சிறப்புக் கட்டுரை: விவசாயக் குடும்பங்களின் நிலை! – அனிருத் கிருஷ்ணா

public

இந்திய விவசாயிகளுக்கு அரசாங்கம் உரிய விலை வழங்குவதில்லை. கடந்த 30 ஆண்டுகளாக இந்திய விவசாயக் குடும்பங்களின் நிலை மெல்ல மெல்லச் சரிந்துவிட்டது. ஒரு விவசாயியின் நிலத்தில் விளையும் பொருளை வைத்து அவரது குடும்பத்துக்கான தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ள முடியாது.

வேளாண்மையில் வணிக முறைகளோ, குறைந்தபட்ச ஆதரவு விலையோ மட்டும் போதுமானது என்று கூறிவிட முடியாது. விவசாயத்தில் களத்தில் இறங்கி வேளாண்மை செய்யும் இளைஞர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துவிட்டது.

இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் ஒரு விவசாயக் குடும்பத்திடம் சராசரியாக மூன்று ஹெக்டேர் நிலம் இருக்கும். ஆனால், தற்போது சராசரியாக ஒரு விவசாயக் குடும்பத்திடம் ஒரு ஹெக்டேர் நிலம் மட்டுமே இருக்கிறது. ஒரு விவசாயி தன் முன்னோர்கொண்டிருந்த நிலத்தில் மூன்றில் ஒரு பங்கைத்தான் தற்போது பெற்றிருக்கிறார். நிலத்தின் அளவு குறைந்திருந்தாலும், உற்பத்தியில் நல்ல பலன் கிடைத்திருந்தால் இது ஒரு பெரிய பிரச்னையாக இருந்திருக்காது. ஆனால், தாராளமயமாக்கத்துக்குப் பிறகு விவசாயத்தில் மாநில அரசுகளின் முதலீடு மெல்ல மெல்லக் குறைக்கப்பட்டுவிட்டது. இதனால் அதிகளவிலான விளைச்சல் தவிர்க்கப்பட்டது. அரசாங்கத்தின் கால்வாய்களும் பல வருடங்களாக விரிவாக்கம் செய்யப்படவில்லை. 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு 20 வருடங்களுக்கும் மேலாக 17 மில்லியன் ஹெக்டேர் நிலங்களுக்கு மட்டுமே கால்வாய்கள் மூலமாகப் பாசனம் செய்யப்படுகிறது. இது 20 வருடங்களுக்கும் மேலாக விரிவாக்கம் செய்யப்படாமலேயே உள்ளது.

அரசாங்கத்தின் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க நடவடிக்கைகளும் ஆண்டுக்கு ஆண்டு வலுவிழந்துகொண்டே போகிறது. வேளாண் பல்கலைக்கழகங்களுக்கும் போதுமான அளவுக்கு நிதி வழங்கப்படுவதில்லை என்று அரசாங்கத்தின் கமிஷன் அறிக்கை கூறுகிறது. பொருளாதாரத் தாராளமயமாக்கத்துக்குப்பிறகு வேளாண் துறையில் முதலீடுகள் பாதியாகக் குறைந்துவிட்டதாக உலக வங்கியின் குழு கூறுகிறது.

சீனாவில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 6,000 கிலோ அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 2,000 கிலோ அரிசியே உற்பத்தி செய்யப்படுகிறது. தாய்லாந்தில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 1,600 கிலோ சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவிலோ ஒரு ஹெக்டேர் நிலத்தில் 800 கிலோ சோளம்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. சீனாவில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 3,000 கிலோ பருத்தி உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவிலோ ஒரு ஹெக்டேர் நிலத்தில் சராசரியாக 650 கிலோ பருத்தியே உற்பத்தி செய்யப்படுகிறது. இவை அனைத்தும் விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தில் நெருக்கடியை உருவாக்கிவிட்டது. 1990ஆம் ஆண்டில் ஒரு விவசாயக் குடும்பத்தின் நிலத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் பலன்களில் 60 சதவிகிதம் அந்தக் குடும்பத்துக்கே சேரும். ஆனால், தற்போது 30 சதவிகித பலன்களே கிடைக்கிறது. பிறகு தேவையான வருமானம் விவசாயிகளுக்கு எப்படிக் கிடைக்கிறது? இப்பிரச்னைகளால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியே தற்போது ஏற்பட்டுள்ள கிளர்ச்சிகளுக்குக் காரணமாகும்.

கிராமப்புறங்களில் இருக்கும் இளைஞர்களுக்குக் குறைவான தரத்திலான கல்வியே கிடைக்கிறது. இதனால் தினசரி கூலி வேலைகளுக்குப் போவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை. தொழிலாளிகளாக வேலைபார்ப்பதால், விவசாயத்தில் ஏற்படும் நிதி நெருக்கடியை அவர்களால் ஈடுகட்ட முடியவில்லை. லாபத்துடன் தொழில் செய்யும் நிலையே இந்திய விவசாயிகளுக்கு கிடையாது. சில சமயங்களில் அவசரக் காலத்தில் குடும்பமே நிதி நெருக்கடியில் சிக்கிக்கொள்ளும். எடுத்துக்காட்டாக, குடும்பத்தில் ஒரு நபருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்பட்டுவிட்டால், அந்தக் குடும்பமே வறுமையில் தள்ளப்பட்டுவிடும்.

நகர்ப்புறங்களில் வாழும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உயர்தரமான வாழ்வினை தொலைக்காட்சிகள் அழகாகக் காட்டுகின்றன. இத்தகைய அழகான உலகில் இருந்து நாம் விலக்கப்பட்டு விட்டோம் என்ற எண்ணம் கிராமப்புற குழந்தைகளின் மனதில் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இது மட்டுமே ஒருவரை விரக்தியில் ஆழ்த்தப் போதுமானதாகும். நகர்ப்புறங்களில் இருக்கும் இளைஞர்கள் மட்டும் நல்ல வேலை கிடைத்து, பணம் படைக்கும் திறன் பெறுகின்றனர். ஆனால், கிராமத்தில் பிறந்ததற்காக நாம் தொழிலாளிகள் ஆக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறோமே என்ற எண்ணம் கிராமப்புற இளைஞர்களுக்குத் தோன்றும் வாய்ப்புகள் ஏராளம்.

மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு கிராமப்புற மக்களே இருக்கின்றனர். இருப்பினும் உயர்தர பொறியியல் மற்றும் தொழில் மேலாண்மை கல்வி நிறுவனங்களில் 5 சதவிகித மாணவர்களே கிராமப்புறங்களில் இருந்து வருகின்றனர். மீதமுள்ள மாணவர்கள் நகர்ப்புறங்களில் உயர்தர கல்வி பெற்றவர்களாகவே இருக்கின்றனர்.

சுதந்திரம் பெற்று இருபது அல்லது முப்பது ஆண்டுகள் வரை கிராமப்புறங்களில் கல்வி நிறுவனங்கள் எதுவும் இல்லை. முக்கியமாக நகரங்களில் இருந்து 5 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள கிராமங்களில் கல்வி நிறுவனங்கள் இருப்பது மிகவும் அரிது. தொடர்ந்து கிராமப்புறங்களில் கல்வி உதவிகளைக் குறைவாக வழங்குவது தற்போதைய தலைமுறை வரையில் பாதிக்கிறது. கிராமப்புற மாணவர்கள் சில ஆண்டுகளே பள்ளிகளுக்குச் செல்கின்றனர். மேலும், அவர்கள் செல்லும் பள்ளிகளில் குறைந்த தரத்திலேயே கல்வி வழங்கப்படுகிறது. குறைவான வகுப்பறைகள், ஊக்குவிக்கப்படாத ஆசிரியர்கள், கவனிக்கப்படாத பள்ளிகள் என்ற நிலையிலேயே கிராமப்புறங்களில் கல்வி வசதிகள் உள்ளன.

கல்வி வசதிகளில் மட்டும் கிராமப்புற மக்கள் குறைந்த தரத்திலான சேவைகளைப் பெறுவதில்லை. சுகாதாரம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, குடிநீர் போன்ற முக்கிய தேவைகள் குறைவான தரத்திலேயே வழங்கப்படுகின்றன. தொலைவில் உள்ள கிராமங்களின் நிலை இதைவிட மோசம். வளர்ந்து வரும் பொருளாதாரம், மின்னும் பெருநகரங்கள் என்று எவ்வளவுதான் விளம்பரப்படுத்திக்கொண்டாலும், நாட்டின் உள்பகுதிகள் இன்னும் வெளிச்சமின்றியே காணப்படுகின்றன.

தன்னுடைய நிலை வறுமையில் இருந்தாலும், தங்கள் குழந்தைகளின் நிலை மாற வேண்டும் என்று அனைவரும் நினைப்பதுண்டு. ஆனால், அந்த நம்பிக்கையும் தற்போது கிராமப்புற விவசாயிகளிடம் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. இந்த நம்பிக்கை சரிவடைந்ததும் தற்போது நடக்கும் கிளர்ச்சிகளுக்கான மையக் காரணமாகும். இந்த நம்பிக்கையை மீட்க நகர்ப்புறங்களைப் போலவே கிராமங்களையும் நடத்த வேண்டும். அதுவரையில் இந்த நெருக்கடிகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். மேலும், தன் சொந்த நாடே தன்னைக் கைவிட்ட மனநிலை கிராமப்புற மக்களிடமும் விவசாயிகளிடமும் தோன்றிவிடும். இதை மாற்ற அரசு ஆர்வம்காட்டுமா?

நன்றி: [தி வயர்](https://thewire.in/161544/rural-discontent-household-agriculture/)

தமிழில்: அ.விக்னேஷ்�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *