டிஜிட்டல் திண்ணை: சீன அதிபரின் சென்னை  சாலைப் பயணம் பின்னணி!

Published On:

| By Balaji

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டது. வாட்ஸ் அப் ஆன் லைனில் இருந்தது.

 “வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த சீன அதிபர் ஜின் பிங் சென்னைப் பயணம் உலகம் முழுவதும் கவனம் ஈர்த்திருக்கிறது. பொதுவாகவே சீன அதிபர் தனது நாடான சீனாவில் இந்த அளவுக்கு வெளியே வந்து மக்களோடு மக்களாக நிக்ழ்ச்சிகளில் பங்கேற்பதெல்லாம் அரிது. திட்டமிடப்பட்ட சில நிமிட நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்துகொள்ளும் அதிபர், மக்களிடமிருந்து பெருமளவு தள்ளியிருப்பதே அங்கே மரபு.

ஆனால் அக்டோபர் 11 மதியம் சென்னை விமான நிலையத்தில் ஈரடுக்கு விமானத்தின் கதவைத் திறந்தபோதே சென்னையின் கொட்டுச் சத்தம் ஜின் பிங்கின் காதுகளில் ஒலிக்க, அதன் பின் நேற்று சென்னையில் நடந்த ஒவ்வொரு விஷயத்தையும்  அங்குலம் அங்குலமாக என் ஜாய் பண்ணியிருக்கிறார் சீன அதிபர்.  சீன அதிபர் தங்கும் கிண்டி சோழா ஓட்டல், முதல் மாமல்லபுரம்   வரை முழுக்க முழுக்க சீன உளவுத்துறை அதிகாரிகள் வசம் ஏற்கனவே சென்றுவிட்டது. ஓட்டல் உரிமையாளர் முதல்  துப்புரவுப் பணியாளர் வரை அனைவரது பெயர், புகைப்படம், அடையாள அட்டை, முகவரி எல்லா வற்றையும் திரட்டிவிட்டனர். மேலும்  சோழா ஓட்டலிலேயே அதிபரின் சீன பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்கனவே தங்கிவிட்டனர். லீலா பேலஸ் ஹோட்டலிலும்  தங்கி முழு பாதுகாப்பு ஏற்பாடுகளையும்  கவனித்தனர் சீன அதிபரின் பயணத்தை ஒட்டி சில வாரங்களுக்கு முன்பே சீன பாதுகாப்பு அதிகாரிகளும், சீன உளவுத்துறை அதிகாரிகளும் சென்னையின் மேப்பை கையிலெடுத்து ஆய்வு செய்யத் தொடங்கிவிட்டனர். சென்னைக்குள் முதலில் ஹெலிகாப்டர் பயணம்தான் சீன அதிபருக்குத் திட்டமிடப்பட்டிருந்தது.  சீன அதிபருக்கு பேனர் வைக்க வேணடும் என்று உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் கூட ஹெலிகாப்டரில் வரும் சீன அதிபர் பேனர்களை எப்படிப் பார்ப்பார் என்று வாதங்கள்  முன் வைக்கப்பட்டன.எனவே சீன அதிபருக்கு சென்னையின்  சாலைப் பயணம் முதலில் திட்டமிடப்படவில்லை.

ஆனால், சீன பாதுகாப்புத் துறை அதிகாரிகள், இந்திய எஸ்பிஜி அதிகாரிகளுடன் ஆலோசித்து ஆய்வு செய்தனர். அதன் பின் அவர்கள் அதிபருக்கு ஹெலிகாப்டர் பயணத்தை விட சாலைப் பயணமே  பாதுகாப்பு என்ற முடிவுக்கு  வந்தனர். இந்தத் தகவல் உரிய அதிகாரிகள் மூலம் தமிழக போலீஸ் தலைமைக்கு தெரியப்படுத்தப்பட்டதும்  அதிர்ந்துவிட்டனர். சீன அதிபர் 50 கிலோ மீட்டர் சாலையில் பயணம் செய்கிறார் என்ற தகவல்  உறுதிப்படுத்தப்பட்ட பிறகு சென்னையை புதுமைப்படுத்தும் பணி ஒருபக்கம். கண்காணிப்புப் பணி, போக்குவரத்து மாற்றப் பணி என்று தமிழக போலீசாரின் தலையில் சுமை மடமடவென  ஏறியது.

மோடி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டுவிட்டார். ஆனால் சீன அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள்  சாலைப் பயணம்தான்  வேண்டும் என்று  திட்டமிட்டுள்ளனர். இதற்குக் காரணம் ஹெலிகாப்டரை விட  அதிபர் பயன்படுத்தும் அந்த காரைதான்  சீன பாதுகாப்பு அதிகாரிகள் நம்பியிருக்கிறார்கள்.

ஹோங்க்கீ என்ற சீன பெயர் கொண்ட இந்த கார் பல்வேறு தர சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அதிபருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  மாசேதுங் காலத்தில் இருந்தே இதே வகை காரைதான் சீன அதிபருக்காக பயன்படுத்தி வருகிறார்கள். ஹோங்க்கீ என்றால் சீன மொழியில் செங்கொடி என்று அர்த்தம். 3 ஆயிரத்துக்கு 185 கிலோ எடை கொண்ட இந்த கார் 5 அடி உயரத்துக்கு இருக்கிறது. சீன அதிபர்கள் பெரும்பாலும் வெளிநாட்டுப் பயணங்களில் பாதுகாப்பு கருதி விமானங்களையோ, கார்களையோ மட்டும்தான் பயன்படுத்துகிறார்கள். ஹெலிகாப்டரை பயன்படுத்துவது கிடையாது.  கடந்த ஆண்டு சீனாவில் அரசியல் அமைப்பு சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு அதிபர் பதவிக்கான அதிகாரங்கள் அதிகமாக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பும் பன் மடங்கு அதிகமானது. அண்மையில் ஜி 20 மாநாட்டில் கலந்துகொண்டபோது கூட ஹெலிகாப்டர் பயன்படுத்தாமல் காரையே பயன்படுத்தினார் சீன அதிபர். 

ஆறு கோடி ரூபாய் மதிப்பு கொண்ட  அதிபரின் கார் மிக மிக உறுதியானது, பாதுகாப்பானது. எந்தத் தாக்குதலாலும் ஒன்றும் செய்ய முடியாத அளவுக்கு உறுதியானது அந்த கறுப்புநிற  கார். மேலும் 105 லிட்டர் கொள்ளளவு  கொண்ட பெட்ரோல் டேங்க் கொண்ட அந்த காரின் பெட்ரோல் டேங்க் எவ்வித தாக்குதலுக்கும்  உள்ளாகாத அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

முழுக்க முழுக்க சீனாவில் தயாரான இந்த காரையும், நமது பாதுகாப்பு அதிகாரிகளையும்  நம்பிதான் சென்னையின் சாலைகளில்  நேற்று மட்டும் சுமார் நூறு கிலோ மீட்டர் பயணித்திருக்கிறார் சீன அதிபர்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப். 

 

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share