காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கு மொட்டையடித்த பெற்றோர் மற்றும் உறவினர் ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பூக்கடையில் வேலை பார்த்து வரும் யுவராஜ் என்பவர், அதே பகுதியில் வசித்து வந்த பானுமதி என்ற பெண்ணை ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிய வந்த நிலையில் பானுமதிக்கு திருமண ஏற்பாடுகள் அவசர அவசரமாக நடைபெற்று வந்துள்ளது. இதையடுத்து கடந்த டிசம்பர் 9ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய யுவராஜ், பானு இருவீட்டார் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக் கொண்டனர்.
இந்த நிலையில் செஞ்சி காவல் நிலையத்தில் யுவராஜ் புகார் ஒன்று அளித்துள்ளார்., டிசம்பர் 9ஆம் தேதி, என் மனைவி பானுமதியை அவரது பெற்றோர் மிரட்டிக் கடத்திக்கொண்டு போய்விட்டனர். இதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. அதனால் அவரை விரைவில் மீட்டு தர வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
யுவராஜ் அளித்த புகாரின்பேரில் செஞ்சி காவல் நிலையத்தின் விசாரணை அதிகாரியான சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ், கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் பானுமதியை தேடிவந்தார். புதுச்சேரி மாநிலம் காலப்பட்டு பகுதியில் பானுமதி அவரது தாய்மாமா அண்ணாமலை வீட்டில் இருப்பதை கண்டுபிடித்த போலீசார், உடனடியாக அங்கு சென்று பானுமதியையும்,அவரது தாய்மாமாவையும் செஞ்சி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
பானுமதிக்கு திருமணம் நடந்த அன்றே அவரது தந்தை சாமிநாதன், தாய்மாமா அண்ணாமலை மற்றும் உறவினர்கள் பானுமதியைத் தேடி கண்டுபிடித்து, தென்பாலை முனீஸ்வரர் கோயிலுக்கு அழைத்து சென்று கழுத்திலிருந்த தாலியை கழட்டி போட்டுவிட்டு, அவருக்கு மொட்டை அடித்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக பானுமதி தந்தை சாமிநாதன், மாமன் அண்ணாமலை உட்பட ஐந்துபேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், பானுமதியைப் பெற்றோருடன் அனுப்பி வைப்பதா அல்லது காதல் கணவருடன் அனுப்பி வைப்பதா என்பது குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து செஞ்சி போலீசாரிடம் விசாரித்தபோது,”இந்த சம்பவத்தில் நல்ல விஷயம் என்னவென்றால் இருவரும் ஒரே (வன்னியர்) சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதுவே, வெவ்வேறு சமூகமாக இருந்திருந்தால் இந்நேரம் மாவட்டமே பதட்டமாக இருந்திருக்கும். தற்போது சாதி பிரச்சனைகளைவிட, பொருளாதார ஏற்ற தாழ்வு பிரச்சனைகள்தான் அதிகம். கெளரவத்தால் பெற்ற பிள்ளைகளையே கொடுமைப்படுத்துவது மிகவும் கொடூரம். பானுமதி காதலித்து திருமணம் செய்தது குற்றம் என்று பெற்றோரே அவரை அடித்து மொட்டை அடித்து அசிங்கப்படுத்தியிருப்பது வேதனையாக இருக்கிறது “ என்றனர்.
**வணங்காமுடி**
�,