கச்சத்தீவு: 50 பேருக்கு மட்டும் அனுமதி – மீனவர்கள் எதிர்ப்பு!

public

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் தமிழக பக்தர்கள் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள இலங்கை அனுமதி வழங்கியுள்ள நிலையில் மீனவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஒவ்வோர் ஆண்டும் கச்சத்தீவில் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெறும். அதற்கு, தமிழக மீனவர்களும் கலந்துகொள்ளத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து வருகிறது. அதேபோல இந்த வருடம், வருகிற மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் திருவிழா நடைபெறும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டு மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி இல்லை முதலில் அறிவித்தது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், “ஒவ்வொரு வருடமும் கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியர் ஆலயத் திருவிழாவுக்குத் தமிழ்நாட்டு மீனவர்கள் கலந்துகொள்ள, தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. ஆனால் இந்த வருடம் பல காரணங்களை முன்வைத்து இலங்கை அரசு தமிழ்நாட்டு மீனவர்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ளது.
இதனால் தமிழ்நாட்டின் மீனவ பக்தர்கள் பெரும் வருத்தமடைந்துள்ளனர். எனவே, இனிவரும் ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாட்டின் மீனவர்கள் தடையின்றி கலந்துகொள்வதை உறுதிசெய்ய இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இது இரு நாட்டு மக்களுக்கிடையே நல்லுறவை வளர்க்க உதவி செய்யும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் தமிழகத்தில் இருந்து 50 பேர் மட்டும் கலந்து கொள்ளலாம் என இலங்கை அரசு அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் எஸ்.பி.ராயப்பன், “கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் தமிழக பக்தர்கள் எந்தவித அனுமதியும் ஆவணமும் இல்லாமல் கலந்து கொள்ளலாம் என கச்சத்தீவு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளது. அப்படி இருக்கையில் குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள்தான் கலந்து கொள்ள வேண்டும் என இலங்கை அரசு தெரிவிப்பது ஏற்புடையதல்ல.
குறைந்தபட்சம் 200 பேராவது தமிழகத்திலிருந்து இந்த ஆண்டு கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் கலந்து கொள்ள மத்திய-மாநில அரசுகள் அனுமதி வழங்கி, அங்கு சென்று வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

**-ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *