அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனு படிவத்தில் பன்னீர்செல்வம், பழனிசாமி இருவரும் கையெழுத்திடுவதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் கே.சி.பழனிசாமி தரப்பிலிருந்து கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவி உருவாக்கப்பட்டு கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி அண்மையில் தாக்கல் செய்த மனுவில், “அதிமுக விதிகளின்படி, கட்சி சார்பில் போட்டியிடுபவர்களுக்கு வேட்புமனுவின் ஏ, பி படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மட்டுமே உள்ளது. ஆகவே வேட்புமனுவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட தடை விதிக்க வேண்டும். அவர்கள் கையெழுத்திடும் வேட்பு மனு ஏ மற்றும் பி படிவங்களை நிராகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் ” என்று வலியுறுத்தி இருந்தார்.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கே.சி.பழனிசாமி தரப்பிலிருந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று முறையிடப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி யோகேஷ் கண்ணா இந்த வழக்கின் விசாரணை வரும் 28ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் வேட்பு மனுவில் கையெழுத்திடுவது தொடர்பான வழக்கை 25ஆம் தேதியே விசாரிக்க வேண்டுமென கே.சி.பழனிசாமி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 26ஆம் தேதியே வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து, 27ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்பதால் முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு கே.சி.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் சென்று முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதனை அவரே உறுதிப்படுத்தியிருந்த நிலையில், இந்த விவகாரம் சர்ச்சையானது. ஆனால் கோரிக்கைக்காகத்தான் கே.சி.பழனிசாமி தங்களை சந்தித்தார் என்றும் அதிமுகவில் அவர் இணைக்கப்படவில்லை என்றும் முதல்வர் விளக்கமளித்தார். இந்த நிலையில் மீண்டும் அதிமுகவுக்கு எதிராக திரும்பியுள்ளார் கே.சி.பழனிசாமி.�,