விவசாயிகள்- தலித் பிரச்னை: இருஅவைகளும் ஒத்திவைப்பு!

public

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், விவசாயிகள் பிரச்சனை, தலித் மக்கள் மீது தாக்குதல் மற்றும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் குண்டர்களின் தாக்குதல் போன்ற விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று ஜூலை 17ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பின்பு, இன்று ஜூலை 18ஆம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடியபோது, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரி கட்சி மற்றும் ராஷ்டிர ஜனதா தளம் கட்சிகளின் உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இரு அவைகளிலும் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும், ஜய் மல்லையாவை வெளிநாட்டுக்குச் செல்ல அனுமதித்தது யார்? விவசாயிகள் பிரச்னையை திசை திருப்பும் விதமாகச் செயல்படுவதை கண்டித்தும் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் தாங்கிப் பிடித்தவாறு அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையில் பயங்கர கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அதையடுத்து, அவையை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பல்வேறு முறை ஒத்தி வைத்தார். ஆனாலும், தொடர்ந்து மக்களவையில் விவசாயிகள் பிரச்சனை, பசு குண்டர்கள் தாக்குதல் போன்ற விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து, தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

மாநிலங்களவையிலும், பகுஜன் சமாஜ், திரிணாமூல் காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள், பல்வேறு பிரச்சனைகள் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சஹரன்பூர் தலித் இன மக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக, உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி கேள்வி எழுப்பினார். அப்போது, அவருக்கும், மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியனுக்குமிடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. அதையடுத்து, தனது ஆசனத்தில் இருந்து எழுந்து மாயாவதியை சமாதானப்படுத்த பி.ஜே. குரியன் முயன்றார். ஆனால், அதில் சமரசமடையாத மாயாவதி, தனது எம்.பி.பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன் என்று கூறியதையடுத்து அவருடன் சேர்ந்து பிற சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்களும் வெளிநடப்பு செய்தனர்.

தலித் மக்கள் மீதான தாக்குதல், மாட்டிறைச்சி தொடர்பான படுகொலைகள், விவசாயிகள் பிரச்னை தொடர்பாக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், பிற்பகல் 3 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் அவை மீண்டும் கூடியபோது, தலித் மக்கள் மீதான தாக்குதல் குறித்து அவையில் பேசுவதற்கு வாய்ப்பளிக்க மறுக்கப்படுவதைக் கண்டித்து சமாஜ்வாதி கட்சியினர் தொடர்ந்து கூச்சலிட்டதால் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *