புதிய கொரோனா வைரஸ் எதிரொலியாக இங்கிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 56 மில்லியன் மக்கள் மீண்டும் பொது முடக்க வாழ்க்கையைச் சந்திக்கவுள்ளனர்.
2019ல் சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உருமாற்றம் பெற்று பிரிட்டனில் அதிவேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் புதிய கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு, மீண்டும் இங்கிலாந்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகள், கல்லூரிகளை மூடுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று தொலைக்காட்சி வாயிலாகத் தெரிவித்த அவர், பிப்ரவரி இரண்டாம் வாரம் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தொற்று நோய்ப் பாதிப்பு தொடங்கியதிலிருந்து எப்போதும் இல்லாத அளவுக்கு மருத்துவமனைகள் அழுத்தத்தைச் சந்தித்துள்ளன. எனவே மருத்துவத் தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
திங்களன்று மட்டும் 58,784 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 407 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பாதிப்பைத் தொடர்ந்து உடனடியாக ஊரடங்கை அறிவித்துள்ளார். போரிஸ் ஜான்சன். தற்போது புதிய வைரசை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கானது கடந்த மார்ச் முதல் ஜூன் மாதம் வரை அமல்படுத்தப்பட்டிருந்ததைப் போல மிகக் கடுமையானதாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
**-பிரியா**�,