@த்ரிஷா: ஜெயலலிதாவாக ஆசை!

public

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவானால், அதில் நான் ஜெயலலிதாவாக நடிக்க ஆசை என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. கடந்த பதினைந்து ஆண்டுகாலமாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சரி சமமாக அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தவர். சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட தெளிவான தமிழ் பேசும் சிறந்த நடிகை.

திரைத் துறையில் படங்கள் நடிப்பதற்கு முன்பே மாடலிங்கில் பிசியாக இருந்த த்ரிஷா, மிஸ் மெட்ராஸ், மிஸ் சேலம் என நிறையப் பட்டங்களைப் பெற்றுள்ளார். மாடலிங் செய்து கொண்டிருந்த சமயத்தில் பேட்டி ஒன்றில் எக்காரணம் கொண்டும் எந்தச் சூழ்நிலையிலும் சினிமாவிற்கு வர மாட்டேன் என த்ரிஷா உறுதியாகக் கூறி இருந்தார்.

1999ஆம் பிரசாந்த் – சிம்ரன் நடிப்பில் உருவான ஜோடி திரைப்படத்தில், சிம்ரனின் தோழியாக த்ரிஷா தோன்றியிருப்பார். இதுவே அவரின் முதல் திரை தோற்றமாகும். இதைத் தொடர்ந்து 2002ஆம் ஆண்டு இயக்குநர் அமீரின் இயக்கத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தில் நடித்தார். ஹீரோயினாக அவர் அறிமுகமான முதல் திரைப்படம் இதுவே.

தமிழ்த் திரையுலகின் கனவுக்கன்னியாக மாறிய த்ரிஷா கில்லி, சாமி, உனக்கு இருபது எனக்கு பதினெட்டு என வெகுஜன படங்களுக்கும், விண்ணைத்தாண்டி வருவாயா, அபியும் நானும், கொடி என நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார்.

இதன் தொடர்ச்சியாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படமாக த்ரிஷா நடிப்பில் கடந்த வெள்ளியன்று மோகினி திரைப்படம் வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனம் பெற்றிருந்தாலும் த்ரிஷாவின் நடிப்பு பேசப்பட்டு வருகிறது. இந்தப் படம் வெளியாவதற்கு முன் இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் த்ரிஷா கலந்துகொண்டார். அப்போது ‘ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்தால் நடிப்பீர்களா?’ என்ற கேள்வியைச் செய்தியாளர்கள் எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த த்ரிஷா, “சென்னையில் ஜெயலலிதா படித்த பள்ளியில்தான் நானும் படித்தேன். என்னுடைய 10ஆவது வயதில், என் பள்ளி விழாவுக்கு அவர் வந்திருந்தார். அவரைப் பார்த்ததிலிருந்தே, அவர் மீது பாசம், மரியாதை. அவர் கையால் வாங்கிய சினிமா விருது புகைப்படத்தைத் தான் இப்போதும் என் ட்விட்டரின் முகப்புப் படமாக வைத்திருக்கிறேன். ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றைச் சினிமா படமாக எடுத்தால், அவரது கதாபாத்திரத்தில் நடிக்க நான் தயார். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. ஆனால், எனக்கு அரசியல் ஆர்வமெல்லாம் கிடையாது. நடிகையாகவே சந்தோஷமாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார். ஏற்கெனவே, ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தனக்கு ஆர்வம் இருப்பதாகப் பல பேட்டிகளில் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *