�டிஜிட்டல் திண்ணை: இளைஞர்கள் கையிலெடுத்த டார்ச்: கமலுக்கு எத்தனை சதவிகிதம்?

public

மொபைல் டேட்டாவை ஆன் செய்தோம். வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்தது.

“தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்குமான இடைவெளி அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு கட்சியும் எவ்வளவு வாக்குகள் வாங்கும் என்ற எதிர்பார்ப்பும் ஆய்வும் அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.

ஆளுந்தரப்பான அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் ஒருசேர விவாதித்து வரும் விஷயம் இந்தத் தேர்தலில் முதன் முறையாக களம் கண்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் எத்தனை சதவிகிதம் வாக்குகளைப் பெறும் என்பதைத்தான். திமுக தலைவர் ஸ்டாலின், ‘கமலுக்கு எப்படி விழுந்திருக்கு. நமக்கு வரவேண்டிய அரசுக்கு எதிரான ஓட்டைப் பிரிக்கிறாரா?’ என்று நிர்வாகிகளிடம் விவாதித்திருக்கிறார்.

தேர்தலுக்கு மறுநாள் சென்னை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உளவுத் துறை அதிகாரிகளை சந்தித்தபோது, ‘அம்மா இருந்தப்ப முதல் தலைமுறை ஓட்டுகளை நாமதான் வாங்கினோம். இப்ப அதெல்லாம் கமலுக்கு போகும்னு பலரும் பேசுறாங்களே. என்ன நிலவரம்?’ என்று கேட்டிருக்கிறார்.

மத்திய, மாநில உளவுத் துறைகளின் ரிப்போர்ட் படி புதிய வாக்காளர்கள், இளைஞர்கள், மாணவர்களின் வாக்குகளில் அதிகம் பெறுவது கமல்ஹாசன்தான் என்பது தெரியவந்திருக்கிறது. முதன்முறை வாக்களிக்கும் கல்லூரி மாணவர்கள் பலரும், அவர்களின் பெற்றோர்களும்கூட இம்முறை டார்ச் லைட் சின்னத்துக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பது தேர்தல் அன்றே விவாதப் பொருளானது. சென்னை, கோவை, திருச்சி போன்ற மாநகரங்களில் இருந்து சிற்றூர்கள், கிராமங்கள் வரை கமல்ஹாசனின் பிரச்சார பாணியும், அவரது அணுகுமுறையும் மக்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது என்கிறார்கள்.

குறிப்பாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இதுவரை கையாண்டு வந்த பிரச்சார உத்திகளை மறந்தும்கூட தொட மறுத்துவிட்டார் கமல்ஹாசன். ஒவ்வொரு வேட்பாளருக்காகவும் பிரச்சாரம் செய்யும்போது அந்த வேட்பாளரைக் கொஞ்ச நேரம் பேச வைத்துவிட்டு பக்கத்தில் டார்ச் லைட் அடித்துக்கொண்டு நிற்பார் கமல்ஹாசன். அதுவரை மக்கள் கமலையும் பார்ப்பார்கள், வேட்பாளரின் பேச்சையும் கேட்பார்கள். அதன் பிறகு கமல் பேசுவார். இந்தப் பிரச்சார அணுகுமுறை இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. ஏனெனில் இளைஞர்கள் இப்போது பார்வையாளர்களாகத் தள்ளி நிற்க விரும்புவதில்லை, பங்கேற்பாளர்களாக இருக்கவே விரும்புகிறார்கள். அது கமல் கட்சியில் இயல்பாக நடக்கிறது என்பதுதான் இளைஞர்கள் கமல் பக்கம் திரும்புவதற்கான முக்கியக் காரணம்.

கோவை மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மகேந்திரன் இளைஞர்களுக்கு ஒரு பரிசுப் போட்டி வைத்திருந்தார். இளைஞர்களைக் கவரும் வகையில் பிரச்சாரம் செய்வது பற்றி யோசனை சொல்ல வேண்டும். சிறந்த யோசனைகளுக்கு 200 ரூபாய் பரிசும் வழங்கியிருக்கிறார். இதன் மூலம் இளைஞர்கள் உலகத்தில் நுழைய இளைஞர்கள் மூலமே கமலுக்கு வழி கிடைத்திருக்கிறது.

இது தவிரவும் இளைஞர்களிடம் சென்று சேர்வதற்காக ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பை பாசிட்டிவாக பயன்படுத்தியிருக்கிறார் கமல். மற்றவர்கள் எல்லாம் தங்களின் எதிர்க்கட்சியினரை விமர்சனம் செய்யும் நெகட்டிவ் வீடியோக்களையே பரப்பி வந்தார்கள். ஆனால் கமல் தன் கட்சி வேட்பாளர்களுக்கு கறாரான உத்தரவுகளைப் போட்டிருக்கிறார். காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பிரச்சாரம். ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணி முதல் 4 மணி வரை ஒவ்வொரு வேட்பாளரும் ஃபேஸ்புக் லைவ் போக வேண்டும். அதில் மக்களோடு கலந்துரையாட வேண்டும். அந்தந்தத் தொகுதி மக்களோடு லோக்கல் பிரச்னைகள் பற்றி கலந்து பேசி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதே கமலின் உத்தரவு. மக்கள் நீதி மய்யத்தின் ஒவ்வொரு வேட்பாளரும் ஃபேஸ்புக் லைவ் மூலம் பெருவாரியான இளைஞர்களோடு பேசியிருக்கின்றனர். இதுவும் இளைஞர்களிடம் கமல் பற்றிய பாசிட்டிவ் எனர்ஜியை பரப்பியிருக்கிறது என்பதும் தேர்தல் நாளன்று தெரியவந்த தகவல்.

திமுக, அதிமுகவுக்கு மாற்று என்று வந்து நின்ற விஜயகாந்த் அதன் பிறகு அவர்களோடே போய் கரைந்துவிட்டார். அதுமாதிரி இல்லாமல் கமல்ஹாசன் நிதானமாய், மக்கள் பிரச்சினைகள் வழியாக திமுக, அதிமுகவை எதிர்ப்பார் என்ற எண்ணம் இளைஞர்களிடையே பதிந்திருக்கிறது. இதன் காரணமாகதான் இளைஞர்கள் டார்ச் லைட்டை கையில் எடுத்திருக்கிறார்கள்.

தேர்தலுக்குப் பின் கமல் கட்சியின் நிர்வாகிகளிடமும், வேட்பாளர்களிடமும் பேசியிருக்கிறார். அதிமுக பலரை விலைபேசியும் விலைபோகாமல் கடைசி வரை களத்தில் நின்றமைக்குப் பாராட்டு சொன்ன கமல், ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு சதவிகிதம், அதில் மநீமவுக்கு எவ்வளவு வரும் என்பது பற்றியெல்லாம் விவாதித்திருக்கிறார்.

கமல் கட்சியில் இருக்கும் முன்னாள் காவல் துறை அதிகாரிகள் தங்களின் உளவுத் துறை நண்பர்களிடம் பேசியிருக்கிறார்கள். அப்போது டார்ச் லைட் புதிய வாக்காளர்கள், இளைஞர்களிடம் எதிர்பாராத அளவுக்குச் சென்று சேர்ந்திருப்பதை உளவுத் துறையினரும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இதையெல்லாம் வைத்து, ’தேர்தலுக்கு முன்பு வரை இரண்டு சதவிகிதம் வாக்குகள்தான் பெறுவார் என்று நம்மை ஒதுக்கித் தள்ளினார்கள். ஆனால் தேர்தலுக்குப் பிறகு நாம் பத்து சதவிகிதத்தை நோக்கி நெருங்குகிறோம்’ என்று தன் வட்டத்தில் நம்பிக்கையாய் சொல்லிக்கொண்டிருக்கிறாராம் கமல் ” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து விட்டு ஆஃப் லைனுக்குப் போனது வாட்ஸ் அப்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *