சிறப்புக் கட்டுரை: இன்றைய போராட்டங்கள் எப்படிப்பட்டவை?

public

வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே நதிநீர் இணைப்பு, காவிரி, முல்லைப் பெரியாறு, நெய்யாறு, கொடுமுடியாறு, பச்சையாறு, அடவிநயினார், அச்சன்கோவில் – பம்பை – வைப்பாறு இணைப்பு, அழகர் அணைத் திட்டம், பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டம், பாண்டியாறு – புன்னம்பழா, சிறுவாணி, பாம்பாறு, அமராவதி, கௌசிகா நதி, அத்திக்கடவு – அவினாசி குடிநீர் திட்டம், தென்பெண்ணையாறு, ஒகேனக்கல், திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதி, பொன்னியாறு, பாலாறு, கிருஷ்ணா நதி குடிநீர் திட்டம், பழவேற்காடு ஏரி, கெடிலம் என அறுபதுக்கும் மேலான நீராதாரப் பிரச்சினைகள். ஊட்டி இந்துஸ்தான் பிலிம் தொழிற்சாலை பிரச்சினை, சேலம் இரும்பாலை தனியாருக்கு விற்பனை, நெய்வேலி என்எல்சி பிரச்சினை, நிலுவையில் உள்ள அகல ரயில் பாதைகள் பிரச்சினை, கடலூர் – நாகை துறைமுகத் திட்டங்கள், 14 மீன்பிடித் துறைமுகங்கள், விமான நிலைய விரிவாக்கங்கள், கம்பம் பள்ளத்தாக்கில் கண்ணகி கோயில் பிரச்சினை, கச்சத்தீவு, சேது கால்வாய்த் திட்டம், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் தளம், கூடங்குளம் பிரச்சினை, குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி தாது மணல் ஆலை பிரச்சினை, திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்திலிருந்து திருநெல்வேலி – கன்னியாகுமரியை மதுரை கோட்டத்துடன் இணைத்தல், ஸ்டெர்லைட் ஆலை அப்புறப்படுத்தல், தேனி நியூட்ரினோ பிரச்சினை, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் பிரச்சினைகள், கொங்கு மண்டலத்தில் கெயில் எரிவாயு குழாய் பதிப்பு, நாமக்கல் பிளாட்டினம் உருக்கு, தமிழகத்தில் மின் கடத்திகளுக்கு மத்திய அரசின் அனுமதி மறுப்பு, 70 ஆண்டுகளாக கோவில்பட்டி, கயத்தாறு, செட்டிநாடு, உளுந்தூர்பேட்டை, சோழவரம் விமான நிலையங்களைப் பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டது, ஈழப் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினைகள், கொங்கு மண்டலத்தில் நெசவாலை பிரச்சினைகள், எய்ம்ஸ் மருத்துவமனை, கூடங்குளம் அணுக்கழிவுகளை எங்கே புதைப்பது, உயர் நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சிமொழி, உச்ச நீதிமன்றக் கிளையைச் சென்னையில் அமைத்தல், அந்தமான் நிகோபார் தீவுகளின் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரத்தை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுதல், இந்தியப் பெருங்கடலில் அந்நியர் ஆதிக்கத்தால் தமிழகத்துக்கு ஏற்படும் கேடுகள் என நீண்ட பட்டியலே உண்டு.

இதுபோன்ற திட்டங்கள் எல்லாம் இன்றைக்குத் தோன்றியதைப் போல நாம் நினைக்க வேண்டாம். இது 20 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய திட்டங்கள். இது குறித்துப் பல வழக்குகளையும் நான் தொடுத்துள்ளேன். இந்தப் பிரச்சினைகள் குறித்துப் பல செய்தித்தாள்களிலும் எழுதியுள்ளேன். இதை நாம் ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டுவிட்டோம். எனவே இது தும்பை விட்டு வாலைப் பிடிக்கின்ற கதை. இப்படிப் பல பிரச்சினைகளுக்கு இன்றைக்குப் பலவிதமான போராட்டங்களை நடத்தினாலும், இவற்றை ஆளவந்தார்கள் பொருட்படுத்தாமல் இருப்பது இன்றைக்கு வாடிக்கையாகிவிட்டது.

1950, 60களில் நடத்திய விதத்தில்தான் நாம் இன்றும் போராட்டங்களை நடத்துகிறோம். இது எந்த விதத்திலும் ஆட்சியாளர்களுடைய சுரணைக்கு எட்டவில்லை. போராட்ட முறைகள் மாற வேண்டும். தமிழகம் குரல் கொடுக்கும் இத்திட்டங்கள் யாவும், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே பத்திரிகைகளில் செய்திகளாகவும் வந்த விஷயங்கள்தான். ஆனால், இன்றைக்கு அது தமிழகத்தில் புகுந்து சீரழிக்கிறது. இது குறித்தான விரிவாகச் செய்திகளையே அறியாமல், சில போலிகள் எதற்குப் போராட்டம் என்றே தெரியாமல் ஆட்களை அழைத்து, ஊடகங்களுக்குத் தீனி போடுவதுதான் இன்றைய நிலைமை. இதை எதிர்த்துப் போராட வேண்டுமென்றால் வலுவான மக்கள் இயக்கமாக மாற வேண்டும். இதில் மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்று 1991இல் எடுக்கப்பட்ட நிலையில்தான் இம்மாதிரியான பன்னாட்டு நிறுவனங்கள் தலைதூக்கிவிட்டன. இதை ஒழிக்க வேண்டுமென்றால் கடுமையான போர்க்குணத்தோடு போராடினால்தான் முடியும்.

மேலே சொன்ன தமிழகத்தின் திட்டங்கள் சிறு பட்டியல்தான். மேலும் இதுபோல 140 பிரச்சினைகள் உள்ளன. இது தமிழகத்தின் எதிர்காலத்துக்குப் பெரும் கேடாக வந்து சேரவிருக்கிறது. போராட்டங்கள் என்பதைப் போர்க் குணத்தோடு, தியாக உணர்வோடு அணுகினால்தான் ஓரளவாவது இந்த ஆட்சியாளர்களை அசைக்க முடியும்.

**ஒப்புக்குப் போராடும் கட்சிகள்**

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, சிபிஎம், சிபிஐ போன்ற கட்சிளைத் தவிர்த்து, தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்த கட்சிகளின் எண்ணிக்கை 154. இந்த 154 கட்சிகளில் 10 கட்சிகள் களப் பணியில் உள்ளன. மற்ற கட்சிகள் எல்லாம் ஏதோ ஒப்புக்குப் போராட்டம் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது.

ஒரு காலத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு உத்தமர் காந்தியார் தலைமையில் போராடிய பொதுவுடைமை இயக்கத்தினர், தலைமறைவு வாழ்க்கை நடத்தித் தங்களின் போராட்டங்களில் பல துயரங்களைச் சந்தித்ததெல்லாம் வரலாறு.

திராவிட இயக்க வரலாற்றில் பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்கள் நடத்திய போராட்டங்கள், சிறைவாசம் என அவர்கள் நடத்திய போராட்டங்களைத்தான் இன்றைக்கு நாமும் நடத்துகிறோம். அன்றைக்கு அவை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. இந்தி எதிர்ப்புப் போராட்டம், ஈழத்தமிழர் பிரச்சினை என்பதெல்லாம் நேர்மையான நோக்கில் சென்றதால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

ஆனால், இன்றைக்கோ இந்தப் போராட்டங்களை எல்லாம் பார்த்தாகிவிட்ட நிலையில் ஆட்சியாளர்கள் இதை அலட்சியமாகவே கையாள்கிறார்கள்.

**போராட்டங்களும் அவற்றின் தாக்கங்களும்**

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற போராட்டங்களால் தீர்வு காணப்பட்ட மக்கள் பிரச்சினைகள் எவ்வளவு?

போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்த பொறுப்பாளர்களின் புலம்பல்களை யாரேனும் கேட்டதுண்டா?

விவசாயிகள் நாராயணசாமி நாயுடு தலைமையில் போராடி, 48 விவசாயிகள் 1992 வரை காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளனர். கடந்த எட்டாண்டுகளில் விவசாயிகளுடைய தற்கொலை தமிழகத்தில் மட்டும் 180க்கும் மேலாகிவிட்டது. இப்படியெல்லாம் உயிரை மாய்த்தும், ஆட்சியாளர்கள் திருந்தவில்லை.

இந்தியாவில் அவசரநிலைக் காலத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயண், நானாஜி தேஷ்முக், மொரார்ஜி தேசாய், வாஜ்பாய், அத்வானி போன்ற பல தலைவர்கள் போராட்டங்களை நடத்தினர். நேர்மையான அரசியலுக்காக வி.பி.சிங் நடத்திய போராட்டங்களை எல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

போராட்டம் என்பது ஒப்புக்கு நடப்பதல்ல. மக்களின் நலன்களைப் பேணிக் காக்க உரிமைக் குரல் எழுப்புவுதுதான் போராட்டக் களம். போராட்டங்கள் ஒருசில நாள்களில் கூடிக் கலைவதும் அல்ல. எனவே, இதய சுத்தியோடு போராட்டங்களை முன்னெடுத்து ஆரோக்கியமான தளத்தை அமைத்து மக்கள் இயக்கமாக மாறினால்தான் அகந்தையில் உள்ள ஆட்சியாளர்களைத் திருத்த முடியும். இப்படித்தான் பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி, தொழிற் புரட்சி, ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி இயக்கம், தேவாலயங்களின் நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்திருத்தங்கள், அமெரிக்கச் சுதந்திரப் போர், இந்திய விடுதலைப் போர் ஆகியவை மக்கள் இயக்கங்களாக மாறின. இந்தப் போராட்டங்களால் மக்கள் தங்களுடைய உரிமைகளை மீட்டனர்.

**போராட்டம் என்னும் வலிமையான ஆயுதம்**

போராட்டம் என்பது வெள்ளித்திரையில் நடிப்பது போல அல்ல; அதற்கு நேர்மையான அணுகுமுறை வேண்டும். ஆசைகாட்டி, வெறும் ஆட்களைத் திரட்டி தங்களுடைய சுயபுகழுக்காக நடத்தும் போராட்டங்கள் யாவும் ஒப்பனைகளாகக் கலைந்துவிடும்.

இந்தப் போராட்டக் களம் மதம், சாதி, ஆள்பலம் என்பதையெல்லாம் தாண்டி, மனிதநேயம் என்பதாக ஒரு பிரச்சினையை அணுகும் போராட்டம் வரலாற்றில் இடம்பெறும்.

போராட்டங்களால் மக்களிடம் ஏற்படும் தாக்கங்களை நம்மால் கணிக்க முடியாது. போராட்டம் இருமுனைக் கத்தியாக சில நேரங்களில் அமைந்துவிடும். அது போராடுபவர்களுக்கு எதிராகவும் போகலாம். இன்றைய போராட்டங்கள் பெரிதுபடுத்தப்படுவதற்கு அடிப்படைக் காரணம் ஊடகங்கள். இதில் சில கேடிகளும் நுழைந்து தங்களையும் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். ஊடகங்களிலும் செய்தித்தாள்களிலும் தங்களுடைய இருப்புகளை வெளிக்காட்டிக் கொள்ள ஒருசிலர் போலியான, பாவனையான போராட்டங்களை நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. வெகுஜனப் போராட்டங்கள் யாவும் கொள்கை லட்சிய வடிவில்தான் வெற்றி பெறும்.

முன்பு போராட்டங்கள் என்றால் இயற்கையாக மக்களிடையே பெரும் தாக்கமும் உந்துதலும் ஏற்படும். இப்போது ஒருசிலர் நடத்தும் போராட்டங்கள் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

போராட்ட யுக்திகளையும், போர்க் குணத்தையும் இன்றைய நடைமுறைச் சூழலுக்கேற்ப மாற்ற வேண்டும். அரசியல் ஆதாயம், சுய புகழ், தன்னிலையை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகப் போராட்டம் நடத்தும் சிலரை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

மக்களால் மக்களுக்காக மக்களே நடத்துவதுதான் போராட்டத்தின் இலக்கணமாகும். அப்படிப்பட்ட போராட்டங்கள் என்றும் தோற்றதில்லை.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் திமுக செய்தித் தொடர்பாளர், கதைசொல்லி இதழின் இணையாசிரியர், பொதிகை – பொருநை கரிசல் பதிப்பகத்தின் நிறுவனர். இவரைத் தொடர்புகொள்ள: [rrkurunchi@gmail.com](mailto:rkkurunji@gmail.com)�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *