[தமிழக காவல் துறையை பாராட்டிய சீனா

Published On:

| By Balaji

சீன அதிபர் வருகைக்கு செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை இணை ஆணையர் சுதாகர் பல்வேறு முக்கியமான தகவல்களையும், சீன அதிகாரிகள் பாராட்டியதையும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சீன அதிபரின் வருகையை முன்னிட்டு, தமிழக காவல்துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னை கிண்டி தொடங்கி மாமல்லபுரம் வரை 35 கிலோ மீட்டருக்கும் மேலாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. சுமார் 15,000 போலீசார் இந்தப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். சிறு தடங்கல் கூட ஏற்படாத அளவுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டதாக சீன அதிபர் ஜீ ஜின்பிங் பாராட்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையத்தில் ஜீ ஜின்பிங்கை  வழியனுப்பச் சென்ற டிஜிபி ஜே.கே.திரிபாதியுடன், சீன அதிபர் ஜீ ஜின்பிங் சென்னை விமான நிலையத்தில் கை குலுக்கினார்.

நாங்குநேரி தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக இன்று(அக்டோபர் 13) சென்னையிலிருந்து புறப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கிளம்புவதற்கு முன்னதாக, சீன அதிபருக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்ததற்காக, சென்னை ஆட்சியர் சீதாலட்சுமி, டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா ஆகியோரை அழைத்து நேரில் பாராட்டியுள்ளார். இரவு, பகலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வாக்கி டாக்கியில், ஓபன் மைக்கில் பாராட்டியிருக்கிறார்.

இந்நிலையில், காவல்துறை இணை ஆணையர் சுதாகர், சீன அதிபர் வருகைக்கு செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன என்பது குறித்து எழும்பூரில் செய்தியாளர்களிடம்  தெரிவித்துள்ளார்.

 “சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து ஒரு மாத காலமாக பயிற்சி மேற்கொண்டோம். இதுவரை எந்த அதிபரும் இவ்வளவு தூரம் சாலையில் சென்றது கிடையாது.  சாலைகளில் மின் கம்பம், குப்பை தொட்டி உள்ளிட்ட அனைத்திலும் சோதனை நடத்தப்பட்டது. 110க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் ஒரு மாத காலமாக 35 கிலோ மீட்டர் வரை சோதனை மேற்கொண்டனர்.

சீன அதிபரின் வருகையையொட்டி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களையும் கண்காணித்தோம். மெட்ரோ ரயில் வழித்தடங்கள்,மின்சார ரயில் வழித்தடங்களையும் கண்காணித்தோம். சீன அதிபரின் வருகையையொட்டி ஓஎம்ஆர் சாலை கட்டடங்கள், நிறுவனங்கள், வாடகை வீடுகள் என எல்லா இடங்களையும் ஆராய்ந்தோம். பஸ், ரயில் முன்பதிவில் முரணாக ஏதும் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தோம்.

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் இருந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டோம். எதிர்பார்த்ததை விட தமிழக காவல்துறை சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர்” எனக் கூறியுள்ளார் காவல்துறை இணை ஆணையர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share