உத்திரமேரூர் அடுத்த மாத்தூரில் உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே மாத்தூர் பகுதியில் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் 40க்கும் மேற்பட்டோர் கல் உடைத்தல் போன்ற கூலி வேலை செய்து வருகின்றனர். இன்று காலை எதிர்பாராத விதமாக குவாரியின் ஒரு பகுதி சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் விபத்தில், 6 லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரங்களுடன் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கற்குவியலில் சிக்கியுள்ளனர். ஜேசிபி இயந்திரம் மூலம் கற்களை உடைத்த போது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் கட்டமாக 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் கற்களுக்கு அடியில் சிக்கியிருப்பதால் உயிர்ப்பலி அதிகரிக்கலாம் என்றும் தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர். தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர், பாறைகளுக்கு அடியில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாறைகள் சரிந்து விழுந்ததால் மீட்புப் பணியில் சிக்கல் நீடிப்பதாகத் தெரிகிறது. தற்போது இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், வெடி பொருட்களைக் கொண்டு பாறைகளை உடைப்பதால் அந்த குவாரி பகுதிகளில் உள்ள வீடுகளும் சேதமடைவதாகப் புகார் எழுந்துள்ளது.
**-பிரியா**
�,