பிறப்பு மங்கலக் கீர்த்தனைகள் என்ற கீர்த்தனை நூலும் எழுதினார்.
இவர்கள் தவிர நூற்றுக்கணக்கான சாஸ்திரியார், உபாத்யாயர், கவிஞர் போன்றோர் கிறிஸ்துவ மத வழிபாட்டில் தமிழிசைப் பாடல்கள் புனைந்தும் பாடியும் வந்தார்கள்.
18ஆம் நூற்றாண்டில், செவ்வியல் இசையாகிய தமிழ் இசை, கர்னாடக இசை என்ற குறுகிய ‘புனிதக் கோட்பாட்டுக்குள்’ அடைக்கப்படுகிறது. கேரி ஃபெரல் என்ற இசைப் பேராசிரியர், ஆங்கிலேயரின் இசைக் கலப்பு இல்லாமல், செவ்வியல் இசையைக் காப்பாற்றுவதாகக் கூறியே கர்னாடக இசை பொது நீரோட்டத்திலிருந்து ஒதுக்கி வைக்கிறார்கள்” என்று கூறுகிறார். ஆனால், அதே இசை தேவாலயங்களில் சமுத்துவம் கொணர்ந்தது; வழிபாட்டை முன்னின்று நடத்துபவர் முதல் கடைக்கோடி கிறிஸ்துவனும் பாடல்களால் இறைவனை மகிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்துவ இசை ‘தூய்மை’ என்ற கட்டுக்குள் அடங்காமல், ‘இசை அனைவருக்குமானது’ என்ற பொதுமையை, சமத்துவத்தைக் கொண்டு வந்தது!
‘கிறிஸ்துவ மதத்தில் தமிழ் இசை’ என்பது குறித்து வரலாற்று ஆராய்ச்சியாளர் நிவேதிதா லூயிஸ் ஆற்றிய உரையின் முழு காணொலி கீழே இடம்பெற்றுள்ளது. அவருடன் பாடல்களைப் பாடுபவர் பாடகி ஜாஸ்மின் வில்சன், கீபோர்டு – முனைவர் பால் வில்சன், மிருதங்கம் – சாமுவேல் வில்சன், இணைந்து பாடுபவர் – ஸ்மிருதி வில்சன்.
�,”