உயிரைக் கொடுத்து உரிமை மீட்ட உகண்டா தாய்க்குலம் – மோஸஸ் முலும்பா,

public

பனிக்குடம் உடைந்து வலியால் துடித்துக் கொண்டிருந்த சில்வியா நலுபோவா, உள்ளூர் சுகாதார மையத்திற்கு அவசர அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார். பயப்பட ஒன்றுமில்லை, சுகப்பிரசவம்தான்.. ஆனால் பிரசவம் பார்த்த செவிலியருக்கு குழந்தை வெளியே வந்த பிறகுதான் உள்ளே இன்னொரு குழந்தை இருப்பதே தெரிய வருகிறது.

பதறிப்போன செவிலி, அவரை மாவட்ட மருத்துவமனைக்கு செல்லுமாறு கூற, கர்பப்பையில் சுழன்று கொண்டிருக்கும் குழந்தையை பிரசவிக்க முடியாத தவிப்புடன் இருக்கும் அவர், மத்திய உகாண்டாவில் உள்ள மிட்யானா மாவட்ட மருத்துவனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். அங்கிருந்த செவிலியர்கள் மமா கிட்’டைக் கொடு என்கின்றனர். பிளாஸ்டிக் விரிப்பு, சவர பிளேடு, பஞ்சு, கையுறை என்று பிரசவம் பார்க்கத் தேவையான உபகரணங்கள் அடங்கியதுதான் மமா கிட். உகாண்டா நாட்டின் மருத்துவமனைகளையும் கிளினிக்குகளையும் பொறுத்த வரை பிரசவ அறைக்கு வரும் கர்ப்பிணியின் உடலில் உயிர் இருக்கிறதோ இல்லையோ, கையில் கண்டிப்பாக மமா கிட்டை வைத்திருக்க வேண்டும்.

ஆனால், உள்ளூர் சுகாதார நிலையத்தில் குழந்தை பிறந்து விட்டதால் என்னிடம் இருந்த மமா கிட்டை அங்கு கொடுத்து விட்டேன். இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. என்று சில்வியா சொன்ன காரணங்கள் எதையும் செவிலியர்கள் கேட்கவில்லை. எங்களுக்கு தேவை மமா கிட் . அது இல்லையென்றால் மமா கிட்டை வாங்குவதற்கான பணத்தைக் கொடு என்று சில்வியாவிடம் செவிலியர்கள் பேரம் பேசிக் கொண்டிருக்க, அதை உணர முடியாத நிலையில் இருந்த சில்வியாவும் இன்னும் பூமிக்கு வராத அவரது குழந்தையும் எப்போதோ இறந்து விட்டன. இது நடந்தது 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்.

பிரசவ வலியில் 12 மணி நேரம் துடிதுடித்த போதும் எந்த மருத்துவ அதிகாரிகளும் வராமல் 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறந்த ஜெனிபர் அங்குக்கோவின் மரணமும் இப்படிப்பட்டதுதான். இவர்களது மரணத்திற்கு காரணமான உகாண்டாவின் சுகாதாரத்தின் நிலை குறித்து அறிந்து கொள்வது நல்லது. 2013-ம் ஆண்டு உலக சுகாதார முகமை வெளியிட்ட தரவின்படி, அலட்சியத்தின் காரணமாக அங்கு ஒரு நாளைக்கு 16 கர்ப்பிணிகள் இறந்து போகிறார்கள். 25 ஆயிரம் நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்ற அளவில்தான் அங்கு மருத்துவர்-நோயாளி விகிதம் இருந்தது.

இந்நிலையில், சுகாதார, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி மையம் என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், கடந்த 2011-ம் ஆண்டு இந்த இருவரின் மரணத்திற்கான காரணம் குறித்த ஆதாரங்களை சிரமப்பட்டு சேகரித்து, அரசியலமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். ஆனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.பெரும் முயற்சிகளுக்குப் பின்னர் அவர்கள் உகாண்டாவின் உச்ச நீதைமன்றத்தை அணுகினர். நீண்ட காலமாக நடைபெற்று வந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கைகளை ஏழு நீதிபதிகளும்(அக்டோபர்-2015), ஏற்றுக்கொண்டனர்.இந்த வழக்கில் நீதிபதிகளின் தீர்ப்பு, உகாண்டா மக்களுக்கு அவர்களது சமூக பொருளாதார உரிமைகள் குறித்து உணர வைத்தது. மேலும் சுகாதார சேவைகளுக்காகச் செலவு செய்யப்படும் தொகை 215 அமெரிக்க டாலரிலிருந்து (14 ஆயிரம் ரூபாய்) 328 மில்லியன் டாலர்களாக உயர்ந்தது (2 ஆயிரத்து 238 கோடி) இதனால் கூடுதல் சுகாதார அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இதெல்லாமே மாறிய போதும், இப்போதும் பிரசவ வார்டுக்குள் மாமா கிட் இருந்தால்தான் நுழைய முடியும்.

இருப்பினும், அரசின் நடவடிக்கைகளால் 2011-ம் ஆண்டு லட்சத்திற்கு 440 ஆக இருந்த பிரசவ கால மரணங்கள் 2015ம் ஆண்டு லட்சத்திற்கு 343 ஆக குறைந்திருக்கிறது.இதெல்லாவற்றையும் விட முக்கியமானது என்னவென்றால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிவில் சமூக இயக்கங்கள் பெண்களின் சுகாதார உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையாளர் மோஸஸ் முலும்பா, நிர்வாக இயக்குனர், சுகாதாரம், மனித உரிமைகள், மேம்பாட்டுக்கான மையம் மற்றும் விரிவுரையாளர், உகண்டா கிறித்துவ பல்கலைக்கழகம்

http://theconversation.com/how-the-death-of-two-ugandan-mothers-is-helping-entrench-the-right-to-health-care-54703

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *