}பாலியல் குற்றவாளிச் சாமியாருக்கு ஆதரவாக பாஜக!

public

பாலியல் குற்றவாளி குர்மீத் ராம் ரஹீம் சிங் கைதான விவகாரம் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பற்றி எரியும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் நடத்திவரும் கண்மூடித்தனமான தாக்குதல்களால் இன்று (ஆகஸ்டு 26) பகல் நிலவரப்படி 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் பாஜக எம்பி சாக்ஷி மகராஜ் ராம் ரஹீமுக்கு ஆதரவாகப் பேசி அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார்.

ஹரியானா மாநிலத்தில் சாமியாராக உள்ள குர்மீத் ராம் தன் ஆசிரமத்தில் உள்ள இரண்டு சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு, அது தொடர்பாக நடைபெற்றுவந்த வழக்கு விசாரணையில் நேற்று அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் ஹரியானா, பஞ்சாபில் வன்முறையில் இறங்கினார்கள். பெரும் கலவரத்தில் ஏற்பட்டது. கலவரத்தில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பல பகுதிகள் முடங்கியுள்ளன.

இந்நிலையில் பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றம் இரு மாநில அரசுகளுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

“கலவரம் வெடிக்கும் எனத் தெரிந்தும் ஏன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை? கலவரத்தை முன்கூட்டியே ஏன் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை?” என நீதிபதிகள் இரு மாநில அரசுகளையும் கேட்டிருக்கிறார்கள். மேலும் குர்மீத் சொத்துகளை முடக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அந்த சொத்துகளை விற்று நஷ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல் சாமியார் குர்மீத் மீதான கைது நடவடிக்கை என்பது இந்தியக் கலாசாரத்தின் மீதான தாக்குதல் என்று பாஜக எம்பி சாக்ஷி மகராஜ் பேசியிருக்கிறார். செய்தியாளர்களுக்கு சாக்ஷி மகராஜ் அளித்த பேட்டியில்,

“ஒரு நபர் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதற்காக தண்டிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கு ஆதரவாகக் கோடிப் பேர் உள்ளனர். யார் சரி? ஒரு கோடிப் பேர் குர்மீத் ராமுடன் உள்ளனரா, இல்லை அந்தப் பெண்களுடன் உள்ளனரா? நடந்துவரும் கலவரங்களுக்கு நீதிமன்றமும் காரணமாகும், ஒரு சாரரை மட்டும் குற்றம் சொல்வது சரியில்லை. குர்மீத் ராம் தண்டிக்கப்பட்டது இந்தியக் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்” இவ்வாறு சர்ச்சையை கிளப்பும் விதமாக பேசியுள்ளார்.

சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றம் நிரூபிக்கட்ட நிலையில்தான் குர்மீத் ராம் ரஹீம் சிங் தண்டிக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு எதிரான தண்டனை இந்தியக் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்றால் சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்வதுதான் இந்தியக் கலாசாரமா எனப் பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். சாமியாரின் ஆதரவாளர்கள் நடத்திவரும் கொடூரமான தாக்குதல்களை விட சாக்ஷி போன்றோரின் கருத்து வன்முறை மிகக் கொடூரமாக இருக்கிறது என்றும் சிலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *