சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக ஓட்டுநர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை வரை இயக்கக்கூடிய புறநகர் மின்சார ரயில் நேற்று பேசின்பிரிட்ஜ் பணிமனையிலிருந்து கடற்கரை ரயில் நிலையத்துக்கு 4.25 மணி அளவில் வந்தது. வழக்கம்போல் நடைமேடையில் பயணிகள் வருகை தருவதும், ரயிலுக்காகக் காத்திருப்பதுமாக இருந்தனர். அப்போது இந்த ரயில் திடீரென தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டு முதலாவது நடைமேடையில் ஏறி அங்குள்ள கடை மீது மோதி நின்றது.
இந்த சம்பவத்தின்போது, ரயில் ஓட்டுனர் நடைமேடையிலிருந்த பயணிகளை நோக்கி ஓரமாக விலகும்படி கத்தியதாகவும் நடைமேடை முடிவுக்கு வந்த நிலையில் ரயில் கட்டுப்பாட்டை இழந்ததால் ஓட்டுநர் கீழே குதித்தார் என்றும் நேரில் பார்த்த சில பயணிகள் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் சென்னை ரயில் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் நடைமேடையைச் சரி செய்யும் பணியையும் தெற்கு ரயில்வே மேற்கொண்டது.
இன்று வேலை நாள் என்பதால் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதனால் வழக்கமான சேவையை வழங்குவதற்கு ஏதுவாக மீட்பு பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி இன்று அதிகாலை 5 மணியிலிருந்து முதலாவது நடைமேடையில் இருந்து மின்சார ரயில் சேவை தொடங்கியது. தாம்பரம் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு இங்கிருந்து ரயில்கள் இயக்கப்பட்டன.
சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில், கடற்கரை ரயில் நிலையத்தில் இரவு முழுவதும் மீட்பு பணி நடைபெற்று அந்த வழித்தடம் சரி செய்யப்பட்டது. இன்று காலை முதல் முதலாவது நடைமேடையிலிருந்து மின்சார ரயில் சேவை தொடங்கியது. இந்த சம்பவத்தால் எந்த ஒரு ரயில் சேவையும் ரத்து செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் மின்சார ரயிலை இயக்கிய ஓட்டுநர் மீது கடற்கரை ரயில் நிலைய மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 151, 154, 279 ஆகிய பிரிவுகளின் கீழ் ரயில்வே சொத்தை சேதப்படுத்துதல் , கவனக்குறைவாகச் செயல்படுதல், உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் இயக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பணிமனையிலிருந்து எடுத்து வரப்பட்ட ரயில் பிரேக் பிடிக்காமல் விபத்துக்குள்ளானது எனக் கூறப்படுவது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
#TrainAccident pic.twitter.com/OUCCqyDJIZ
— kavi (@Kaviit7P) April 25, 2022
அதுபோன்று ரயில் விபத்து ஏற்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகளும் இன்று காலை முதல் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இதனால் ##TrainAccident என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
**-பிரியா**