பென்ஷன் திட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: போக்குவரத்து ஊழியர்கள்!

public

தமிழக முழுவதும் அரசு போக்குவரத்துத் துறையில் பணியாற்றிய ஓய்வூதியர்களுக்கு கடந்த மாதம் வழங்க வேண்டிய பென்ஷன் தொகை நேற்று வரை வழங்கப்படவில்லை.

ரூ.400 கோடி பற்றாக்குறையால் ஓய்வூதிய திட்டம் திணறி வருவதால், அரசே ஓய்வூதிய திட்டத்தை ஏற்க வேண்டும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை, விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி, கும்பகோணம், சேலம், கோயம்பத்தூர், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் என 8 பிரிவுகள் உள்ளன. இந்த பிரிவுகளின் கீழ் 24 மண்டலங்களும், 306 கிளை அலுவலகங்களும் உள்ளன. இதில் ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 448 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் கடந்த 1998ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இது கடந்த 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு அமலுக்கு வந்தது. இதற்காக, ’ஓய்வூதிய நிதி அறக்கட்டளை’ என்ற தனி குழு ஏற்படுத்தப்பட்டது. அக்குழுவில், தொ.மு.ச, ஏஐடியூசி, சிஐடியூ ஆகிய தொழிற்சங்கங்கள் இடம் பெற்றன. போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களிடமிருந்து அவர்களது ஊதியத்தில் 12% பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்வூதிய நிதி அறக்கட்டளையில் செலுத்தப்படும். அதேபோல், போக்குவரத்துக் கழக நிர்வாகத்தின் பங்காகவும் 12% அறக்கட்டளையில் செலுத்தப்படும். தொழிலாளர்கள் ஓய்வுபெறும்போது, அவர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை ஓய்வூதியத் தொகையாக மாதம்தோறும் வழங்கப்படும்.

ஆனால், ஓய்வூதியகாரர்களுக்கு வழங்கப்படும் பென்ஷன் தொகை கடந்த சில ஆண்டுகளாக முறையாக தருவதில்லை. கடந்த 2008-ஆம் ஆண்டில் 24,287 அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இதற்காக 12.06 கோடி தேவைப்பட்டது. ஆனால் 11.18 கோடி மட்டுமே இருந்தது. இதனால் மாதம் ஒன்றுக்கு ரூ.88 லட்சம் பற்றாக்குறையாக இருந்தது. இதுபோன்று ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் வழங்க வேண்டிய ஓய்வூதியமும் நேற்று வரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது, ஓய்வுபெற்ற 64 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களுக்கு கடந்த மாதம் பென்ஷன் தொகை வழங்கப்படவில்லை. இதை வழங்குவதற்கு ரூ.74 கோடி தேவைப்படுகிறது. ஆனால், தற்போதைய நிலவரப்படி பென்ஷன் வழங்குவதற்கான பற்றாக்குறை ரூ.400 கோடியாக உள்ளது. இந்தப் பற்றாக்குறையை சமாளிக்க பணிபுரியும் தொழிலாளர்களின் நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அந்த நிதியும் மாதம்தோறும் வந்து சேராததால், ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியத்திற்கான பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.

இதனால், ஓய்வூதியதாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரி 6ஆம் தேதி நாகர்கோயிலில் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். ஜனவரி 7 ம் தேதி போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தை ஓய்வூதியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் இந்நிலையில் ஓய்வு பெற்ற 64 ஆயிரம் பேருக்கு கடந்த டிசம்பர் மாத பென்ஷன் நேற்றுவரை வழங்கபடவில்லை. எனவே, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் பென்ஷன் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *