கா.இளம்பரிதி
அமெரிக்க நகரங்கள் பற்றி எரிந்தபோது, வெள்ளை மாளிகை தன் விளக்குகளை அணைத்துக் கொண்டது. 8 நிமிடங்களும் 46 நொடிகளும். கறுப்பின மரபுக்குரிய வாட்டசாட்டமான ஜார்ஜ் ஃப்ளாய்டின் மூச்சை நிறுத்துவதற்கு, ‘சூப்பர் மேன்’களை உருவாக்கும் ஹாலிவுட் என்ற மாபெரும் பிரச்சாரப் பெட்டகத்தைக் கொண்டிருக்கும் அமெரிக்காவின், ஒரு வெள்ளையின காவல் அதிகாரிக்குத் தேவைப்பட்ட சொற்ப நேரம் இதுதான். ஃப்ளாய்ட் கொல்லப்பட்ட இடத்தில் அவரது ஓவியங்களும், மலர்க் கொத்துகளும், பல்வேறு வரிகளைத் தாங்கிய பதாகைகளும் நாள்தோறும் நிறைகின்றன. அவ்விடத்தில் கிடத்திவைக்கப்பட்டிருந்த ஒரு பதாகையில், I’m listening என்று எழுதப்பட்டிருந்தது. ‘குரல்வளை நெரிபட்ட எனக்கான குரல்களை நான் செவியுறுகிறேன்’ என்று ஃப்ளாய்ட் கூறுவது போல அது இருந்தது. கறுப்பின மக்களும் வெள்ளையின மக்களும் அந்த இடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வந்து செல்கின்றனர்.
**தொடரும் போராட்டங்கள்**
தீர்மானிக்கப்பட்ட இலக்கு எதுவுமின்றி, மினசோட்டா, ஃப்ளோரிடா, விஸ்கான், சியாட்டில், டெக்சாஸ், வாஷிங்டன், நியூயார்க், சிகாகோ, நியூஜெர்சி, மான்ஹாட்டன் உள்ளிட்ட அமெரிக்காவின் சரிபாதி மாகாணங்களின் மைய நகரங்களில் இன்னும் போராட்டம் முடிவடையவில்லை. ஃப்ளாய்டின் மரணத்துக்குக் காரணமான, நான்கு காவல் துறை அதிகாரிகளின் மீது குற்றப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடங்கியுள்ளது. அப்புறமென்ன? போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டியது தானே என்று அமைதியை எப்போதும் விரும்புபவர்கள் அங்கலாய்த்துக் கொள்வதை நாம் கேட்க முடியும். ஒரு ஃப்ளாய்ட் தற்செயலாகக் கொல்லப்பட்டதற்கான எதிர்வினை அல்ல இது. ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து கைகளிலும் கால்களிலும் இரும்புச் சங்கிலிகளைப் பிணைத்து, ஆயிரக்கணக்கான கடல் மைல் கடந்து, புதிய நிலமொன்றில் விற்பனைக்குரிய சந்தைப் பண்டமாக, வீட்டு விலங்குகளுக்கும் கீழான மதிப்பில் மண்டியிட வைக்கப்பட்ட, முதல் கறுப்பின அடிமை விட்டுச் சென்ற நினைவின் வரலாற்றைக் கீறி எழுந்திருக்கும் எதிர்வினை இது.
**உத்வேகம் அளிக்கும் கனவின் குரல்**
1968 ஏப்ரல் 4 அன்று, கிறிஸ்தவ மத போதகரும், உலகம் மெச்சிய சிறந்த உரையாளரும் (Orator), கறுப்பின மனித உரிமைப் போராளியுமான Rev. மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் வெள்ளை இனவாதத்தால் படுகொலைக்கு ஆளாகி, அரை நூற்றாண்டுகள் கடந்து விட்டது. ஆப்ரகாம் லிங்கன் நினைவகத்தில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட கறுப்பு மற்றும் வெள்ளையின மக்கள் திரண்டிருந்த கூட்டத்தில், I have a dream… என்று உரத்த குரலில் மார்ட்டின் லூதர் ஆற்றிய உலகப் புகழ்பெற்ற உரை, அதன் தேவையை இன்னும் நிறைவு செய்யவில்லை. மனித உரிமை அல்லது சம உரிமைக்கான போராட்டங்கள் நிகழும்போதெல்லாம், உலகின் ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு உத்வேகம் அளிக்கும் கனவை அவரது குரல் தூண்டுகிறது.
“என் பிள்ளைகள் அவர்கள் நிறத்தினால் அல்ல, அவர்களின் பண்பினால் மதிக்கப்படும் காலம் வரும். இந்த நாடு ஒருநாள் வீறுகொண்டெழும். அனைத்து மனிதர்களும் சமமென்ற குரலை அது எதிரொலிக்கும். பண்ணையடிமைகளின் மகன்களும் அடிமைகளின் உரிமையாளர்களின் மகன்களும் சகோதரத்துவத்துடன் அமரும் நாள் ஒன்று வரும். I have a dream…” என்று தனது கனவை செவிமெடுக்கும் ஒவ்வொருவருக்குமான கனவாய், கடந்த நூற்றாண்டிலிருந்து இந்த நூற்றாண்டுக்கும் கடத்திக் கொண்டிருக்கிறார் அப்போதகர் – அப் பேருரையாளர், மார்ட்டின் லூதர்கிங் என்ற போராளி.
அதனால்தான், கலிபோர்னியா காட்டுத்தீ போல, உலகெங்கும் ஓர் இயக்கமாய் பரவி விரிகிறது Black Lives Matter. பிரிட்டன், ஜெர்மன், பிரான்ஸ், கிரீஸ், கனடா, ஸ்வீடன், ஆஸ்திரேலியா என வெள்ளை நாடுகளில் மட்டுமல்ல ஜப்பான், தென்கொரியா போன்ற அமெரிக்க ஆதரவு நாடுகளிலும், இனவாதத்துக்கு எதிரான பேரணிகளும் போராட்டங்களும் எழுந்துள்ளன. கண்ணீர்ப் புகை, ரப்பர் குண்டுகள், Pepper Spray, காவல் படையின் குதிரைகள், வாணவெடிகள் என போராட்டக்காரர்களைக் கலைத்து விரட்டியடிக்க, நாட்டுக்கு நாடு பல்வேறு அணுகுமுறைகள்.
**அமெரிக்க ராணுவமும் காவல் துறையும்**
‘காட்டுமிராண்டிகளின் நாடு’ என்ற ஒரு காலத்திய வெள்ளை இனத்தின் பார்வையை, இன்றும் மெய்ப்பிப்பவர்களாக, மனித உரிமைகளைக் காலில் மிதித்து நடப்பவர்களாக இருப்பவர்கள், இந்திய (மாநில) அரசுகளின் காவல் துறையினர்.
நிலப்பிரபுக்களின் அடியாட்களும் குற்ற ஏவல் புரிந்த காவல்காரர்களும் வைத்திருந்த குண்டாந்தடியைத்தான், இந்தியக் காவல் துறையின் பல்வேறு படைகளும் பயன்படுத்துகின்றனர். அளவில் சிறிய கலவரம் என்றாலும், ஒரு சிலரின் தலைகளிலாவது ரத்தம் பார்க்கவில்லை எனில், அன்றைக்கு வேலைக்குப் போன நிறைவு இவர்களுக்குக் கிடைப்பதில்லை. இதற்குப் பாதுகாப்புப் பணி என்ற அடைமொழி வேறு.
‘மோதல்’ என்ற பெயரில் சுட்டுக் கொல்வதோ, கரும்பு தின்னக் கூலி தருவது போல நம் காவல் துறைக்கு உவப்பானது. இந்த குண்டாந்தடியின் மூலம்தான், தம் குடிமக்களை இவர்கள் வரம்பு மீறாமல் பார்த்துக் கொள்கின்றனர். இந்தியா போன்ற மனித மாண்புகள் வளர்ச்சி பெறாத அல்லது சீரழிந்து போன நாடுகளில் காவல் துறை, ராணுவம் போன்ற ஆளும் வர்க்கப் படைப் பிரிவுகளுக்கும் மனித உரிமைகளுக்கும் தர்க்க ரீதியான உறவுகள் இருப்பதில்லை.
உலகிலேயே மனிதத் தன்மைகளற்ற, சட்டவிரோத, மிருகபலம் திரட்டப்பட்ட ஒரு படைப்பிரிவு உண்டெனில், அது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ராணுவப் படைதான். ஹிரோஷிமா, நாகசாகி, வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா என நீளும் அதன் ஆக்கிரமிப்புப் போர்களின் நெறிமுறைகளற்ற யுத்த வரலாற்றையும் மரணங்களையும், மொத்த உலகமும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. பிற இனங்களின் மீதான வெள்ளைப் பாசிச மன வெளியிலிருந்து கட்டமைக்கப்படுகிறது, காலனியாதிக்க நாடுகளின் ராணுவ அமைப்புகள். அமெரிக்க ராணுவம் அதன் உச்சபட்ச வடிவம்.
பாசிசத்துக்கு அனைத்துமே பிற (other) தான். அமெரிக்க அரசுக்குக் கறுப்பின மக்கள் எப்போதும் பிறர்தான். அமெரிக்க நிலத்தின் குடியேறிகள் என்ற தம் அழிக்கமுடியாத வரலாற்றையும் தாண்டி, கறுப்பர்கள் தங்களால் கொண்டுவரப்பட்ட அடிமைகள்தானே என்ற ஆணவமே, வெள்ளைப் பாசிசத்தை எப்போதும் இயக்கி வருகிறது. உலகின் பிற மக்களைவிட, நாகரிகத்தால் மேம்பட்டவர்கள் என்ற தம்பட்டத்தைப் பறைசாற்றிக் கொள்வதற்காகவே, ஜனநாயக விழுமியங்களை வளர்த்தெடுத்து வருபவர்கள் என்ற தோற்றம், அமெரிக்க வெள்ளை முகத்திற்குத் தேவைப்படுகிறது. அதனால்தான், அமெரிக்க ராணுவம் போலல்லாமல், மனித உரிமைகளின் தர்க்கத்திற்குள், தனது காவல்துறையை நிறுத்த முயற்சி செய்கிறது அமெரிக்க அரசு.
Looting starts, shooting starts என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் சமிக்ஞை செய்த பிறகும், அமெரிக்கக் காவல் துறை அதன் எல்லையை மீறவில்லை. தனது அதிகாரத்துக்கு மதிப்பில்லையோ என்ற கோபத்தில், போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவம் அழைக்கப்படும் என்று மிரட்டினார் ட்ரம்ப். ஹூஸ்டன் மாகாண காவல் துறையின் தலைவர் ஏஸ்விடோ என்பவர், “அதிபர் ட்ரம்ப் வாயை மூடிக்கொண்டிருந்தால் நல்லது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் காவல் துறைத் தலைவர்களின் சார்பில் இதைச் சொல்ல விரும்புகிறேன். உங்களால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ஏதாவது சொல்ல முடியாவிட்டால், தயவுசெய்து வாயை மூடிக் கொண்டிருங்கள்” என்று தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் முன்னாள் தலைவரோ, “நீங்கள் நாட்டை பிளவுபடுத்த முயற்சி செய்யாதீர்கள்” என்று ட்ரம்ப்பை சாடினார். வரவிருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் ஜோபிடனும் போராடுபவர்களுக்குத் தம் ஆதரவைத் தெரிவித்ததோடு, ‘வன்முறையைத் தூண்டுவதன் மூலம் உருவாகும் (இனவாத) பிளவு அவருக்கு உதவுமென நினைக்கிறார்’ என்று ட்ரம்ப்பை விமர்சித்தார்.
**அமெரிக்காவும் இந்தியாவும்**
இந்தியாவில் ராஷ்டிரிய சுயம் சேவக்கான நரேந்திர மோடி, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பிறகு, இந்துத்துவ அரசியல் மேலோங்கியிருப்பது போல, கடந்த 2017 ஆகஸ்டில் ‘வலதுசாரிகள் ஒன்றுபடுவோம்’ என்ற முழக்கத்துடன், வெள்ளை இனவாத ‘Unite The Right’ பேரணி அமெரிக்காவில் நடந்தது. வலதுசாரி இனவாத அரசியலுக்கு ட்ரம்ப் வெளிப்படையாக ஆதரவு அளிப்பதை அமெரிக்காவும் உலகமும் நன்கு அறியும். இப்போதும்கூட, ‘கலவரக்காரர்களிடமிருந்தும் கொள்ளையடிப்பவர்களிடமிருந்தும் எங்களையும் எங்கள் உடைமைகளையும் தற்காத்துக் கொள்ளும் தயார் நிலையில் இருக்கிறோம்’ என்று பல ரகங்களிலான துப்பாக்கிகளோடும் வெள்ளை இனவாதிகள் அவரவர் பகுதிகளில் உலவுகிறார்கள்.
அமெரிக்காவில் அடிக்கடி நிகழும் தனி நபர் துப்பாக்கித் தாக்குதல்களை செய்திகளாக நாம் அறிவோம். பாதுகாப்பு உரிமம் என்ற பெயரில் உலகில் வேறெந்த நாடுகளிலும் அனுமதிக்கப்படாத வகையில், பலவித ரகங்களிலான துப்பாக்கிகளுக்கும் அமெரிக்க வெள்ளையின அரசு, தம் குடிமக்களுக்கு அனுமதியை வழங்கியிருக்கிறது. இந்தக் குடிமக்கள் யாராக இருப்பார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை. துப்பாக்கி உரிமம் பெறுவதற்கான காரணங்களும், அதற்கு செலவு செய்வதற்கான வசதியும் பெற்றிருப்பவர்கள் பெரும்பாலும் வெள்ளையர்களே. காரணங்களில் முதன்மையானது எது தெரியுமா? ஆபத்தான சமூகப் பின்புலத்தில், பண்பாடற்று வாழும் கறுப்பின சேரி மக்களிடமிருந்து, தற்காத்துக் கொள்வது என சொல்லப்படும் காரணம்தான்.
இந்தியாவில் 14 சதவிகித இஸ்லாமிய சிறுபான்மையினர், 80 சதவிகித இந்துப் பெரும்பான்மையினரை அச்சமூட்டுகிறார்கள் என்ற வலதுசாரிப் பிரச்சாரம் போலத்தான், 13 சதவிகித ஆப்ரோ அமெரிக்கர்கள் 76 சதவிகித வெள்ளைப் பெரும்பான்மையினரை அச்சமூட்டுகிறார்கள் என்ற இனவாதப் பிரச்சாரம் அமெரிக்காவில் செய்யப்படுகிறது. கல்வி மற்றும் தனித்திறன்களின் மூலம், உயர் மற்றும் நடுத்தர வாழ்க்கையை அடைந்திருக்கும் 2 சதவிகிதக் கறுப்பர்களைத் தவிர, ஏனையோர் ஏழ்மை, கடும் வறுமை, சமூக விரோத வாழ்க்கைச் சூழல் என மீள இயலாத துயரங்களில் உழன்று வருகின்றனர்.
உலகத்தின் எல்லா இடங்களையும் போலவே, பொது சமூகம் கடைநிலை வர்க்கங்களை வைத்திருப்பது போலத் தான், கறுப்பர்களின் வாழிடங்களையும் அமெரிக்க உயர்தட்டு வெள்ளை வர்க்கம், சட்டவிரோதமான செயல்களின் புகலிடமாக மாற்றி வைத்துள்ளது. தடை செய்யப்பட்ட ஆயுதங்களின் வணிகம், போதை மருந்துப் பரிமாற்றம், பலதரப்பட்ட குற்றவாளிகளின் பதுங்குமிடம், பாலியல் அத்துமீறல்களுக்கான பகுதிகள் எனக் கறுப்பின மக்களின் வாழிடங்களை ஆக்கிரமித்து, அலங்கோலப்படுத்தி வைத்திருப்பவர்கள் வெள்ளையின உயர் தட்டினர். ஆனால், குற்ற சமூகத்தினர் என்ற பழி கறுப்பர்கள் மீதுதான்.
ஜார்ஜ் ஃப்ளாய்ட் கூட , 20 டாலர் கள்ளத்தாள் ஒன்றைத் தந்து, கடை ஒன்றில் சிகரெட் வாங்கினார் என்ற அக்கடைக்காரரின் உடனடி புகாரின் பேரில்தான் கைது செய்யப்படுகிறார். அக்குற்றச்சாட்டு விசாரிக்கப்படும் முன்பே, அவர் கொலை செய்யப்படுகிறார். போக்குவரத்து மிகுந்த அந்த நகரச் சாலையில், வெள்ளைக் காவலர்களால் ஃப்ளாய்ட் நடத்தப்பட்ட விதம், ஒரு வெள்ளைப் பெண்மணியால் படம் பிடிக்கப்பட்டு, சமூக ஊடகங்களில் பகிரப்படவில்லையெனில், அக்கொலைக்கு எந்த மதிப்புமில்லை. பாதுகாப்புத் தொழிலாளியாகப் (Security Labour) பணியாற்றிய ஃப்ளாய்ட், ஒரு கள்ள நோட்டுப் பேர்வழியாகவும், கைது செய்யப்படும்போது நெஞ்சு வலியால் உயிரிழந்ததாகவும் இந்நிகழ்வு, ஒன்றும் இல்லாததாகக் கரைந்து போயிருக்கும். கறுப்பின மக்களின் மீது புனையப்படும் பல வழக்குகளும் சட்ட ரீதியாகவே அவர்களுக்கு எதிரானவைதாம்.
**ப்ளாய்டின் உடற்கூராய்வு அறிக்கை வாதங்கள்**
மினியாபொலிஸ் நகர ஹென்னிபின் கவுன்டி மருத்துவர்கள் வெளியிட்டுள்ள உடல் கூறாய்வு அறிக்கையில், “ஃப்ளாய்டின் கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைப்பட்டுள்ளது. அவரால் சுவாசிக்க இயலாமல் இதயம் செயலிழந்து விட்டது. அவர் நல்ல உடல்நலத்துடன் இருந்துள்ளார். அவர் உயிரிழந்த விதத்தைப் பார்த்தால், கொலை போல உள்ளது. ஆனால் உயிரிழந்த விதம் சட்டரீதியாகத் தீர்மானிக்கப்படும் உள்நோக்கம் கொண்ட கொலை என்று கூறுவதற்கில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உள்நோக்கம் கொண்ட கொலை என்று அமெரிக்க சமூகம் போராடுகிறது.
அமெரிக்க நீதிமன்றம் இந்த உள்நோக்கத்தை சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளுமா என்பதை பின்னாளில்தான் நாம் அறிய முடியும். அமெரிக்கக் காவல் துறை கறுப்பினத்தவரை அணுகும் விதம் குறித்தும், பாதிப்புக்குள்ளான கறுப்பினக் குடும்பத்தினர் குறித்தும், நீதிமன்றங்களில் நடந்துவரும் வழக்குகள் குறித்தும், இதற்கு முன்னர் நடந்த போராட்டங்கள் குறித்தும் புலனாய்வு நோக்கிலான, Black Lives என்ற ஆவணப்படம் 2016இல் அமெரிக்காவில் வெளியானது. 2011இல் குயின்சி என்ற கறுப்பின இளைஞன் நடுத்தெருவில் சுட்டுக் கொல்லப்படுகிறான். அதே ஆண்டில், கயாம் லிவிங்ஸ்டன் என்ற கறுப்பினப் பெண்மணி அவர் வாழும் தெருவிலேயே சுட்டுக் கொல்லப்படுகிறார்.
2014இல் மெக் டொனால்டு என்ற கறுப்பு இளைஞனின் மீது, ஆளரவமற்ற சாலையில் 16 முறை சுடப்படுகிறது. நிராயுதபாணியான அவன் சுருண்டு விழுந்து செத்துப் போகிறான். இளம் வயதுப் பெண் ஆடைகள் கிழிக்கப்பட்டு, உள் ஆடைகளுடன் நடுத்தெருவில் கிடத்தப்படுகிறாள். அந்த அவமானம் மட்டுமே அவளுக்குப் போதுமானதாகத் தீர்மானிக்கப்படுகிறது. சாலைகளில் வைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான இக்காட்சிகள், ஆவணப்படத்தின் உண்மைத் தன்மைக்கு உறுதி கூறுகின்றன. அமெரிக்கக் காவல் துறையால் செய்யப்படும் அத்தனை சட்டவிரோதக் கொலைகளும், இப்படி தற்செயலாகப் பதிவாகும் என்று நாம் நம்பத் தேவையில்லை. 2016இல் 86 கறுப்பினத்தவரும், 2019இல் 236 கறுப்பினத்தவரும் காவல் துறையால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
அமெரிக்க அரசு தனது காவல் துறையின் மூலம் இனவாதத்தைப் பேணுகிறது என்ற நீண்டநாள் குற்றச்சாட்டு, ஃபிளாய்டுக்கு நீதி கேட்கும் போராட்டங்களின் வழியாக உலகத்தின் பார்வைக்குச் சென்றுள்ளது. ‘வெள்ளையின மக்கள் கறுப்பர்களுடன் நிற்கிறோம்’ என்ற பதாகைகளுடன் ஃப்ளாய்ட் கொல்லப்பட்ட இரு தினங்களில், லண்டனில் நடந்த பேரணியில் ஒரு வெள்ளைப் பெண்மணி முழக்கமிட்டுச் சென்றார். வெள்ளை இனவாதத்தின் தோற்றுவாயான, இங்கிலாந்தின் பிரிட்டன் நகரில் 8 ஜூன் 2020 அன்று, இனவாதத்திற்கு எதிராக நடத்தப்பட்ட பேரணி வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக மாறியிருக்கிறது.
17ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் நடந்துகொண்டிருந்த கறுப்பின அடிமை வணிகத்தில் ஈடுபட்டு, பெரும் செல்வந்தராகத் திகழ்ந்தவர் எட்வர்டு கோல்ஸ்டன் (Edward Colston) என்பவர். இவரது பெயரில் பிரிஸ்டனில் Colston Hall என்ற அரங்கம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. அந்தச் சாலையில் அவரது பழைய உருக்கு சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கில் அங்கு திரண்ட மக்கள், அந்த அடிமை வணிகனின் ஆளுயர சிலையை உடைத்து, வீதிகளில் உருட்டிச் சென்று, நகரின் ஊடே செல்லும் ஆற்றுக்குள் மிகுந்த ஆரவாரத்துடன் வீசி எறிந்தனர்.
கடந்த கால வரலாற்றின் குற்ற உணர்விலிருந்து விடுபட்ட மனநிறைவை, அங்கு திரண்டிருந்த வெள்ளையின மக்களின் ஆர்ப்பரிப்பு, ஒரு குறியீடாக உலகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியுள்ளது என்றால் அது மிகையல்ல. ஆனால் இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராகப் பதவி வகிக்கும், இந்திய வம்சாவளியினரான ப்ரிதி பட்டேல் என்ற பெண்மணி ‘இது ஒரு அவமானகரமான செயல்’ என்று வெள்ளை அதிகார வர்க்கத்தின் கோபத்தை வெளிப்படுத்தினார். சர்தார் வல்லபபாய் பட்டேலை இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். உலகெங்கும் இனவாதிகளும் வலதுசாரிகளும் ஓரணியில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
ப்ரிதி பட்டேலின் கண்டனத்துக்கு ஐரோப்பாவில் கடும் விமர்சனம் எழுந்தது. இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் இது விவாதமானது. உடனே, ”என் சிறு வயதில் பிரிட்டன் வீதிகளில், நானும் இனப் பாகுபாட்டுக்கு உள்ளாகியிருக்கிறேன். இந்தியப் பெண்ணான என்னை பக்கி என்று அழைத்து நாள்தோறும் கேலி பேசி வந்தனர். ஆனால், இன்று பிரிட்டன் ஓர் இனவாத நாடு அல்ல” என்று ப்ரிதி தன்விளக்கம் தந்தார். மக்கள் விடுபட நினைத்தாலும், முதலாளித்துவ அதிகார வர்க்கத்துக்கு இனப்பாகுபாடு எப்போதும் தேவையாக இருக்கிறது.
**வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அடித்தளம் இனவாதம்**
பிரிட்டன் வரலாற்றின் பேரரசு வம்சத்துக்கு நிகரான, பெரு மதிப்பையும் அடையாளத்தையும் வேறு எவரையும்விட, பெரிதாகப் பெற்றிருப்பவர் வின்ஸ்டன் சர்ச்சில். காலனியாதிக்கக் காலத்தில், 1943இல் ஏற்பட்ட இந்தியாவின் பெரும் பஞ்சத்தின்போது, உணவு இறக்குமதியையும் விநியோகத்தையும் தடுத்து, மேற்கு வங்கத்தில் பல்லாயிரம் வங்க ஏழை மக்களின் சாவுக்குக் காரணமானவர் சர்ச்சில். விலங்குத்தனமான மக்கள் என்று இந்தியர்களைச் சாடியவர். உலகின் வலிமையான இனம் ஆங்கிலேயர்களே என்று பெருமிதம் கொண்டவர். பிரிட்டன் மட்டுமல்ல, வெள்ளை ஏகாதிபத்தியங்களின் அடித்தளமே இனவாதம்தான். பல நூறு ஆண்டு வெள்ளைப் பாசத்தின் மீது காரி உமிழ்ந்திருக்கிறது பிரிட்டன் நகரம்.
8 ஜூன் 2020, இதே நாளில், மினியாபொலிஸ் நகர மக்களின் நிர்வாகக் குழு (City Council) திறந்தவெளியில் சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தியது. அமெரிக்கக் காவல் துறைக்கு எதிரான குரல் வாக்கெடுப்பை அக்கூட்டம் நிறைவேற்றியது. அக்குழுவின் தலைவரான லிசா பென்டர் என்ற வெள்ளை இனப் பெண்மணி, ”மினியாபொலிஸ் காவல் துறையின் நிர்வாக முறையைக் கலைத்துவிட்டு, மக்களின் பாதுகாப்புக்கான – உயிருக்கு உத்தரவாதம் தருவதான அமைப்பு முறையைக் கொண்டுவர வேண்டும்” என அக்கூட்டத்தின் தீர்மானத்தை வெளியிட்டார். இது ஒட்டுமொத்த அமெரிக்கக் காவல் துறையையும் சீர்படுத்த வேண்டுமென்ற, அனைத்து மக்களின் விருப்பத்தையும் அறைகூவுவதாக இருக்கிறது. போராட்டங்களை ஒடுக்குவதற்காக ட்ரம்ப்பால் இறக்கப்பட்ட, தேசிய பாதுகாப்புப் படைப் பிரிவுகள் நியூயார்க், சிகாகோ, ஃப்ளடெல்பியா மாகாணங்களிலிருந்து திரும்பப் பெறப்பட்டன. ஊரடங்கும் இந்நகரங்களில் விலக்கப்பட்டன. ஃப்ளாய்ட்டுக்கு நீதி வேண்டும் என்ற முழக்கம், இனவாதத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற ஜனநாயகக் குரலாக உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பாரிஸ் கம்யூன் கண்ட பிரெஞ்சு அரசாங்கம், பிரெஞ்சு காவல் துறையில் இனவாதம் முற்றாக சகித்துக்கொள்ள முடியாதது (Zero Tolerance) என்று அறிவித்துள்ளது.
தொற்றுநோய்க் கால ஊரடங்கையும் சமூக இடைவெளி பேண வேண்டிய அறிவுறுத்தலையும் உடைத்து நொறுக்கி, அறிவியல் தொழில்நுட்பத்தால் வளர்ந்திருக்கும் நாடுகளின் மக்கள் முகக்கவசங்களையும் தூக்கியெறிந்து, வீதிகளில் திரெண்டெழும் இந்த மகத்தான வரலாற்றுத் தருணத்தில், சுடும் உண்மையொன்றை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். என்ன அது? வெள்ளையின மக்களின் பங்கேற்பு அல்லாமல், கறுப்பின மக்கள் மட்டுமே இத்தனை பெரிய போராட்டங்களை, இத்தனை நாள் நீளும் அளவில் கட்டமைத்திருக்க முடியாது. கறுப்பின மக்கள் மட்டும் வீதியில் இறங்கியிருந்தால், கலவரம் என்ற பெயரில் துப்பாக்கிச் சூடு நடத்தி, ஓரிரு நாட்களிலேயே இந்தப் போராட்டங்களை வல்லரசுகள் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கும்.
சொந்த மக்களை அணுகும் விதமும் பிற இனத்தவரை அணுகும் விதமும்தான், ‘வளர்ந்த’ நாடுகளின் அரசியல் கொள்கைகளே. இக்கொள்கைகளில் உள்ளுறைந்த அளவில் மாற்றங்கள் ஏற்பட்டால் மட்டுமே, இன்று நிகழ்ந்து வரும் போராட்டங்கள் வெற்றியை ஈட்டியதாகப் பொருள்படும். ஏனென்றால், போராட்டங்களும் பேரணிகளும் இதற்கு முன்னரும் பலமுறை நிகழ்ந்துள்ளன. வேறுபாடு என்னவெனில், இம்முறை இனவாதத்துக்கு எதிரான கோபத்தின் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. இனவாதம் என்பது இருபுறமும் கூர்தீட்டப்பட்ட ஆயுதம் என்பதை வெள்ளையின மக்கள், நீண்ட மௌனத்திற்குப் பின் உணர்ந்துள்ளதை சமகாலத் தருணம் வெளிப்படுத்துகிறது.
பிளாக் லைவ்ஸ் ஆவணப் படத்தில் ‘சர்வதேச கறுப்பின விடுதலை ஒருங்கிணைப்பு’ (International Black Freedom Alliance ) என்ற இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர், ‘எங்களுக்கான வாய்ப்புகள் எதுவுமில்லை’ என்று சினத்துடன் கூறுகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் பெர்கூசனில், தெரு நாயைப் போல ஒரு கறுப்பின இளைஞரைக் காவல் துறை சுட்டுக் கொன்றதைச் சுட்டிக்காட்டி, ‘இங்கு எதுவும் மாறவில்லை’ என்று கொந்தளிக்கிறார் இன்னொரு கறுப்பர். ஒரு ரொட்டித் துண்டை பிச்சையாகப் பெறுபவர், கடும் நோயினில் கவனிப்பாரற்று தெருவில் கிடப்பவர், மனநோய் முற்றி வீதிகளில் அலைபவர், எவ்வித வேலையும் கிடைக்காமல் பட்டினியில் உழல்பவர், ஏதாவது குற்ற வழக்கில் சிக்கி பதுங்கி வாழ்பவர், குற்ற வழக்குகள் மிகுதியானால் எந்த நேரமும் காவல் துறையால் சுடப்பட்டு இறக்க நேரலாம் என்ற அச்சத்துடன் ஒளிந்து கொண்டிருப்பவர்கள் எனப் பல்வேறு கறுப்பின முகங்கள் படத்தில் ஆவணப்படுத்தப் பட்டிருக்கின்றன.
முன்னாள் அடிமைகளின் வழித்தோன்றல் தானே என்ற இளக்கார(ஏளன)ப் பார்வை, வெள்ளை இனவாதிகளை ஆட்டுவிக்கிறது. ‘கறுப்பன் குற்றம் இழைப்பவன்தான் என்ற முன்முடிவுகளுடனே நாங்கள் அணுகப்படுகிறோம்’ என்கிறார் மற்றொருவர். ‘நிறம் அழகுக்கான அளவுகோலாகத்தான் இன்னும் இருக்கிறது. நாங்கள் எங்கள் நிறத்தால் உதாசீனப்படுத்தப் படுகிறோம்’ என்று மனம் வெதும்புகிறார் ஒரு பதின்ம வயதுக் கறுப்பினப் பெண். அழகிய அமெரிக்காவின் களங்கமாய், குற்றச் செயல்கள் கொட்டிக் கிடக்கும் குப்பை மேடாய்த்தான், கறுப்பின ஏழை மக்கள் வாழும் சேரிகளை வெள்ளையினத்தவர் மட்டுமல்ல, எந்தவொரு வெளிநாட்டினரும் மதிப்பிடுவதாக் கூறும் ஒரு கறுப்பின இளைஞன், ”அப்படியான புறக்கணிக்கப்பட்ட – கண்காணிப்பிற்குள்ளாக்கப்பட்ட அவ்வாழிடத்தில் வாழ நேர்ந்ததால், எல்லோரையும் போல என்னைப் போன்றவர்களால் இயல்பாக நடமாடக்கூட முடிவதில்லை” என்ற வேதனையை வெளிப்படுத்தி, தன் இடுப்பில் மறைத்து வைத்திருக்கும் கைத்துப்பாக்கியை எடுத்துக்காட்டி ‘அதனால்தான், இதை விரும்புகிறேன்’ (It’s a reason, I like this) என்று பேசுவதை எளிதாகக் கடந்து விட முடியாது.
**தொடரும்**
�,”