�விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டும் அமைச்சர்: குற்றம்சாட்டும் அய்யாக்கண்ணு

Published On:

| By Balaji

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கூட்டுறவு மற்றும் பொதுத் துறை வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற 5 சவரன் வரையிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்திருந்த அமைச்சர் செல்லூர் ராஜு, “நகைக் கடன்களை தற்போது தள்ளுபடி செய்ய வாய்ப்பில்லை. நகைக் கடன்களை மக்கள் கட்டியே ஆக வேண்டும்” என்று பதிலளித்தார். இந்த நிலையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டுவதாக குற்றம் சாட்டியிருக்கிறார் அய்யாக்கண்ணு.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று (ஜூன் 14) திருச்சியில் கூடியது. அதில் மாநில நிர்வாகிகள் உட்பட சுமார் 150 பேர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய அய்யாக்கண்ணு, “தமிழக கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்யமாட்டோம் என்று பேசி விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டிவருகிறார் அமைச்சர் செல்லூர் ராஜு. அதனால் அவர் மீது முதல்வரிடம் புகார் கொடுக்கவுள்ளோம்” என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக நாம் அய்யாக்கண்ணுவை தொடர்புகொண்டு பேசினோம். வரலாறு காணாத வறட்சியை கண்டுள்ளது தமிழகம். விவசாயிகள் விவசாயத்திற்கு பெற்ற கடனையும் வட்டியும் திரும்பச் செலுத்த முடியாமல் போராடிவருகிறார்கள். விவசாயிகளின் கஷ்டங்களை நேரடியாக பார்த்துவரும் அமைச்சர் செல்லூர் ராஜு கண்களை மூடிக்கொண்டு விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்யமுடியாது என்று பேசியுள்ளது மிகவும் வேதனையாக உள்ளது. அமைச்சர் பேச்சு விவசாயிகளைத் தற்கொலைக்கு தூண்டும் வகையில் உள்ளது. அடுத்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக சந்தித்து விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்யச் சொல்லி கோரிக்கை வைக்கப்போகிறோம்” என்றார்.

**அவருடனான மற்ற உரையாடலை கேள்வி-பதில் வடிவத்தில் காண்போம்**

**தேர்தலுக்கு முன்பு பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசினீர்கள். அப்போது விவசாயிகளுக்கு அவர் என்ன உத்தரவாதம் கொடுத்தார்?**

“பாஜகவிடமும், காங்கிரஸிடமும் ஏழு கோரிக்கைகளை வைத்தோம். அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகள் கடன் தள்ளுபடி என்ற கோரிக்கையை மட்டும் ஏற்றுக்கொள்வதாக உத்தரவாதம் கொடுத்தார். ஆனால் பாஜக தலைவர் அமித் ஷா ஏழு கோரிக்கைகளில் விவசாயிகள் கடன் தள்ளுபடி என்ற கோரிக்கையைத் தவிர்த்து மற்ற ஆறு கோரிக்கையும் ஏற்றுக்கொண்டார்”

**அந்த ஆறு கோரிக்கைகளும் என்ன?**

“தேசிய நதிகள் இணைப்பு, விவசாய பொருள்களுக்கு லாபகரமான விலை, தனிநபர் காப்பீட்டுத் திட்டம், வெளிநாடுகளிலிருந்து மரபணு மாற்றப்பட்ட விதைகளை இறக்குமதி செய்யக்கூடாது, 6) 60 வயது முடிந்த விவசாயிகளுக்கு ஓய்வு ஊதியம் வழங்கவேண்டும், விவசாயிகளுக்கு வருடந்தோறும் கொடுக்கக்கூடிய ரூ 6 ஆயிரம் நிவாரணத்தை சிறு, குறு விவசாயிகள் என்ற பாகுபாடுகள் இல்லாமல் வழங்கவேண்டும் என்பதுதான்.”

**அவற்றை நிறைவேற்றுகிறார்களா?**

“முக்கிய கோரிக்கையான தேசிய நதிகளை இணைப்பது குறித்து சொல்லியிருக்கிறார்கள். அதற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணிக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்”

**புதிதாக வைக்கவுள்ள கோரிக்கை என்ன?**

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து, கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கேட்கப் போகிறோம்.

**சர்க்கரை ஆலைகள் பிரச்சினைகள் குறித்து கூறுங்களேன்?**

“தமிழகத்தில் 14 லட்சம் டன் கரும்புக்கு ரூ. 420 கோடியை பாக்கியாக வைத்துள்ளன கரும்பு ஆலைகள். அதைப் பெற்றுக்கொடுக்க தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனியார் ஆலை நிர்வாகம், விவசாயிகள் பெயரில் 300 கோடி கடன் பெற்று கொள்ளையடித்துவிட்டு விவசாயிகள் தலையில் வைத்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் ஸ்டாலின் என்ற விவசாயி பெயரில் தனியார் ஆலை நிர்வாகம் ரூ.15 லட்சம் கடன் பெற்றது வட்டியுடன் ரூ.22 லட்சமாக அதிகரித்துள்ளது. அதனை கட்டச் சொல்லி அவருக்கு வங்கி நிர்வாகம் நெருக்கடி கொடுத்துவருகிறது. இதுசம்பந்தமாக காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டும், ஆலை உரிமையாளரை கைது செய்யாமல் காவல் துறைக்கு தடைபோட்டுவருகிறது ஆளுங்கட்சி” என்று குற்றம்சாட்டினார்.

ஆக மீண்டுமொரு போராட்டத்தை கையிலெடுக்கவுள்ளார் அய்யாக்கண்ணு.

**எம்.பி.காசி**

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**

**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**

**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share