சிறப்புப் பார்வை: ஒரே தேசம், ஒரே தேர்தல்: நடைமுறையில் சாத்தியமா?

public

‘நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதன் மூலம் அரசின் செலவினங்களைக் குறைக்க முடியும்’ – நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிகழ்த்திய இந்த உரைதான் இன்றைய இந்திய அரசியல் களத்தின் முக்கிய விவாதப் பொருள்.

2018ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 29ஆம் தேதியன்று தொடங்கியது. இந்த வருடத்தின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்த வேண்டியது அவசியம். குடியரசுத் தலைவராக இரண்டு அவைகளின் கூட்டத்தில் இவர் உரை நிகழ்த்துவதே இதுவே முதன்முறை. சௌபாக்யா மின்சார விநியோகத் திட்டம், முத்ரா வங்கித் திட்டம் என மத்திய அரசின் பல செயல் திட்டங்களைப் பற்றியும் பேசிய குடியரசுத் தலைவர் அடுத்ததாகப் பேசியது, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றித்தான்.

“நாட்டின் செலவினங்களைக் குறைக்க நாடாளுமன்றத் தேர்தலையும், சட்டன்றத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து அனைத்து மத்திய மாநில அரசுகளும் ஒன்றுசேர்ந்து யோசிக்க வேண்டும்” என்ற குடியரசுத் தலைவரின் உரையை மேலோட்டமாகக் கேட்கும்போது இது இந்தியாவின் பொருளாதாரத்துக்குப் பயனளிக்குமென்றாலும், நடைமுறையில் இது சாத்தியமா என்ற சந்தேகத்தைத்தான் அதிகளவில் கிளப்பியுள்ளது.

**அரசியல் கட்சிகளின் நிலையில்லாத் தன்மை**

இந்தக் கருத்து இந்தியாவில் பேசப்படுவது இது முதன்முறையல்ல. அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது, 1999இல் இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக பி.பி.ஜீவன் ரெட்டி இருந்தபோது முதன்முதலில் பரிந்துரை செய்யப்பட்டது. அதற்கு முக்கியக் காரணம், 1996இல் தொடங்கி 2004ஆம் ஆண்டுக்குள் நடைபெற்ற பொதுத் தேர்தல்களின் மூலம், மக்களவையின் ஆயுள் ஐந்தாண்டுகள் தொடர்ந்து நீடிக்கவில்லை என்பதே.

பொதுவாக எந்த ஒரு கட்சியும் மத்தியில் தனக்குச் சாதகமான சூழ்நிலை இருப்பதாக உணரும்போது அதையே மூலதனமாக்கி அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிப்பதற்காக ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ எனப் பேசுவது வழக்கம்தான். ஆண்ட காங்கிரஸ் ஆரம்பித்த அதே யுக்தியைத்தான் இன்று ஆள்பவர்களும் கடைப்பிடிக்கிறார்கள். ஆனால், அதிக கட்சிகளையும், அதைவிட அதிகமான கட்சிப் பூசல்களையும் உடைய இந்தியாவுக்கு இது பொருந்துமா என்பதை உணர, 1952இல் ஒரே தேர்தலாக ஆரம்பித்த இந்தியாவில் எப்படி இந்த முறை மாறிப்போனது என யோசித்தாலே போதும்.

1951-52ஆம் ஆண்டில் ஆரம்பித்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு, 1957, 1962, 1967 ஆகிய காலகட்டங்களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மூலம், முழு ஐந்தாண்டுகள், மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்திருக்கிறது. அதன் பிறகு, 1977இல் வந்த ஜனதா கட்சி ஆட்சியும், 1989இல் ஆரம்பித்த தேசிய முன்னணி ஆட்சியும், 1996 முதல் 1998 வரையிருந்த ஐக்கிய முன்னணி ஆட்சியும் ஐந்தாண்டுகளை நிறைவு செய்யவில்லை.

ஏனெனில் இங்கே கட்சிகளுக்கு இடையே மட்டுமே பூசல்கள் இல்லை. உட்கட்சிப் பூசல்களேதான் பலமுறை அரசியல் மாற்றத்துக்கு வித்திட்டுள்ளன. குறிப்பாக 1978 முதல் 1998 வரையிலான காலக்கட்டத்தில் உட்கட்சிப் பூசல்களினால் மட்டுமே பலமுறை மக்களவை கலைக்கப்பட்டுப் பொதுத்தேர்தலைச் சந்திக்க நேர்ந்தது. அதன்பிறகு, 1977இல் காங்கிரஸ் தவிர்த்து முதன்முதலாக மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. ஆனால், அவரது கட்சிக்குள்ளே ராஜநாராயணன் மற்றும் சரண்சிங் போன்றோரின் செயல்பாட்டினால் அவரது ஆட்சி கலைந்து. 1979இல் சரண்சிங் தலைமை ஆட்சியைப் பிடித்தது. பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் சரண்சிங் ஆட்சி கவிழ, 1980இல் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ். ஆனால், இந்த முறையும் ஐந்தாண்டு கால ஆட்சி நிறைவடையவில்லை.

இந்திரா காந்தியின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்ப ராஜீவ் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். போஃபர்ஸ் ஊழலைத் தொடர்ந்து ராஜீவ் காந்தியின் ஆட்சியும் கலைய, அதன்பிறகு வந்த ஜனதாதளக் கட்சியைச் சேர்ந்த வி.பி.சிங் ஆட்சி வெறும் 343 நாள்கள் மட்டுமே பதவி வகித்தது. இதன்பிறகும் 1990இல் சந்திரசேகர், 1991இல் நரசிம்மராவ், 1996இல் அடல் பிஹாரி வாஜ்பாய், அதே ஆண்டில் தேவகவுடா, 1997இல் ஐ.கே.குஜ்ரால் வரை கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் மத்திய அரசே மாறும் அரசாகத்தான் இங்கே இருந்துள்ளது.

இந்த மாதிரியான காலகட்டங்களில் ஒவ்வொரு முறை மக்களவைத் தேர்தலின்போதும் இந்தியாவின் 29 மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்துவது சாத்தியமா?

இன்றைய காலக்கட்டத்தை நோக்கும்போது ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் ஆளும்கட்சி பெரும்பான்மையை இழக்கும்பட்சத்தில் அந்த மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக நாடு முழுவதும் தேர்தல் நடத்த முடியுமா அல்லது பொதுத்தேர்தல் வரைக்கும் ஒரு மாநிலத்தின் செயல்பாட்டையே அரசாங்கம் இல்லாமல் நிறுத்தி வைப்பதுதான் நடக்குமா? இந்த இரண்டில் எதற்குமே வாய்ப்பில்லை என்னும்போது எப்படி இங்கே ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்பதெல்லாம் சாத்தியமாகும்?

**மத்தியில் அதிகாரம் கூடும்**

இந்தியா ஓர் அரைக் கூட்டாட்சித் (quasi federal) தத்துவத்தைப் பின்பற்றக் கூடிய நாடென்பதால் இங்கே அரசியலமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசுக்குத்தான் அதிக அதிகாரம். மாநிலத்துக்குக் குறைவான அதிகாரம் உள்ள நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் என்னும்போது அது மாநிலங்களின் உரிமையை இன்னும் பாதிக்கும். மத்தியில் ஆளும் அரசு மாநிலங்கள் தங்களது கொள்கைகளிலிருந்து மாறும்போது எந்த நேரமும் அரசியலமைப்பு விதி 356ஐப் பயன்படுத்திக் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த முடியும். இதனால் எந்த மாநிலமும் இந்த ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ என்ற கருத்தை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இல்லை.

**பாஜக வியூகம்**

“இந்தியாவில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஏதாவதொரு தேர்தல் நடந்துகொண்டே இருப்பதால் இங்கே செலவினங்கள் கூடிவிட்டன” என்ற நிதி ஆயோக்கின் அறிக்கையை காரணம்காட்டி நாட்டின் செலவினங்களைக் குறைக்கத்தான் ஒரே நேரத்தில் நடத்த சொல்கிறோம் என்பதுதான் மத்திய அரசின் வாதம். ஆனால், உண்மை நிலவரம் வேறு. 2019ஆம் ஆண்டு நடக்க வேண்டிய மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து இப்போதே களமிறங்கிவிட்டது ஆளும் மத்திய அரசு. அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பாக நடக்கவிருக்கும் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பொதுத்தேர்தல் முடிவுகளில் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். பாஜக ஆளும் இந்த மூன்று மாநிலங்களிலும் மத்திய ஆட்சிக்கு எதிரான நிலை உள்ளது. இந்த மூன்று மாநிலத் தேர்தலில் ஒன்றில் தோற்றாலும் அது பாஜகவின் பொதுத்தேர்தல் வெற்றியை அதிக அளவில் பாதிக்கும். அதேசமயம், மத்திய அரசுக்கான தேர்தலோடு சேர்த்து இந்த மாநிலங்களின் தேர்தல்கள் நடைபெற்றால், மத்திய அரசு சார்ந்து பாஜகவுக்கு உள்ள சாதகமான நிலவரம் இந்த மாநிலங்களின் தேர்தல்களிலும் சாதகமாக அமையலாம் என்ற கணக்கு பாஜகவுக்கு இருக்கக்கூடும். எனவே, பொதுத்தேர்தலை விரைவில் நடத்த வேண்டுமென மத்திய அரசு ஆலோசித்துவருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த வேளையில் குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள கருத்து சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று. அதாவது, இந்தக் கருத்து ஏன் இப்போது வெளியிடப்படுகிறது என்று சிந்திக்க வேண்டும்.

ஒரு கட்சியின் வெற்றி வாய்ப்பைக் கருதி ஒரு நாட்டின் குடியரசுத் தலைவர் ஒரு கருத்துருவை முன்வைப்பதா என்பதும் விவாதத்துக்கு உரியதாகியிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் ‘சுதந்திரம்’ மத்திய அரசினால் எந்த அளவு மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பின் மூலமாக இந்தியாவே பார்த்தது. இந்த நிலையில் ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்று வந்தால் அது ஜனநாயகத்தைவிட ஜனநாயகத்தின் பெயரிலான சர்வாதிகாரத்துக்கே சிவப்புக் கம்பளம் விரிக்கும்!�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *