ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடைகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில், ஊழியர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் மளிகைக் கடைகளில் பொருட்களை பார்சல் செய்யும்போது அங்கு பணியாற்றும் ஊழியர்கள் பேப்பர்களை பிரிக்க எச்சிலையும், கவர்களை திறக்க ஊதவும் செய்வதால் தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (ஜூன் 8) தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நல்ல யோசனையை தெரிவித்துள்ளதாக மனுதாரருக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் மளிகை கடைகளில் பார்சல் செய்யும்போது பேப்பர்களை பிரிக்க எச்சில் பயன்படுத்தக் கூடாது. கவர்கள் திறக்க ஊதக் கூடாது என்று ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்
**-பிரியா**
�,