சாத்தான்குளம் வணிகர்கள் ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களை 3 நாட்கள் சிபிஐ காவலில் எடுக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் மொபைல் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும், காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை ஐநாவும் கண்காணித்து வரும் நிலையில், முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 11ஆம் தேதி சிபிசிஐடியிடம் இருந்து வழக்கு ஆவணங்களைப் பெற்ற சிபிஐ , ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணையை நடத்தியது. மேலும், சாத்தான்குளம் காவல் நிலையம், ஜெயராஜின் கடை ஆகிய இடங்களைப் பாா்வையிட்டு, அங்கிருந்தவர்களிடமும் விசாரணை நடத்தியது.
இந்நிலையில் நேற்று மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், ஆய்வாளர் ஸ்ரீதா், சாா்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிஐ மனு தாக்கல் செய்தது.
இன்று காலை சம்பந்தப்பட்ட 5 காவலர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்டனர். அப்போது அங்கிருந்த சுவரில் வாகனம் உரசியதால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி ஹேமானந்த்குமார் முன்பு விசாரணை தொடங்கியதும், சிபிஐ தரப்பில் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது.
இதையடுத்து நீதிபதி சம்பந்தப்பட்ட 5 காவலர்களிடம் காவலில் எடுப்பது தொடர்பாக தனித்தனியாக விருப்பம் கேட்டறிந்தார். அப்போது காவலில் செல்ல போலீசார் மறுப்புத் தெரிவித்துள்ளனர். அதோடு, விசாரணைக் காலத்தில் தங்களுடைய வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று 5 காவலர்களும் நிபந்தனை வைத்துள்ளனர்
இதற்கு சிபிஐ ஏடிஎஸ்பி வி.கே.சுக்லா சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து 5 காவலர்களும் விசாரணைக்கு செல்ல சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் அகியோரை 3 நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிபதி ஒப்புதல் வழங்கினார்.
மீண்டும் 16ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நீதிமன்றத்தில் 5 பேரையும் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
**-கவிபிரியா**�,